உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

உமாமகேஸ்வரனார்

பகுதி 1 · 1 / 1

உமாமகேஸ்வரனார்

இராஜராஜனுடைய நினைவாக இராஜராஜேசுவரம் என்ற பெரிய கோயில் நிலைத்திருப்பதுபோல, உமாமகேசுவரனாரின் நினைவாக அவர் நிறுவிய உமாமகேசுவரம் என்னும் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிலைத்துள்ளது.

தஞ்சை என்றாலே இராஜராஜ சோழனுடைய நினைவு எப்படி வருமோ - அதேபோலக் கரந்தை என்றால், மறைந்த தமிழவேள் உமாமகேசுவரனாரின் நினைவு வராமல் போகாது. அப்படிப்பட்ட தமிழ்ப் பெரியாராகிய உமாமகேசுவரனாரின் சிலையினை தமிழ்ச் சங்கத்தினுடைய மணிவிழாக் கொண்டாடுகிற நேரத்தில் திறந்து வைப்பதென்பது, காலம் கடந்தாவது அந்தப் பெரியாருக்குத் தமிழ் மக்கள் தங்களுடைய நன்றியைத் தவறாது தெரிவிக்கிறார்கள் என்பதற்கொரு சான்றாகும்.

தமிழனுடைய பெருமையையும், வலிமையையும், தொன்மையையும் நாட்டு மக்கள் மறந்திருக்கிற நேரத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே தஞ்சைத் தரணியில், இந்தக் கரந்திட்டைக்குடிப் பகுதியில், தமிழுணர்வு படைத்த சில இளைஞர்கள் கூடித் தமிழ் இன உணர்ச்சியை வளர்ப்பதற்கும், தமிழ் மொழியினுடைய தனித்தன்மையைத் காப்பாற்றுவதற்கும் எடுத்துக் கொண்ட முயற்சியினுடைய தொடர்ச்சியாக முப்பதாண்டுக்காலம் இந்தச் சங்கத்தைக் கட்டிக் காக்கின்ற பெரும் பொறுப்பை இன்று சிலையாக நிற்கின்ற தமிழவேள் உமாமகேசுவரனார் பெற்றிருந்தார்.

தமிழிலே மேடைகளில் பேசுவதும், எழுதுவதும், உலகச் செய்திகளைப்பற்றித் தமிழ் மொழியிலே அறிவிப்பதும் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடியவை; நாகரீக உலகத்திற்கு ஒவ்வாதவை; பிற மொழியில், அதிலும் குறிப்பாக ஆங்கிலத்தில், இந்தச் செய்திகளை எடுத்துரைப்பதும், மேடைகளிலே பேசுவதுமே பொருத்தமுடையது; மேன்மையானது, அதுதான் கௌரவமிக்கது என்று கருதியிருந்த நேரத்தில்தான் - கரந்தைத் தமிழ்க் கல்லூரியினால் பெரியதோர் புரட்சியினை மறைந்த தமிழவேள் உமாமகேசுவரனார் நடத்திக் காட்டினார்.

ஆங்கிலத்தினுடைய ஆதிக்கம் மாத்திரமல்ல; தமிழ் மொழியினுடைய வளர்ச்சிக்கு தமிழ்மொழியைத் தமிழர்கள் போற்றாமல் விட்டுவிடுவாரோ என்கின்ற ஐயம் ஏற்படுகிற விதத்தில் வடமொழிக் கலப்பும், தமிழன் தமிழிலேயே பேச நாணுகின்றான் என்கின்ற நிலையும் ஏற்படுவதை மறைந்த உமாமகேசுவரனார் எண்ணிப் பார்த்தார்.

தமிழ்ச் சங்கத்தினுடைய இளைஞர்கள் முதன் முதலாகத் தமிழுக்குப் பெருமை சேர்த்த முறையே பாராட்டுக்குரியதாகும். மதிப்பிற்குரிய ஒருவரை அவருடைய மரியாதையைச் சுட்டிக் காட்டும் வகையிலே அழைக்க ‘ஸ்ரீமான்’ என்று குறிப்பிடும் வடமொழிச் சொல்லுக்குப் பதிலாக ‘திருவாளர்’ என்ற தமிழ்ச் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்திய பெருமை கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும், தமிழவேள் உமாமகேசுவரனாருக்கும் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

தமிழ் உணர்வு தமிழகத்திலே ஏற்படத் தொடங்கிய பிறகு எத்தனையோ வழக்குக்கு நம்மை அடிமை கொண்டுவிட்ட வடமொழிச் சொற்களெல்லாம் தமிழாக்கப்பட்டிருக்கின்றன.

இதே மேடை ஒரு பதினைந்தாண்டுக் காலத்திற்கு முன்னால் அமைந்திருந்தால் - இந்த மேடையிலே சில

பேர் பேசத் தொடங்கினால் - விழாத் தலைவரென்றோ அவைத் தலைவரென்றோ அழைத்திருக்க மாட்டார்கள்! “கனம் அக்கிராசனாதிபதி அவர்களே!” என்றுதான் அழைத்திருப்பார்கள்.

அக்கிராசனாதிபதி என்ற நாவினால் இன்றைக்கு அவைத் தலைவர் அவர்களே என்கின்ற தமிழ் உணர்வை நாம் பெற்றிருக்கிறோமென்றால் அதற்கு உமாமகேசுவரனார் போன்றவர்களினுடைய உழைப்புத்தான் காரணம் என்பதை யாரும் நினைவு கூராமல் இருக்க முடியாது.

நமஸ்காரம் இன்று வணக்கமாய் மாறியிருக்கிறது. இதே வணக்கம் ஒரு பத்துப் பதினைந்து ஆண்டு காலத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்டிருக்குமேயானால், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கருதி அவர்கள் மீது பயங்கரமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட காலமெல்லாம் இருந்தது.

ஆனால், இன்றைக்கு வணக்கம் என்று சொல்லுவது வழக்கத்திற்கு வந்துவிட்ட ஒரு சொல்லாக ஆகிவிட்டதை நாம் காண்கிறோம்.

இந்த சிலருடைய உருவச் சிலைகளைத் திறக்கிறோம் என்றால், அந்தச் சிலைகளுக்கு உரியவர்கள் இந்த நாட்டிலே எந்தத் தொண்டினை ஆற்றினார்கள்? எதற்காகப் பாடுபட்டார்கள்? எவ்வளவு தன்னலமற்றுத் திகழ்ந்தார்கள்? இவற்றையெல்லாம் இப்படிப்பட்ட விழாக்களில் நாம் நினைவிலே பதியவைத்துக் கொள்ள வேண்டும்.

உமாமகேசுவரனார், தன்னுடைய காலமெல்லாம் இந்தத் தமிழ்ச்சங்கம் வளர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்.

அவர் மறைந்ததுகூட எப்படி? அவர் கல்கத்தா சென்றிருந்தார். அங்கே சாந்தி நிகேதன் போன்ற நிறுவனங்களெல்லாம் எப்படி நடைபெறுகின்றன என்பதை அறிந்து, அதன் பிறகு அங்கிருந்து காசி

பல்கலைக் கழகம் வரையிலே சென்று, அங்கே அந்தப் பல்கலைக் கழகமெல்லாம் எப்படி நடைபெறுகிறது என்பதை அறிந்து; கண்ட கருத்துக்களைக் கொண்ட எண்ணங்களையெல்லாம் இங்கே கொண்டுவந்து குவித்துக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வளர்க்க வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்றார்.

கல்கத்தாவிலிருந்து காசி பல்கலைக் கழகத்திற்குச் செல்கின்ற வழியிலேயே அவருக்கு கடுமையான காய்ச்சல் கண்டு மறைந்தார்.

அவர் கடமையாற்றுகிற நேரத்திலே, அதிலும் தமிழுக்காகக் கடமையாற்றிய நேரத்திலே தன்னுடைய உயிரைத் தமிழுக்காக ஒப்படைத்தார்.

அந்தத் திருமகனுடைய சிலையைத் தஞ்சைத் தரணியிலே, கரந்தைப் பகுதியில், இன்று நாம் திறந்து வைத்திருக்கிறோமென்றால் அது நம் அனைவருக்கும் பெருமை தருகின்ற செய்தியாகும்.

இந்த நல்ல நாளில் அந்தச் சிலைக்கு முன்னால் நின்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூளுரை -

“நாம் தமிழ் உணர்வோடு வாழ்வோம்; தமிழா என்கிற உணர்வோடு வாழ்வோம்; தமிழன் யாரையும் தாழ்த்தமாட்டான்; தமிழன் யாருக்கும் தாழமாட்டான்!”

என்கிற அந்தச் சூளுரையை உள்ளத்திலே பதிய வைத்துக் கொண்டு -

தமிழ் வாழ்க தமிழினம் வாழ, நம்முடைய தமிழ்த் தாயகம் செழிக்க அனைவரும் பாடுபடவேண்டும், பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1973-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13-ஆம் நாள் கரந்தை உமாமகேசுவரனார் சிலை திறப்பு விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000