புனித தோமையர்
பகுதி 1 · 1 / 1
புனித தோமையர்
முதல்வர் என்ற முறையிலே மட்டும் நான் இந்த விழாவிலே பங்கு கொள்ளவில்லை. தாமஸ் அவர்கள் வாழ்ந்த சின்னமலை என்னுடைய சைதாப்பேட்டைத் தொகுதியிலேதான் இருக்கிறது. அந்தக் காரணத்தினாலேயும் இவ்விழாவிலே நான் பெருமகிழ்ச்சியோடு வந்து கலந்து கொண்டிருக்கிறேன்.
இந்த நாட்டில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் தானே, அவர்களுடைய நலன் காக்கப்படுமா, உரிமைகளுக்குப் பாதுகாப்பளிக்கப்படுமா? என்ற அச்சம் யாருக்காவது இருக்குமேயானால் - அந்த அச்சம் தேவையில்லை என்கிற பதிலாகத்தான் இங்கே இந்தக் கூட்டம் அமைந்திருக்கிறது.
ஃபாதர் அடைக்கலம் அவர்களிடம், “தூய தோமையருக்குப் பதினெட்டாம் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறதே! இதேபோல் பதினெட்டாம் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதா?” என்று நான் கேட்டேன். “இல்லை; இதுதான் முதலாவதாகக் கொண்டாடப்படும் நூற்றாண்டு விழா” என்று சொன்னார்.
காரணம் - பதினெட்டாம் நூற்றாண்டு விழாக் காலத்தில் இந்த நாடு பிரிட்டிஷார் வசமிருந்தது.
கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட பன்னிரண்டு மாணவர்களில் ஒருவரான புனித தோமையர், இந்தியாவுக்கு அதிலும் தமிழகத்திற்கு வந்து, இங்கேயே - இந்த மண்ணிலேயே - புதையுண்டார் என்று அவரது வாழ்க்கை வரலாற்றில் நான் படித்தேன்.
எந்தக் கொள்கைக்காக இங்கு வந்தாரோ அதில் அவர் வெற்றி பெற்றார் என்றால் மிகையாகாது.
அந்த நல்லவரை - உத்தமரை - ஒரு கொலை வெறியன் கொன்றுவிட்டான் என்று படித்தபோது, தமிழகத்திற்கு இப்படி ஒரு இழுக்கு வந்து விட்டதே என்று தோன்றிய வருத்தத்திற்கு நடுவிலும் ஒரு நிம்மதி - அவருடைய குருநாதருங்கூட சிலுவையில்தானே அறையப்பட்டிருக்கிறார்!
அந்த அளவுக்கு, அந்தக் காலம் மொத்தத்தில் ஆழ்ந்திருந்தது.
கருத்துக்குக் கருத்து - எழுத்துக்கு எழுத்து - பேச்சுக்குப் பேச்சு - கொள்கைக்குக் கொள்கை என்று வைக்க முடியாமல் வாளைத் தூக்குவது முட்டாள் தனமான செயலாகும்.
நெல்லை உரலில் போட்டுக் குத்தினால் உமி தனியே பிரிந்துவிடும். முட்டாளை உரலில் போட்டு என்னதான் குத்தினாலும் அவனிடமிருக்கும் முட்டாள் தனம் அவனை விட்டுப் பிரியவே பிரியாது என்று பைபிளிலே வாசகம் இருக்கிறது.
நான் இங்கே பேசுவதால் - கருணாநிதி கடவுளைப் பற்றி என்ன கருத்துக் கொண்டிருக்கிறான், என்கிற சந்தேகம் சிலருக்கு உண்டாகக் கூடும். எனக்கிருக்கிற தெளிவெல்லாம் நான் கடவுளை ஏற்றுக்கொள்கிறேனா என்பதல்ல!
கடவுள் என்னை ஏற்றுக் கொள்கிற அளவுக்கு நான் நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதுதான் நான் அடிக்கடி எண்ணிப் பார்ப்பது.
கிறிஸ்தவ சமுதாயம் தமிழ் மக்களோடும், தமிழ் மொழியும் மிக மிகத் தொடர்பு கொண்ட சமுதாயமாகும்.
நியூ பிகின் இங்கே தமிழ் பேசினார். அவருடைய அந்த மழலைப் பேச்சு தமிழின் மேல் அவருக்குள்ள ஆர்வத்தை நமக்கு உணர்த்தியது.
தேம்பாவணி கண்டார் வீரமாமுனிவர்.
தமிழ் இலக்கணத்தை ஆராய்ந்து ஒப்பிலக்கணம் கண்டார் கால்டுவெல்.
திருக்குறளை ஆங்கிலத்திலே மொழி பெயர்த்தார் ஜி.யு.போப் அய்யர்.
இப்படித் தமிழோடும் தமிழர்களோடும் தொடர்புடைய கிறிஸ்தவப் பெரியார்களை நாம் அந்நியராகக் கருதியதில்லை.
இக்காரணமாகத்தான் 1968-ஆம் ஆண்டு - இதே இடத்தில் கூடிய உலகத் தமிழ் மாநாட்டின்போது - இந்தச் சென்னை மாநகரில் வீரமாமுனிவருக்கும், கால்டுவெல்லுக்கும், போப் அய்யருக்கும் சிலை வைத்தோம் நாம். அத்தகைய பெருமையுடைய அரசு இது.
என்னை வளர்த்து ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்வதுபோல் நான்,
“சிலுவை அணியாத கிறிஸ்தவன். கைலி கட்டாத முஸ்லீம். திருநீறு அணியாத இந்து. சந்தியாசம் கொள்ளாத பெளத்தன்.”
என்று சொல்லிக் கொள்வதில்தான் நான் பெருமைப்படுகிறேன்.
1972-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் நாள் புனித தோமையர் விழாவில் பேசியது.
