உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கப்பலோட்டிய தமிழன்

பகுதி 1 · 1 / 1

கப்பலோட்டிய தமிழன்

நாட்டுக்குப் பணியாற்றி, நாட்டு விடுதலைக்காக விழுப்புண்களை ஏற்றுக் கொண்ட வீரமறவன் வ.உ. சிதம்பரனாருடைய நூற்றாண்டு விழா இன்று தமிழகமெங்கும் தனிச் சிறப்போடு கொண்டாடப்படுகின்ற உணர்ச்சி மிகுந்த திருநாளாகும்.

இந்தத் திருநாளில் இந்தியாவினுடைய தலைமை அமைச்சர் திருமதி இந்திராகாந்தி அவர்கள் நம்முடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு தமிழகத்திற்கு வருகை தந்து - அந்தத் திருமகன் பிறந்த தரணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பது தமிழ் நாட்டுத் தியாக வரலாற்றை - இந்தியாவினுடைய பிரதமர் எந்த அளவுக்கு மதிக்கிறார் - பெருமைப்படுத்துகிறார் - என்பதற்குச் சரியானதோர் அடையாளமாகும்.

அப்படிப்பட்ட ஒரு பெருவிழாவில் இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ள உணர்வோடு - பொங்கி எழும் ஆர்வத்தோடு கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தூத்துக்குடி நகரத்திலே - கடற்கரை ஓரத்திலே நாமெல்லாம் கூடியிருப்பது போலத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சென்னை மாநகரத்திலும் வேறு பல மாவட்டத் தலைநகரங்களிலும் கிராமப்புறங்களிலும் வீதிதோறும் வீடுதோறும் இன்றைக்கு சிதம்பரனாருடைய நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடு கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

இந்த நாளில் அந்தப் பெரியவருக்கு, அவரது தியாகத்திற்கு மரியாதை காட்ட - அல்ல, அல்ல - அவரது தியாகம் நமக்கெல்லாம் வழிகாட்டியாக அமைய வேண்டும் என்கிற தன்னலத்தோடு என்று கூடச் சொல்லலாம் - அதற்காக, இந்தத் திருநகரிலே அந்தப் பெருமகனின் சிலையைத் திறந்து வைக்கின்ற பெரியதோர் நிகழ்ச்சியை நாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்.

தமிழக அரசின் சார்பில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டு - மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையிலே விழாக்குழு அமைக்கப்பட்டு - அவர்களுடைய சீரிய பணியின் காரணமாகச் சிதம்பரனாரின் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சிலையினை நம்முடைய பிரதமர் அவர்கள் திறந்து வைக்கிறார்கள்.

இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்கள் - கன்னியாகுமரி முனையிலிருந்து - காஷ்மீர் வரை பல்லாயிரக்கணக்கான - பல லட்சக்கணக்கான தியாகத் தொண்டர்கள் - அப்படிப்பட்டவர்களுக்குத் தலைமை தாங்கிய வீரர்கள் - வித்தகர்கள் - மறவர்குல மாணிக்கங்கள் சிதம்பரனாரைப் போல ஆயிரமாயிரம்பேர் இந்தியத் திருமண்ணிலே பிறந்தார்கள்; அவர்கள் இன்றைக்கு நம்மைவிட்டு மறைந்தார்கள் என்று சொன்னாலும் - நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறார்கள் என்று சொல்லத்தக்க அளவுக்கு அவர்கள் நம் உணர்வுகளோடு ஒன்றிப்போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் திருத்தலம் சிதம்பரனார் உலவிய இடம்; இந்தத் திருத்தலத்தினுடைய ஓரத்திலே இருக்கிற கடலிலே தான் வெள்ளையனை எதிர்த்து முதல் முதலாக ஒரு தமிழ்ப் பெருமகன் - கப்பலோட்டிக் காட்ட முடியும் என்று நெஞ்சுயர்த்தி - அதற்கென ஒரு நிறுவனத்தை அமைத்து - கப்பலோட்டிக் காட்டி - அதன் தொடர்ச்சியாக எழுச்சி மிகுந்த தியாக வரலாற்றின் சின்னமாக மாறி - பேசினால் புயல் - எழுதினால் புயல் - தான் சிறைவைப் பின்பற்றுகிறவன் என்கிற அளவுக்குத் தீவிரவாதத்திலே இறங்கி வெள்ளையனை விரட்டுவதற்கு வீரமிக்க போராட்டம் ஒன்று தேவை என்று முரசொலித்தார். அப்படி முரசொலித்ததின் காரணமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 20 ஆண்டுக்காலம் ஆயுள் தண்டனை - ஒரு முறை அனுபவித்தால் போதாது; இருமுறை அனுபவிக்க வேண்டும் என நாற்பதாண்டுக் காலம் தண்டனை விதிக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு அப்பீலில் அது ஆறாண்டுக் காலமாகக் குறைக்கப்பட்டு - அந்தப் பெருமனார் சிற்றவைக்கு ஆளானார். பல்வேறு சிறைச் சாலைகளிலே தனிமையிலே அடைக்கப்பட்டார்.

கோவைச் சிறைச்சாலையிலே செக்கிழுத்து - கல்லு உடைத்து முத்திரைக் கலயத்திலே கஞ்சி வாங்கிச் சாப்பிட வற்புறுத்தப்பட்டு இந்த நாட்டினுடைய விடுதலைக்காகப் போராடிய மாவீரன் - மறவர் குலத் தளபதி - மறைந்த சிதம்பரனார் அவர்.

அந்தச் சிதம்பரனாருக்கு இங்கே நாம் சிலை எழுப்புகிறோம். சிலை எழுப்புகிற இடம் தூத்துக்குடி நகரம் என்பது மாத்திரமல்ல - மத்திய அரசுக்குச் சொந்தமான பகுதியில் - துறைமுகப் பகுதியில் - சிலை எழுப்பப்படுகிறது.

இன்னும் ஐந்தாறு ஆண்டுக் காலத்திற்குள்ளாக இந்தப் பகுதியிலே வானைத் தொடுகின்ற கட்டடங்கள் பல உயர்ந்து எழக்கூடும். பல தொழிற்சாலைகளுடைய புகைக் கூண்டுகளிலிருந்து கிளம்புகின்ற புகை - ஆகாயத்திலே உலவிக் கொண்டிருக்கிற மேக மண்டலங்களோடு உறவாடக்கூடும்.

அப்படிப்பட்ட தொழிற்சாலைகள் எல்லாம் - அமைய இருக்கின்ற இந்தப் பகுதியில் - எப்பொழுதும் மக்கள் புழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தப் பகுதியில் - கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாருக்கு இன்றைக்கு நாம் சிலை எடுக்கிறோம்.

சிலை எடுக்கின்ற இந்த நேரத்திலே - தமிழகத்தின் சார்பில் இந்தச் சிறப்பு விழாவிற்கு வருகை தந்து நம்மை யெல்லாம் மகிழ்வித்திருக்கின்ற இந்தியாவின் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் அவர்களுக்கு என்னுடைய நன்றியை, வணக்கத்தை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வந்தவர்களிடத்திலே கோரிக்கைகளை எழுப்புவது நியாயமல்ல என்றாலும் - ஓகோ! இதற்காகத்தான் நம்மை அழைத்தான் போலும், என்று எண்ணிக் கொள்வார்களோ என்ற எண்ணம் தோன்றாமலில்லை. என்றாலும், “பல்வேறு மாநிலங்களில் அந்த மாநிலங்கள் எல்லாம் தாங்கள் சேர்த்த நான் பாடுபட வேண்டாமா” என்கிற கேள்விக் கணைகளை பிரதமர் அவர்கள் என்னைப் பார்த்துத் தொடுப்பார்கள் என்று எனக்குத் தெரிந்தாலும் நம்முடைய தேவைகளையும், நாம் சொல்லி வைத்தால் அது நடக்க வேண்டிய நேரத்தில் அம்மையார் அவர்களுடைய நினைவிலே - நடக்க வேண்டிய நேரம் என்பது வேகமாக நடைபெறுகின்ற நேரம் - அந்த நேரத்திலே நடைபெறும் என்கிற காரணத்தினால் அவர்களிடத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

நீண்ட காலமாக நம்முடைய கவனத்திலே இருந்து வருவதும் தமிழகத்தினுடைய தொழில் வளர்ச்சிப் பெருக்குக் அடியாக - தமிழ்நாட்டு மக்களுடைய வாணிபத்தைப் பெருக்கக் கூடியதும் - இந்தியாவினுடைய வாணிபத்தைப் பெருக்கக் கூடியதும், நமது மதிப்பிற்குரிய சுப்பரமணியம் போன்றவர்களுக்கெல்லாம் நீண்ட காலமாக உள்ளத்திலே உதித்தெழுந்த திட்டமாக மென்கின்ற ஆலைக் கனவுகளை எழுப்பிக் கொண்டிருப்பதுமான - சேது சமுத்திரத் திட்டத்தை விரைவிலே

அளிக்க வேண்டுமென்று சிதம்பரனாருடைய சிலையைத் திறந்து வைக்கிற நேரத்திலே - இந்தியாவினுடைய பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் - பிரதமர் அவர்களுடைய முன்னிலையில் நான் - ஓர் அறிவிப்பைச் செய்கிறேன்.

இந்த அறிவிப்பு சென்னை மாநகரத்திலே ஒரு பகுதி நீண்ட நெடுங்காலமாக ‘ஜார்ஜ் டவுன்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. அந்த ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்படும் பகுதியை ‘சிதம்பரனார் நகர்’ என்று மாற்ற வேண்டுமென்று 1947-இல் இருந்து ஒரு கோரிக்கை இருந்து வருகிறது.

அந்தக் கோரிக்கையும் வெகு விரைவிலே நிறைவேற்றப்பட்டு - சென்னையிலே உள்ள ஜார்ஜ் டவுன் - சிதம்பரனார் நகராக மாறும் என்கிற அந்த அறிவிப்பை - நம்முடைய பிரதமர் அவர்களுடைய முன்னிலையில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயர் மாற்றுவதா? இது ஒரு பெரிய அறிவிப்பா? என்று கேட்கக்கூடும். இலட்சியங்களுக்காகப் பெயர் மாற்றுவது முக்கியமானது என்பது அண்ணையிலே பிரதமர் அவர்கள் சிம்லா மாநாட்டிற்குச் சென்றபோது - அங்கே ஒரு கட்டடத்திற்கு இடப்பட்ட பெயரை - இலட்சிய நோக்கத்தோடு மாற்றச் சொன்னார்கள் என்கிற காரணத்தினாலேதான் அவர்களுடைய முன்னிலையிலே இந்தப் பெயர் மாற்றத்தை நான் இங்கே தெரிவிக்கிறேன்.

வ.உ. சிதம்பரனாருடைய பெயர் என்றும் நின்று நிலவக்கூடிய பெயர்.

வ.உ.சி. என்றால்,

‘வ’ - வழக்கறிஞர்.

‘உ’ - உரிமைக்காகப் போராடிய - வாதாடிய வழக்கறிஞர்.

‘சி’ - உரிமைக்காக வாதாடிச் சிறை புகுந்த வழக்கறிஞர்.

வ.உ.சி. என்பது வ.உ. சிதம்பரனார் என்பதை மாத்திரம் குறிப்பதல்ல - உரிமைக்காக அவர்கள் வாதாடிச் சிறை செல்லவும் தயாராக இருந்த வ.உ.சி. அவர்களுடைய சிலையை நமது பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள் என்று கூறி வ.உ.சி. அவர்களுடைய திருநாமம் வாழ்க; வாழ்க; இனிது நிலை பெறுக என்று எடுத்துரைத்து, நமது பிரதமர் அவர்கள் வ.உ.சி. அவர்களுடைய சிலையை இங்கே உங்கள் அனைவருடைய அன்பான வாழ்த்துக்களோடும் திறந்து வைப்பார்கள் என்று கூறி அமர்கின்றேன்.

1972-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் நாள் தூத்துக்குடியில் வ.உ.சி. சிலை திறப்பு விழாவில் ஆற்றிய உரை.

முதற் பதிப்பு : மே 2000