உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கருத்துச் சுதந்திரம்

பகுதி 1 · 1 / 1

கருத்துச் சுதந்திரம்

இந்த விழா குடியரசு தினத்தில் நடைபெறுவது மிக மிகப் பொருத்தமுடைய ஒன்றாகும். 1969-லிருந்து 1972-ம் ஆண்டுவரை மூன்றாண்டுக் காலத்தில் 42 நூல்கள் வெளியிடப்பட்டன. 1972-லிருந்து இந்த இரண்டாண்டு வளர்ச்சியில் 66 நூல்கள் வெளியிடப்படுவதை ஒப்பிட்டுப் பார்க்கிற நேரத்தில் பல்கலைக் கழகத்தின் பணி மிகத் தீவிரமடைந்திருக்கிறது என்பதை எண்ணி எண்ணி நான் மகிழ்ந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த நூல்களை யாத்துத் தந்த பேராசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இந்த விழாவில் கூடியிருக்கிற நம் சார்பில் மாத்திரமல்லாமல், இந்த நூல்களின் பயனை அனுபவிக்க இருப்போர் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கத்தில், புத்தகத்தில் பலவற்றைப் படிக்கிறோம், அதற்குப் பிறகு உலகத்தையே புத்தகமாகப் படிக்கிற அளவிற்கு வாழ்கிறோம். இந்த இரண்டு நிலைகளுக்கிடையே பாலமாக அமைகிற வகையில் இவை போன்ற புத்தகங்களும் மிகமிகத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆராய்ச்சி நூல்கள், வரலாற்று நூல்கள், இலக்கிய நூல்கள், பிறமொழி நூல்கள், தமிழகத்தின் பெருமையை உணர்த்துகின்ற நூல்கள் என்ற பல்வகையான நூல்கள் இன்றைய தினம் வெளியிடப்படுகின்றன.

நம்முடைய துணைவேந்தர் அவர்கள் இந்த நான்காண்டுக் காலத்தில் தமிழ்த் துறையின் சார்பாக மாத்திரம் 24 நூல்கள், வெளியிடப்பட்டிருக்கின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியைக் கூறினார்கள். 108 நூல்களில் 24 நூல்கள் தமிழ்த் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட நூல்கள் என்பதை எண்ணியெண்ணி நாமனைவரும் மகிழ்ச்சி அடையலாம்.

இன்று நாம் காட்டுகிற மகிழ்ச்சி, எதிர்காலத்தில் தமிழ்த் துறையின் சார்பாக இன்னும் அதிகமான நூல்கள் வெளியிடப்படுவதற்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

பொதுவாக இந்த நூல்கள் அவரவர்களுடைய கருத்துச் சுதந்திரத்தோடு வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதை நாமனைவரும் நன்றாக அறிவோம். கருத்துச் சுதந்திரம் நிச்சயமாகத் தேவையானது. ஆனால் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் நீண்ட நெடுங்காலமாக நாம் போற்றி வந்து, அதன் காரணமாகவே இந்த நாட்டிலே ஒரு புதிய நிலை உருவாகியிருக்கிற நேரத்தில், அதைத் தொலைத்து விடாத அளவிற்கும் இருக்க வேண்டுமென்பதும், சில நேரங்களில் உண்மைகள் மறைக்கப்பட்டு விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் யாரும் மறுக்கக்கூடிய விஷயங்கள் அல்ல.

அந்த வகையில் நான் எதையும் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டாவிட்டாலும், பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பாக நடைபெற்ற சொற்பொழிவுகளில் முகிழ்த்த பெரும் கருத்துக்களெல்லாம் நல்ல வடிவம் பெற்றிருக்கிற நேரத்தில், அவை வெளியிடப்படுகிற நேரத்தில், பல்கலைக் கழகத்தின் குழுவினர் அவற்றை வெளியிடுவதற்கு முன்பே பார்க்கும் வாய்ப்பைப் பெறுவதும், அதிலே தங்களுக்குத் தெரிகிற குறைபாடுகளை ஆசிரியர்களிடம் எடுத்துரைப்பதும், அதன் மூலமாக நூல்கள் எழுதும் ஆசிரியப் பெருமக்கள் தம் நூல்களில் திருத்தங்கள் கொண்டு வருவதும் வரவேற்கத்

தக்க அம்சமாக இருக்கும் என்று கருதுகிறேன். அதைச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

வெளியிடப்பட்டுள்ள நூல்களில் - தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டுகின்ற ஒரு நூலில் - நான் அதைப் படித்துப் பார்க்கவில்லை - படித்துப் பார்த்த நண்பர் ஒருவர் சொன்னார் - அது சரியோ தவறோ தெரியவில்லை - எழுத்தாளர்களுடைய வரிசையில் அண்ணாவின் பெயர் இடம் பெறாமல் போய்விட்டது என்று! தமிழ்நாட்டின் எழுத்தாளர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவர் என்று போற்றிப் புகழப்பட்டவர், புகழப்படுகிறவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!

இந்த ஆங்கிலப் புத்தகத்தை வெளிநாட்டில் படிக்கிற ஒருவர், தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் பட்டியல் இவ்வளவுதான் என்று கொள்ளக்கூடும்.

எல்லா எழுத்தாளர்களின் பெயரும் இடம்பெர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. முன்னணியில் உள்ள எழுத்தாளர்களின் பெயர் விடுபட்டுத் தவறான தகவல்களாக வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இதை நான் கூறுகிறேன். மற்றவர்களுடைய எழுத்துச் சுதந்திரத்தில் தலையிட வேண்டும் - ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதல்ல என்னுடைய எண்ணம். அவர்கள் பிடிவாதமாக நாங்கள் இப்படித்தான் செய்வோம் என்று சொல்லலாம். விளக்கங்களைச் சொல்லித் தவறு ஏற்பட்டுவிட்டது என்பதைச் சொல்லி, அதை ஏற்றுக் கொண்டு திருத்தம் செய்யக் கூடியவர்களும் இருக்கக்கூடும்.

ஆகவே இதுபற்றிப் பல்கலைக் கழகம் யோசிக்க வேண்டும்! யோசிக்க வேண்டுமென்று கூறுகிறேன். ஏனென்றால் பல்கலைக் கழகம் சுயாட்சித் தன்மை பெற்றது. சுயாட்சியில் யாரும் குறுக்கிடுவது கேட்கிற சுயாட்சிக்கே இடையூறாக ஆகிவிடும். ஆகவேதான் இதை யோசித்துப் பார்க்க வேண்டுமென்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஆராய்ச்சி நூல்கள் வெளியிடப்படுகிற நேரத்தில் - ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சிக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஆராய்ச்சி செய்வதுகூட நல்லது. உதாரணமாகக் கட்டபொம்மனைத் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் நாம் வைத்திருக்கிறோம். குறிப்பாக, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் கட்டபொம்மன் வெள்ளையனை எதிர்த்த முதல் சுதந்திரப் போராட்ட விடுதலை வீரர் என்று எழுதி, அதைத் தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் ஆழப்படிய வைத்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக நாடகங்களும், திரைப்படங்களும் வந்திருக்கிற நேரத்தில், யாராவது ஒருவர் ஆராய்ச்சி செய்கிறேன் என்று சொல்லிக் கட்டபொம்மன் ஒரு பாளையக்காரத் தலைவன், கொள்ளைக்காரன், அன்னியருக்கு வரி செலுத்தாத காரணத்தினால் இருவருக்கும் விரோதம் ஏற்பட்டது - சுதந்திரப் போராட்ட வீரன் அல்லன் என்று சொல்வதன் காரணமாக - யாருக்கு இலாபம் என்பதைத் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இலாபம் என்பதைவிட எவ்வளவு பெரிய இழப்பு?

ஆண்டாண்டுக் காலமாக வளர்த்து வருகிற விடுதலை உணர்வு இந்த ஆராய்ச்சியின் மூலமாகச் சுக்கல் சுக்கலாக உடைந்து தூளாகிப் படுமட்டுமாகி விடக்கூடும். அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆராய்ச்சியாளர்கள் கை வைக்காமல் இருப்பது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஆகவே நாட்டு மக்களை நல்வழிக்கு அழைத்துச் செல்கிற, வீர உணர்விற்கு அழைத்துச் செல்கிற, நிலைகளுக்கு குந்தகமாக ஆராய்ச்சி மூலமாக யாரும் விளையாடாமல் இருப்பது அனைவருக்கும் நல்லது.

அதே நேரத்தில் மக்களை மூடநம்பிக்கைக்கு அடிமை ஆக்கும் விதத்தில், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் செய்யப்படும் பல்வேறு காரியங்களிலிருந்து மக்களை மீட்க ஆராய்ச்சிகள் நிச்சயமாகத்

தேவை. அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

இன்னும் மகிழ்ச்சியோடு சொல்ல வேண்டுமென்றால், பல்கலைக் கழகத்தின் அறக்கட்டளைகளில் ஒன்று பெரியாருடைய பெயரால் இன்று தொடங்கப்பட்டதாக அறிகிறேன். அந்த அறக்கட்டளையின் மூலம் பகுத்தறிவுக்குத் தேவையான ஆராய்ச்சிகள் நிச்சயமாக நடைபெறாக வேண்டும். அந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தாழ்ந்து கிடக்கிற சமுதாயத்தைச் சாதியின் பெயரால் வீழ்ந்து கிடக்கிற சமுதாயத்தைக் கைதூக்கி விடமுடியுமென்றால் அதற்கு ஆராய்ச்சிகள் நிச்சயமாகப் பயன்பட வேண்டும்.

ஆராய்ச்சி செய்கிறவர்களின் திறமையை நான் குறை கூறவில்லை. ஆனால் அவர்களுடைய நோக்கம் எப்படியிருக்க வேண்டும் என்பதைத்தான் நான் கோடிட்டுக் காட்டுகிறேன். அந்த வகையில் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியிடப்படுகிற நூல்கள் வெளிவரத் தக்க வாய்ப்புக் கூறுகளை ஆராய்ந்து, நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் நூல்களில் - தமிழ் மொழியில் வெளியிடப்படுகிற நூல்களில் - தமிழ்நாட்டின் இலக்கியங்கள், வரலாறுகள், இவைகள் எல்லாம் வெளியிடப்படுகின்ற இதே நேரத்தில், பிற மொழிச் சாத்திரங்கள் தமிழில் வந்தாக வேண்டும்; நம்முடைய தமிழ்ச் சாத்திரங்கள், தமிழ் இலக்கியங்கள், தமிழர்களின் வரலாறு இவைகள் எல்லாம் பிற மொழிகளில் மற்ற நாடுகளுக்குச் செல்கிற அந்தப் பணியையும் நாம் மேற்கொண்டாக வேண்டும்.

உலகத்தில் இருக்கிற பல்வேறு கருத்துக்களை நாம் எடுத்துப் படித்து மகிழ்கிற அதே நேரத்தில் நம்மைப் பற்றியும் உலகம் தெரிந்து கொள்கிற வழிவகைகளைக் கண்டாக வேண்டும். அதற்கும் பல்கலைக் கழகம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். நான்காண்டுக்

காலத்தில் 108 புத்தகங்களைத் கொண்டுவந்த அவர்களுடைய திறமையை நான் பாராட்டுகிறேன்; போற்றுகிறேன்; புகழ்கிறேன். இதே வேகம் தங்குதடை இல்லாமல் நடைபெற்று வரவேண்டும். துணைவேந்தர் அவர்கள், அரசு, தான் தருகிற மானியத் தொகையை உயர்த்திக் கொடுத்து என்று தொடக்கத்தில் குறிப்பிட்டார்கள். அதை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு நீங்கள் காட்டுகிற வேகத்தில்தான் இருக்கிறது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, அந்த வேகத்திற்கு ஏற்ற வெற்றியை நீங்கள் நிதி அமைச்சராகிய என்னிடம் நிச்சயமாகப் பெறலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

1974-ஆம் ஆண்டு சனவரி 26-ஆம் நாள் பல்கலைக் கழகப் புதுநூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000