உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சுதந்திரப் பொன்விழா - தமிழகத் தியாகிகள் வழியனுப்பு விழா

பகுதி 1 · 1 / 1

சுதந்திரப் பொன்விழா-

தமிழகத் தியாகிகள்

வழியனுப்பு விழா

இந்த விழாவிற்கு இன்று வருகை தந்திருக்கும் தியாகிகளுக்கெல்லாம் முதற்கண் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி தெரிவிப்பது இன்று நீங்கள் வருகை தந்ததற்காக அல்ல; இந்த நாடு மீட்கும் போராட்டத்திலே ஈடுபட்டு விடுதலைக் கொடியை ஏற்றி வைத்ததற்காக! டெல்லியில் நடைபெறுகின்ற சுதந்திர பொன் விழா நிகழ்ச்சியிலே 14-ஆம் தேதி கலந்து கொள்ள இன்றிரவு பயணப்படுகின்ற உங்களையெல்லாம் வழி அனுப்பி வைக்கின்ற வைபவம்தான் இந்த மண்டபத்திலே இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தியாகிகளை வணங்கி, வாழ்த்தி, பாராட்டி, போற்றி, புகழ்ந்து அவர்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதிலும் ஈடுபாடு கொண்டு நடைபெறுகின்ற அரசாக இந்த அரசு விளங்குகிறது என்பதை நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள்.

இந்திய நாட்டு விடுதலைப் போராட்டத்திலே பங்கு பெறுகின்ற வாய்ப்பு வயதின் காரணமாக எனக்கு ஏற்படவில்லை என்றாலுங்கூட, அந்தப் போராட்டத்தில்

ஈடுபட்ட தியாக சீலர்களையெல்லாம் பாராட்டுகின்ற- அவர்களுக்காகப் பாடுபடுகின்ற ஒரு வாய்ப்பு ஆளுகின்ற பொறுப்பிலே இருந்து எனக்குக் கிடைத்திருப்பது நான் பெற்ற பேறு என்றே சொல்ல வேண்டும்.

பொன்விழாவையொட்டி மாத்திரம் நடைபெறுகின்ற நிகழ்ச்சி அல்ல; இங்கே எனக்கு முன் பேசியவர்கள் குறிப்பிட்டதைப் போல, சுதந்திரத்தினுடைய வெள்ளிவிழா நடைபெற்ற அதே நேரத்திலும் நான்தான் முதலமைச்சராக இருக்கின்ற வாய்ப்பு பெற்றிருந்தேன். அப்போது தந்தை பெரியார் அவர்களுக்கும், மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கும் மற்றும் பல தியாகத் தலைவர்களுக்கும் தாமிரப் பத்திர விருதை வழங்குகின்ற அந்த அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அது மாத்திரமல்ல; அப்போதும் டெல்லிப் பட்டணத்திற்கு சென்ற தியாகி களையெல்லாம் வழியனுப்பி வைக்கின்ற அந்தப் பணியும் எனக்குக் கிட்டியது.

வெள்ளி விழாக்களிலே மாத்திரமல்ல; பொன் விழாக்களிலே மாத்திரமல்ல; எப்பொழுதுமே நாட்டுத் தியாகிகளிடத்தில், நாட்டிற்காக, மொழிக்காக தியாகம் புரிந்தவர்களிடத்தில் நான் அல்லது நான் தலைமை ஏற்றிருக்கிற அரசு பெருமதிப்பு கொண்டுள்ளது என்பதை நீங்கள் எல்லாம் நன்கறிவீர்கள்.

இதோ மண்டபத்தில் 73 அல்லது 74-ஆம் ஆண்டு என்று எனக்கு நினைவு! கோமதி சங்கர தீட்சிதர் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி அவருடைய பிறந்தநாள் விழாவை அரசின் சார்பில் கொண்டாடி, அந்த விழாவிற்கு நான் தலைமையேற்ற நிகழ்ச்சியெல்லாம் இன்றைக்கும் என் மனக்கண் முன்னால் நிழலாடிக்

கொண்டிருக்கின்றது. செங்கல்வராயன் அவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள்; பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு உற்ற நண்பர்; இனிய நண்பர்; உண்மை நண்பர்; அவர்களுடைய பவள விழாவிற்காக ராஜேஸ்வரி மண்டபத்திலே நான் முன்னின்று நடத்திய நிகழ்ச்சியும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கின்றது.

இந்தியா சுதந்திரம் பெற்ற - அதற்காக நடைபெற்ற போராட்டத்திலே ஈடுபட்ட சிதம்பரனார் அவர்கள் சிறையிலே இழுத்த செக்கு எங்கே இருக்கிறது என்பதை நான் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகே தேடிப்பிடித்து - அது கோவை நகரச் சிறையிலே இருப்பதைக் கண்டுபிடித்து அதைக் கொண்டு வந்து இந்த வளாகத்திலே வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

25-வது ஆண்டு விழாவிலேதான் தில்லையாடியிலே வள்ளியம்மை நகர் உருவாக்கி, வள்ளியம்மையோடு தென்னாப்பிரிக்காவிலே உத்தமர் காந்தியடிகளோடு நின்று, போரிட்ட நாராயணசாமி, நாகப்பன் என்ற இரண்டு ஆதி திராவிட வீரர்களுடைய பெயரால் இரண்டு தொகுப்பு வீடுகள் அமைந்த பகுதிகளை உருவாக்கி அவர்களை வெள்ளி விழாவின் போது சிறப்பித்திருக்கிறோம்.

இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். நான் அவைகளையெல்லாம் இங்கே அடுக்கிக் காட்ட விரும்ப வில்லை. ஒவ்வொன்றையும் பார்க்கின்ற நேரத்திலே அந்த எண்ணம் அந்த நினைவு எல்லோருக்கும் ஏற்படும் என்ற நம்பிக்கையினால் நான் அவைகளைப் பற்றியெல்லாம் அதிகம் சொல்ல விரும்பவில்லை.

இன்று இங்கே நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு தியாக சீலர்கள் அனைவரையும் அவர்களுடைய பாதம் தொட்டு நான் வணங்குகிறேன்.

தலைவர் மூப்பனார் அவர்கள் இங்கே எடுத்துக்காட் டியதைப் போல - அவர்களை நாம் வழியனுப்பி வைத்து வாழ்த்துகின்ற காரணத்தால் - நாம் பேறு பெற்றவர் களாக ஆகிறோம்; இது அவர்களுக்குச் செய்கின்ற சிறப்பு என்பதல்ல; நமக்கு நாமே செய்து கொள்கின்ற சிறப்பு - நமக்கு நாமே தேடிக் கொள்கின்ற பெருமை என்ற அந்த உணர்வோடுதான் எளிய முறையிலே இந்த நிகழ்ச்சி இங்கே நடைபெற்று கொண்டிருக்கின்றது.

டெல்லிக்குச் செல்கின்ற ஒவ்வொரு தியாகிக்கும் எங்களுடைய அன்பின் அடையாளமாக அவர்களுடைய தேவையை நிறைவு செய்யக்கூடியது என்ற முறையிலே அல்ல - எங்களுடைய அன்பின் அடையாளமாக - இந்த நாட்டிற்கு அவர்கள் சிந்திய ரத்தத்திற்கு, அவர்கள் ஏற்றுக் கொண்ட இன்னல்களுக்கு பரிசாக அல்ல - நினைவாக கதர் வேட்டி அல்லது சேலை, கதர் சட்டை, கதர் துண்டு, கதர் சால்வை - இவைகளோடு டெல்லியிலே தமிழக அரசின் சார்பில் எல்லா செலவுகளையும் பார்த்துக் கொண்டாலுங்கூட, தமிழக அரசு மாளிகையிலே தங்குவதற்கான இடவசதி செய்து கொடுக்கப்பட்டாலுங்கூட, அவர்களுக்கு இங்கேயிருந்து கூட மருத்துவர் குழு ஒன்று அனுப்பப்பட்டாலுங்கூட, அவர்கள் இரண்டாம் வகுப்பு ஏ.சி.

வண்டியிலே பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலுங்கூட - அங்கே டெல்லியிலே கைச் செலவிற்கென்று எங்களால் இயன்ற தொகையாக ஆயிரம் ரூபாயை பொற்கிழியாக அவர்களுக்கு இங்கே வழங்கவிருக்கிறோம். (கைத்தட்டல்)

இவைகள் அனைத்தையும் அவர்களுடைய தேவையை நிறைவு செய்யக் கூடியதென்ற அந்த அடிப்படையிலே அல்ல; எங்களுடைய அன்பை வெளிப்படுத்துகின்ற வகையில் அவர்களுக்கு இவைகள்

எல்லாம் வழங்கப்படுகின்றன என்று கூறி - அவைகளை உங்கள் முன்னிலையிலே வழங்குகிறேன் என்று அறிவித்து - தியாகிகளால் உருவான இந்த திருநாட்டில் என்றென்றும் இறையாண்மையையும் ஒற்றுமையையும் இந்தியாவினுடைய வலுவை மேலும் பெருக்குகின்ற முயற்சியை நாம் மேற்கொள்வோம் என்று கூறி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை இதயத்திலே பதித்து நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதி பாடிய அந்தக் கவிதை வரிகளை நினைவில் கொண்டு சமத்துவம், சமதர்மம் இவைகள் செழித்தோங்க சூளுரைப்போம், சூளுரை மேற்கொள்வோம்.

- முரசொலி 12.8.97

முதற் பதிப்பு : மே 2000