உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

பயிற்று மொழி

பகுதி 1 · 1 / 1

பயிற்று மொழி

தாம்பரம் கிறித்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழுக்கு ஒரு பேரவையை உருவாக்கி, அந்தப் பேரவையின் சார்பிலே முத்தமிழ் விழாக் கொண்டாடுவது, புகழ்ந்து வாழ்த்திப் பாராட்டி மகிழ்ந்திட வேண்டிய ஒன்றாகும். இந்த விழாவில் மாணவ நண்பர்களாகிய உங்களுடைய ஆர்வத்தை எல்லாம் நான் காண்கிறேன்.

மாணவர்களுடைய கூட்டத்திலே பேசுவதென்றால், பேசுகின்றவர்களுக்கு ஒரு தெம்பு இருக்கும். சில நேரங்களில் பேசுகின்றவர்களுக்குத் தெம்பு தேவைப்படும்!

ஒவ்வொருவரும் மாணவராக இருந்துதான் பெரியவராக ஆகிறார்கள். ஒவ்வொரு மாணவனும், தான் எதிர்காலத்தில் மாணவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய தலைவனாக, அல்லது ஒரு நாட்டின் மிக முக்கியமான பொறுப்புக்களை வகிப்பவனாக ஆகவேண்டும் என்கிற எண்ணத்தோடு மாணவக் காலத்தைத் தன்னுடைய பொற்காலம் என்று கருதி, அதில் ஒரு சிறிதும் வீணாக்காமல் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்வேன். மாணவப் பருவம் எதற்கும் அஞ்சாத பருவம்; வேகமாக விஷயங்களை எடுத்துச் சொல்லக்கூடிய பருவம்; அந்தப் பருவத்திலேதான் எதிர்காலத்திற்கான திட்டங்கள் நம்முடைய நெஞ்சத்திலே உதயமாகி அவைகள் தேக்கி வைக்கப்பட்டுப் பின்னால் ஒரு காலத்திலே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை யாரும் மறந்திடக் கூடாது.

கிறித்துவக் கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழியிடம் பற்றுக் கொண்டிருப்பதைப் போலத் தமிழகத்திலே உள்ள பல்வேறு கல்லூரிகளிலே இந்தப் பற்று இன்றைக்கு மொட்டாக மலர்ந்து வருகிற காட்சியை நான் காண்கின்றேன். இடைக்காலத்திலே ஒரு ஐந்தாறு ஆண்டுக்காலம் தமிழ்ப் பற்று கொஞ்சம் மங்கிப் போய் விட்டது என்பதை யாரும் மறந்திடலாகாது. 1938-ஆம் ஆண்டு தமிழ் உணர்வும் தமிழ்ப் பற்றும், தமிழின்பால் தனியாத காதலும் தமிழ்ச் சிறார்களுக்கு - இளைஞர்களுக்கு - மாணவர்களுக்கு வேண்டுமென்கிற முழக்கம் தமிழ்த் தெருக்களிலே கேட்டது.

அது ஏன் என்ற அரசியல் ஆராய்ச்சிகளுக்கு நான் செல்ல விரும்பவில்லை. அதற்குப் பிறகு, தொடர்ந்து தமிழால் எல்லாம் முடியும்; தமிழ் நம்மை ஈடேற்றும், கரையேற்றும், கைகொடுக்கும் என்பதும்; தமிழுக்கு ஒரு தீங்கு என்றால் நம்முடைய தேகத்தை ஈந்தாகிலும், உயிரை இழந்தாகிலும், அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வினைப் பெற வேண்டும் என்பதுமாகிய ஒரு சூழ்நிலை தமிழகத்திலே உருவாயிற்று.

ஆனால் இடைக்காலத்தில் தமிழ் நம்மை வாழ வைக்குமா என்ற ஒரு சந்தேகம் தலைதூக்கிய காரணமாகத் தமிழை நாம் மறந்தோம்! தமிழை மறந்ததால் தமிழ் உணர்வுகள், தமிழ்ச் சமுதாயத்தின் எழுச்சி பாழ்பட்டுப் போய்விடும்; தமிழ் மரபு காக்கப்படாமல் அழிந்து ஒழிந்து விடும் என்கிற பயம் காரணமாகவே மீண்டும் தமிழ் உணர்ச்சி தலைதூக்கியிருப்பதை நாம் மகிழ்வோடு பார்க்கிறோம்.

தமிழுக்கு மற்ற எல்லா மொழிகளையும் விடப் பல்வேறு சிறப்புக்கள் உண்டு. நாம் தமிழர்கள் என்பதால் அதைக் சொல்லவில்லை! உலகத் தமிழ் மாநாட்டிலே கலந்து கொண்ட வெளிநாட்டுப் பேரறிஞர்களெல்லாம், தமிழை அவர்கள் தாய்மொழியிலே படிக்காமல், பல்வேறு மொழியிலே படித்துத் தமிழின் பெருமை

களைத் தெரிந்து கொண்டு, தமிழின் உணர்வுகளை உலக அரங்குகளில் இன்று எடுத்தோதி வருகிறார்கள். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், வரலாறு இவைகள் எல்லாம் உலக மொழிகளிலே இருக்கிற பல இலக்கியங்களை விடச் சிறந்தவை என்பதை அனைவரும் இன்றைக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேறு எந்த மொழிக்கும் இல்லாத ஒரு புதுமை - நாம் உச்சரிக்கிறோமே, தமிழ் என்று - அதற்கு உண்டு. தமிழ் என்று பெயர் வைத்திருக்கிறோமே அதை எடுத்துக் கொண்டால்கூட, நம்முடைய மொழியிலே இருக்கிற பல இலக்கணங்களை அது உள்ளடக்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழ் என்கிற அந்தப் பெயரில் ‘த’ என்ற எழுத்து வல்லினம். ‘மி’ என்ற எழுத்து மெல்லினம். ‘ழ்’ என்ற எழுத்து இடையினம். ஆக இந்த வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று இனங்களை உள்ளடக்கி ஒவ்வொரு எழுத்தாக எடுத்து ஒன்றாகச் சேர்த்துக் கோத்த முத்துத்தான் தமிழ் என்ற பெயராகும்.

தமிழனுடைய நாகரிகம், வாணிகம், வீரம் இவைகள் தமிழகத்தின் எல்லையோடு மாத்திரமல்லாமல் கடல் கடந்து கடாரம் வரை சென்றன. அவனுடைய வீரம் இமயத்தின் சுவர்களில் எழுதப்பட்டது. புலி, வில், கயல் ஆகியன தமிழனுடைய இலச்சினைகள். இமயத்தின் மலை முகடுகளில் செதுக்கப்பட்டன. சேரன் செங்குட்டுவன் வடபுலத்திற்குப் படையெடுத்துக் கனகவிசயரின் முடித்தலையில் கல் எடுத்துக் கொண்டுவந்து கண்ணகிக்குச் சிலை வைத்தான் என்பது கதையல்ல!

நம்முடைய வீர வரலாற்றின் ஒரு அத்தியாயமாகும்!

இப்படி வீரத்தால், வாணிபத்தால், கலாச்சாரத் தொடர்பால் அகில உலக நாடுகளோடு பெருமளவிற்குத் தன்னுடைய புகழைப் பரப்புகின்ற நிலையில் தொடர்பு கொண்டிருந்தவன் தமிழன்.

மாணவ நண்பர்களை நான் ஒன்று கேட்டுக் கொள்வேன். நானும் மாணவனாக இருந்தவன்தான்.

ஆனால் உங்களைப்போல் அல்ல. கல்லூரி காணாதவன் நான். என் படிப்பு உயர்நிலைப் பள்ளியோடு முடிந்து விட்டது. நான் பயின்ற கல்லூரி காஞ்சிபுரத்துக் கல்லூரியே தவிர, வேறு கல்லூரியை நான் கண்டதில்லை. ஆனாலும், இறுதி வகுப்பு படித்த அந்தக் காலத்திலேயே தமிழின்பால் நான் எந்த அளவிற்குப் பற்றுக் கொண்டிருந்தேன்; எந்த அளவிற்குத் தமிழ் என்னை ஈர்த்திருந்தது; நான் எந்த அளவிற்குத் தமிழிடம் மோகம் வைத்திருந்தேன் என்பதைச் சொல்லுவதற்குக் காரணம் - தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றிச் சொல்ல அல்ல; என்னைப்போல இருந்த பல மாணவர்கள் அன்று தமிழின்பால் அவ்வளவு அக்கறை காட்டினார்கள் என்பதைப் புலப்படுத்துவதற்காகத்தான்!

1938-ம் ஆண்டு தமிழ்நாட்டிலே வேறு ஒரு மொழி கட்டாயமாகத் திணிக்கப்பட்ட காலம். அப்போது நான் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதே நூற்றுக்கணக்கான மாணவர்கள் புடைசூழ வேற்று மொழித் திணிப்பால் தமிழ் மொழி அழிந்துவிடும் என்பதை உணர்த்துகின்ற அளவிற்கு நான் அமைதியான கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

கிளர்ச்சி என்பது சத்தம் போடுவதும், வன்முறைகளில் ஈடுபடுவதுமல்ல; அண்ணல் காந்தியடிகள் வழியானாலும், அறிஞர் அண்ணா அவர்களின் வழியானாலும், உள்ளத்தில் இருப்பதை வெளியே எடுத்துச் சொல்லுவது கிளர்ச்சியில் ஒரு முறை. அந்த முறையை நான் கையாண்டேன். அப்படிக் கையாண்டபோது, வேற்று மொழி ஆதிக்கத்தால் தமிழ் மொழி அழிந்துவிடாமல் காப்பாற்ற நாங்களே தமிழில் பாடல்களைப் புனைந்தோம், ஏடுகளை நடத்தினோம்.

இன்று இந்தக் கல்லூரிக்கு நான் வந்தபோது, தமிழில் எப்படித் தந்திச் செய்தி அனுப்ப முடியும் என்பதை மாணவ நண்பர்கள் விளக்கிக் காட்டினார்கள். பெருங்குளத்தார் என்று இப்போது இருப்பது, முன்பு

பெருங்குளத்தார் என்று இருந்தது என்பதற்குக் கல்வெட்டினையும் காட்டினார்கள். இங்கே நான் வந்து அமர்ந்த பிறகு, ‘இந்த விழா இனிது நடைபெற வாழ்த்துகிறேன்’ என்று தமிழில் வந்த தந்தி ஒன்றினையும் இங்கே நண்பர்கள் காட்டினார்கள்.

இப்படித் தமிழால் எல்லாம் முடியும், தமிழ்தான் நம்முடைய உயிர்மூச்சு என்கிற இந்த உணர்வினை, 1938இல் - 1942இல் - 1944இல் மாணவர்கள் பெற்றிருந்ததைப் போல, சிறிது இடைவெளிக்குப் பிறகு 1965-இல் பெற்றிருந்ததைப் போல, இன்று நம்முடைய மாணவச் செல்வங்கள் பெற்றிருக்கவில்லையே என்பதை எண்ணி நான் வருந்துகின்றேன். 1965-இல் இருந்தது போன்ற உணர்வுதான் வேண்டுமே தவிர, அப்போது நடந்ததைப் போல நடைபெற வேண்டுமென்று நான் விரும்பவில்லை.

பேரறிஞர் அண்ணா, எந்த மாநாட்டில் எந்த விழாவில் பேசினாலும், எந்தக் கட்டுரை எழுதினாலும் அவர் அரசியலுக்குத் தருகிற முக்கியத்துவத்தைவிட, ஆரம்பமானாலும், முடிவானாலும், தமிழுக்குத் தமிழ் மொழிக்குத் தமிழ்ச் சமுதாயத்துக்குத் தமிழ் மரபு காக்கப்படுவதற்குத்தான் அளிப்பார். அதிலே அவருக்கு அழுத்தம் திருத்தமான நம்பிக்கை இருந்தது.

இன்றைக்குத் தமிழ் மாணவர்கள், அரசியலிலே எந்தக் கட்சிச் சார்புடையவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் தமிழ் மொழியானது நம்முடைய நாட்டின், இந்த மாநிலத்தின் தேசிய மொழியாகும். நமக்கு உயிர் மூச்சாக இருக்கிற மொழியாகும்; நம்முடைய உடலில் இருக்கிற தமிழ்மொழி என்கிற உணர்வினை நம்முடைய உடலின் இரத்த அணுக்களாக, அதிலே உள்ள துடிப்புக்களாக நாம் பெற்றாக வேண்டும். இதில் அரசியலுக்கு இடமில்லை. அரசியல் இடம் பெறாத காரணத்தால்தான் தமிழால் முடியும் - தமிழால் கற்பிக்க முடியும் - தமிழால் விஞ்ஞானத்தையும், நிலப்பாடத்தையும்

போதிக்க முடியும் - அறிவுச் சொற்களை உருவாக்க முடியும் என்று ஒரு அழகான நூலைத் திரு. சி. சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டார்கள். தமிழால் முடியும் என்பது நூல் வடிவில்தான் இருக்கிறதே தவிர இன்னும் செயல் வடிவில் வரவில்லை.

செயல் வடிவில் கொண்டு வரவேண்டுமென்று 1968-ம் ஆண்டு தமிழ்ச் சட்டப் பேரவையில் அன்று முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘இன்னும் ஐந்தாண்டுக் காலத்திலே தமிழ் மொழி செயல் வடிவில் பயிற்று மொழியாக ஆகும்’ என்ற ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றினார். ஆனால் அதற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சங்கடங்களால், மாணவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளால், தமிழில் மாத்திரம் படித்தால் தன்னலம், தன் குடும்ப நலம் என்னவாகுமோ என்ற பொருளாதாரச் சூழல் காரணமாக - அன்றைக்கு அண்ணா அவர்கள் நிர்ணயித்த ஐந்தாண்டு காலத்தில் தமிழால் முடியும் என்பதை நிரூபிக்க முடியாமல் நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசாங்கம் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாதா என்றால், முடியும். அதற்கான ஒத்துழைப்பு மாணவர்களிடமிருந்துதான் அரசாங்கம் எதிர்பார்க்கிறது; நான் எதிர்பார்க்கிறேன்! தமிழால் முடியும் என்று தந்தி மூலம் இங்கே சொன்னீர்களே - தமிழால் முடியும் என்று கல்வெட்டுக்களைக் காட்டினீர்களே - எல்லாமே தமிழால் முடியும், இன்னும் ஏன் நீங்கள் செயல்படாமல் இருக்கின்றீர்கள் என்று என்னைத் தட்டிக் கேட்கிற அளவிற்கு நீங்கள் தமிழின்மீது பற்றும், பாசமும் கொள்ள வேண்டும்.

அதுதான் தமிழை வாழவைக்க - தமிழை வளர்க்க - சரியான வழியாகும்.

1973-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் நாள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரித் தமிழ்ப் பேரவையின் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000