உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

திருமதி ருக்மணி இலட்சுமிபதி நூற்றாண்டு விழா

பகுதி 1 · 1 / 1

திருமதி ருக்மணி இலட்சுமிபதி

நூற்றாண்டு விழா

இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும் இந்த நிகழ்ச்சியிலே, மறைந்த ஆனால் என்றும் மறையாமல் இருக்கின்ற திருமதி ருக்மணி இலட்சுமிபதி அவர்களுடைய பெருமைகளை எடுத்துச் சொல்லுவதிலும், நான் உள்ளபடியே பெருமிதம் கொள்கிறேன்.

அம்மையார் அவர்கள் நாட்டிற்காக சமுதாயத்திற்காக அதிலும் குறிப்பாக பெண்களுக்காக சமுதாயப் புரட்சியிலே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற குறிக்கோளுக்காக அரும்பாடு பட்டவர் என்பது அவருடைய வாழ்க்கை வரலாற்றின் மூலமாக நாம் அறிந்து கொள்ளக்கூடிய உண்மையாகும்.

இந்தக் குடும்பப் பாரம்பரியம் நூறாண்டுகளுக்கு முன்பு கோல்கொண்டாவிலே தொடங்கி, அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து, தமிழகத்திலே ஒளிபாய்ச்சுகின்ற ஒரு குடும்பமாகும். கோல்கொண்டாவிலிருந்து தமிழகத்திலே வந்து குடியேறிய அந்தக் குடும்பத்தில் ஒரு நவரத்தினமாக ஒளி விட்டார்கள், ருக்மணி இலட்சுமிபதி அவர்கள் என்று சொன்னால் அது மிகமிகப் பொருத்தமுடைய ஒன்றாகும்.

இங்கே பொன்னம்மாள் அவர்கள் குறிப்பிட்டதைப் போல அவர்கள் தன்னுடைய இல்லத்தில் சாதி வேற்றுமை

கூடாது, சமத்துவம் வேண்டும் என்ற அந்த உயர்ந்த ஒரு குறிக்கோளை வாயளவிலே, உதட்டளவிலே சொல்லிக் கொண்டிராமல் செயலளவில் காட்டியவர். தன்னுடைய வீட்டிலேயிருந்த பிராமணச் சமுதாயத்தைச் சேர்ந்த சமையல்காரரை மாற்றிவிட்டு, பூங்காவனம் என்ற பெயருடைய ஒரு ஆதிதிராவிடப் பெண்மணியை சமையல்காரராக ஆக்கிக் கொண்ட பெருமை அம்மையார் ருக்மணி இலட்சுமிபதி அவர்களைச் சாரும்.

அவர் தன் வாழ்க்கையிலே நகைகளையே அணியாமல் இருந்தார் - அவ்வளவு எளிமையாக இருந்தார் என்று பொன்னம்மாள் அவர்கள் பேசும் போது குறிப்பிட்டார்கள்.

ருக்மணி இலட்சுமிபதி அவர்கள் நகைகளை அணியாமல் இருந்ததற்குக் காரணம்; அவருடைய நகைகளை யாரும் கோர்ட்டிலே கொண்டு போய் வைத்து விடவில்லை (பலத்த கைதட்டல்) அதன் காரணமாக நகைகளை அணியாமல் இருந்தார் என்று சொல்வதற்கில்லை. இருந்தும், அவைகளை அணியாமல் இருந்தார்; அதுதான் தியாகம். இல்லாததைச் செய்வதாகச் சொல்வதற்குப் பெயர் தியாகம் அல்ல. இருந்தும் அவைகளை அணியாமல் இருந்தார். இருந்தும் அதை இழப்பதுதான் தியாகம்.

அத்தகைய உத்தம பெண்மணியாக மறைந்த ருக்மணி இலட்சுமிபதி அவர்கள் விளங்கியிருக்கிறார்கள்.

இங்கே திரு. மூப்பனார் அவர்கள் குறிப்பிட்டதைப் போல சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள் முன்னின்று நடத்திய உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் 1930-ஆம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் முன்னின்று யாத்திரை செய்த அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு கடும் தண்டனைகளை அனுபவித்தவர்

ருக்மணி லட்சுமிபதி அவர்கள். அதற்குப் பிறகு 37-ஆம் ஆண்டில் இந்தியாவில் பல மாநிலங்களிலே காங்கிரஸ் ஆட்சி உருவான சமயத்தில் தமிழகத்தில் அன்றையதினம் தமிழகம் என்று சொல்ல இயலாது. சென்னை மாகாணத்தில் மற்ற பிரதேசங்களும் சேர்ந்திருந்து ஒன்று பட்ட சென்னை மாகாணத்தில், துணை சபாநாயகராகப் பொறுப்பேற்று தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்தியவர் அம்மையார் அவர்கள் ஆவார்கள்.

37-இல் துணை சபாநாயகராக இருந்த அம்மையார் அவர்கள் 46-ஆம் ஆண்டு பிரகாசம் அவர்கள் தலைமையில் அமைச்சரவை அமைந்தபோது - அந்த அமைச்சரவையிலும் சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்று - திறமையை வெளிப்படுத்தியவர் ஆவார்கள். இத்தனை பதவிப் பொறுப்புக்களிலே அவர்கள் இருந்த போதுங்கூட, எளிமையாக, எல்லோரையும் அன்போடு அரவணைப்பவராக, சாதி சமயங்களைக் கடந்தவராக, நாட்டுப் பற்றிலே தனியாத நாட்டம் கொண்டவராக அவர்கள் விளங்கினார்கள்.

அதனால்தான் இன்றையதினம் அவருக்கு பல நினைவுகளை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் சொன்னார்கள், மார்ஷல் சாலையை ருக்மணி இலட்சுமிபதி சாலை என்று பெயர் மாற்ற நான் உதவினேன் என்று! ஒரு விழாவிற்கு அவர்கள் என்னை அழைத்தபோது, மார்ஷல் சாலையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியில் ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது அரசுக்கு! இந்தச் சாலை ருக்மணி லட்சுமிபதி பெயரால் மாற்றப்பட வேண்டும். அந்த வேண்டுகோளை நான் ஆணையாக ஏற்று, அதே இடத்தில்; அதே நிமிடத்தில் நாளை முதல் மார்ஷல் சாலை - ருக்மணி இலட்சுமிபதி

சாலை என்று அழைக்கப்படும் என்று குறிப்பிட்டேன். அவ்வாறே ஆணையிடப்பட்டது.

அதற்குப் பிறகு அந்தச் சாலையிலேயே ஒரு சிலை வைக்க வேண்டுமென்று டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் மிகவும் விரும்பினார்கள். அவரைச் சார்ந்தவர்கள் அம்மையார்மீது அன்பு கொண்டவர்கள் அத்தனை பேரும் விரும்பினார்கள். ஐந்தாண்டு காலம் சிலை தயாராக இருந்தது. பீடம் கட்டுவதற்கு இடம் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் இந்த ஆட்சி உதயமான பிறகு சிலை வைப்பதற்கு ஐந்தாண்டு காலம் ஏற்பட்ட தாமதத்தை அவர் என்னிடத்திலே எடுத்துச் சொல்லி, அந்த சிலையைத் திறந்து வைக்க வேண்டும் என்று அழைத்தார்.

பெரியவர் சி. சுப்பிரமணியம் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி. அம்மையார் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களும்கூட கலந்து கொண்ட நிகழ்ச்சி அது. அந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. அந்தச் சிலை திறப்பு விழாவிலேதான் நான் குறிப்பிட்டேன்; அம்மையார் அவர்களுடைய நூற்றாண்டு விழாவினையொட்டி, அஞ்சல் தலை ஒன்று வெளியிடுவதற்கு அரசின் சார்பாக மத்தியிலே உள்ள அரசுக்கு எழுதப்படும் என்று குறிப்பிட்டேன். அவ்வாறே எழுதப்பட்டு, அதற்கான அனுமதியும் கிடைத்து இன்றைக்கு இந்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டிருக்கிறது.

டாக்டர் ராமமூர்த்தி அவர்கள் இங்கே என்னை அழைக்கும் போது, “முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை பேச அழைக்கிறேன்” என்று கூறவில்லை. “என்னுடைய நண்பர் கலைஞர் கருணாநிதியை பேச அழைக்கிறேன்” என்றார். இதுதான் நிலைக்கும். முதலமைச்சர் பதவி வரும், போகும். நான் டாக்டரைக் கேட்டு கொள்ளவதெல்லாம், நான் என்றைக்கும் உங்களுக்கு நண்பன் - அந்த நண்பன் என்ற முறையிலேயே என்னை எப்போதும் அழையுங்கள். (கைத்தட்டல்) முதலமைச்சர் என்பது நிலைத்ததல்ல.

நண்பன்,

நட்பு என்பதுதான் நிலைத்த ஒன்று என்பதை அவருக்கு நான் நினைவூட்டுகிறேன். மூப்பனார் அவர்கள் இங்கே ஒன்றைச் சொன்னார்கள். நான் சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்களிடத்திலே மிகுந்த அன்பு உள்ளவன். காரணம் பல இருந்தாலும் கூட, நானும் மூப்பனாரும் பிறந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை அவர்கள்.

சர்தார் என்று அவருக்குப் பட்டம் வந்ததற்குக் காரணமே - வல்லபாய் படேலுக்கு ஈடாக தமிழகத்திலே அன்றைக்கு ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டாரென்றால் சர்தார் வேதரத்தினம் அவர்கள் தான். அதனால்தான் அவரை சர்தார் வேதரத்தினம் என்று அழைப்பதுண்டு. அவருடைய அஞ்சல் தலை ஒன்றும் வெளியிடப்பட வேண்டுமென்று மத்திய அரசுக்கு நான் எழுதியிருக்கிறேன். அதற்கான அனுமதி விரைவிலே கிடைக்கும் என்று நம்புகிறேன்.

சுதந்திரப் பொன் விழா கொண்டாடுகின்ற நேரத்தில் - இங்கே பொன்னம்மாள் அவர்கள் குறிப்பிட்டதைப் போல - தமிழகத்திலே உள்ள தியாகிகளை சரித்திரங்களை எல்லாம் எழுத வேண்டும் என்கிற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். இருக்கின்ற பணிகளுக்கிடையே அந்தப் பணியையும் நான் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன் (பலத்த கைதட்டல்) என்பதை எடுத்துக்கூறி தியாகிகளுடைய சரித்திரத்தையும் எழுத வேண்டும்; தியாகிகளின் தரித்திரத்தையும் போக்க வேண்டுமென்ற அந்த உணர்வோடு நாம் செயல்படுவோம் என்று குறிப்பிட்டு, இந்த விழாவிலே கலந்து கொண்டு உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பினைப் பெற்றமைக்காக மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

- முரசொலி 7.8.97

முதற் பதிப்பு : மே 2000