உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 1
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 1 · 1 / 57

★

(குகை உட்புறம் அரூபம் ஒரு சிலையை செதுக்கிக்கொண்டிருக்கிறது அதன் எதிரே புன்னகையுடன்.)

பெரியவர் : வெற்றி...வேதனையைப் பொருட்படுத்தாதவனுக்குக் கிடைத்த வெகுமானம்!... அநேக வருஷங்களாக பட்ட பாட்டிற்கு சரியான அறுவடை! இனி நினைத்ததை யெல்லாம் செய்து முடிப்பேன்...கேசரி வர்மா! கவலைகள் படிந்த உன் கண்களிலே களிப்பு பொங்கட்டும். துயர மேகங்கள் உன்னை விட்டுத் தூர ஓடட்டும். தொல்லைகள், இனி நமக்குத் தூசுகள்...... ஹா... ஹா... ஹா... வெற்றி; வெற்றி;

கேசரி வர்மன் குரல்மட்டும் கேட்கிறது. சிற்றுளியும் சுத்தியும் தங்கள் வேலையை நடத்திக்கொண்டே யிருக்கின்றன.

கேசரி வர்மன் : குருதேவா! உண்மைதானா? நான் தெரியவில்லையா உங்கள் கண்களுக்கு!......

பெரி : ஆமாம் கேசரி வர்மா! அரூபமாகிவிட்டாய். கண்டு பிடித்த மருந்து வேலை செய்யத் துவங்கிவிட்டது. கிடைக்காதது கிடைத்துவிட்டது. என் ஆராய்ச்சிக்கு அமோக வெற்றி. எல்லோரையும் நீ பார்க்கலாம். ஆனால் உன்னை யாரும் பார்க்க முடியாது.

கேசரி : குருதேவா!...பதின்மூன்று வருடங்கள்...பதறிக் கிடந்தேன் அந்தப் பாவியைப் பழிவாங்க வேண்டுமென்று! பாதை வகுத்துக் கொடுத்து

விட்டபோது! ......சுவாமி! அரூபம் அதிக நாள் இருக்காதா?......

பெரி : இருக்காது - ஆனால் இன்னும் முயன்று பார்க்கலாம். நான் தேடும் மூலிகைகள் கிடைத்துவிட்டால் அரூபமாக மட்டுமல்ல, அழியாமலே கூட இருக்கலாம். ஆனால் கேசரிவர்மா! நல்லவர் வாழ இதைப் பயன்படுத்து!

கேசரி : நல்லவர் வாழப் பயன்படுத்துவேன்! அதே சமயத்தில் இந்த நாசகாரியின் நரி வேலைகளை அம்பலமாக்குவேன். பாவி! பழிகாரி................... கணவனுக்கு விஷங் கொடுத்த பத்திரகாளி! உன் விஷத்தால் செத்துவிடவில்லையடி. கேசரி வர்மன்! இருக்கிறான் உயிரோடு! சாகவில்லை - சாகமாட்டான், உன் சதியை வெளிப்படுத்தாமல்! வஞ்சகி!.....வாய் ஜாலக்காரி!

பெரிய : ஹ ஹ ஹ............

கேசரி : குருஜி.

பெரி : சிலையப்பா அது!

கேசரி : சிலைதான்! ஏன் செதுக்குகிறேன் இவளை! சித்திரவதை செய்வதற்கு ஒத்திகை பார்க்க; வசந்த சேனை! உன் விழியில் வேல் சொருகுவேன் - கூந்தலுக்கு தீ மூட்டுவேன் - கொவ்வை உதடுகள்!... அவைகளில் கூரிய ஊசிகளைக் குத்துவேன்..... கண்ணாடிக் கன்னம்! ஹா ஹா ஹா... கட்டாரியால் கிழிப்பேன்... காண்பவர் வெறி கொள்ளும் மேனி...கண்டம் கண்டமாக வெட்டி எறிவேன்! ஆரம்பமாகிவிட்டதடி, அரூபத்தின் அற்புத வேலைகள்!... மாயக்காரி, தொடங்கிவிட்டதடி உன் மாஜி கணவனின் பழிவாங்கும் படலம். நடமாடும் பாம்பே!... நாசத்தின் நர்த்தனமே! நயவஞ்சகப் பிசாசே... அரிக்கும் சிலந்தியே.........