உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

காஞ்சிபுரம் - சி.வி.எம். அண்ணாமலை இல்ல மணவிழா

பகுதி 1 · 1 / 1

காஞ்சிபுரம் - சி.வி.எம். அண்ணாமலை இல்ல மணவிழா

செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களுடைய பேரனும், கமலக்கண்ணன் - மணிமேகலை ஆகியோரின் இளைய மகனுமான செல்வன் சீர்வேந்தனுக்கும், திருத்தணி கோதிலா திரையரங்கம் உரிமையாளர் சபாபதி - உஷாராணி ஆகியோரின் செல்வி கோகிலாவிற்கும் நம் அனைவருடைய இனிய நல்வாழ்த்துக்களோடு மணவிழா நிகழ்ச்சி இங்கே நிறைவேறியிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியிலே உரையாற்றிய அனைவரும் இது நம்முடைய குடும்ப நிகழ்ச்சி என்ற அந்த உணர்வோடு கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்கள். திராவிட இயக்கத்தின் பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று சி.வி.எம். அண்ணாமலை அவர்களுடைய குடும்பமாகும். இந்தக் குடும்பம் அண்ணாமலை காலத்திலேயிருந்து இன்று வரையில் அவர் விட்டுச் சென்ற அதே வழியில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் காட்டிய வழியில் நடைபோட்டுக் கொண்டிருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும்.

ஆனால் வியப்புக்குரிய ஒன்றல்ல.

ஏனென்றால் சுயமரியாதை தழைத்தோங்குகின்ற வகையில் தன்னுடைய இல்லத்தை மாத்திரமல்ல, இந்த வட்டாரத்தையே; ஏன் தமிழ்நிலத்தையே ஆக்கிட வேண்டுமென்கிற உணர்வோடு அயராத உழைப்பை நல்கியவர் சி.வி.எம். அண்ணாமலை. அவர்களோடு நான் பழகிய காலம் பெருமைக்குரிய காலம். என்றென்றும் நினைத்து மகிழத்தக்க காலம். நெஞ்சில் எப்போதும் நிழலாடிக்கொண்டிருக்கின்ற காலம், அந்தக் காலம்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்திலே எந்த நிகழ்ச்சியானாலும் “அண்ணாமலையைக் கூப்பிடு” என்று சொல்கின்ற அளவிற்கு அண்ணா அவர்களோடு நெருங்கிப் பழகியவர் அண்ணாமலை அவர்கள். தம்பி பரிமளம் அவர்கள் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல் அவருடைய மடியிலே வளர்ந்தேன் என்று அவர் சொன்னதைப் போல், பரிமளம் மாத்திரமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய பகுத்தறிவு இயக்கம், தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம், அண்ணா கண்ட திராவிட முன்னேற்றக் கழகம் - இவைகள் எல்லாம் சி.வி.எம்.

அண்ணாமலை அவர்களுடைய மடியிலே தவழ்ந்து வளர்ந்தவை என்பதை யாரும் மறுக்க இயலாது.

பிற்படுத்தப்பட்ட, ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலே சி.வி.எம். அண்ணாமலை அவர்கள் ஒரு செழும் சுடராகத் திகழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கையிலே எத்தனையோ ஏற்றத்தாழ்வுகளெல்லாம் வந்ததுண்டு. ஆனால் இரண்டையும் ஒன்றாகக் கருதி சம நிலையில் அவைகளைச் சிந்தித்து அதற்காக ஏற்றம்

கிடைத்த நேரத்திலே பெருமகிழ்ச்சியோ அல்லது தாழ்வு ஏற்படுகிற நேரத்திலே சோகமோ கொண்டிராமல் இரண்டையும் ஒன்றாகக் கருதி இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்ட எழுச்சியாளர்தான் செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அவர்கள்.

அவருடைய குடும்பத்திலே நடைபெறுகின்ற நிகழ்ச்சியிலே நாங்கள் எல்லாம் கலந்துகொள்வது இயல்பான ஒன்றாகும். இந்தக் குடும்பத்திலே இந்த நிகழ்ச்சிக்கு மாத்திரமல்ல. பல்வேறு நிகழ்ச்சிகளிலே நான் கலந்துகொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், நான் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் சி.வி.எம். அண்ணாமலை இல்லத்திலே நடைபெறுவதில்லை என்ற அளவிற்கு இந்தக் குடும்பத்தோடு தொடர்பு கொண்டவன் நான் என்பதை காஞ்சி வட்டாரத்திலே இருக்கின்ற நீங்கள் எல்லாம் நன்கறிவீர்கள்.

என்னுடைய நினைவில் இன்றைக்கும் நிழலாடிக் கொண்டிருக்கின்ற சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன். தி.மு.கழகம் 1949-ஆம் ஆண்டு அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அதனுடைய முதல் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றபோது, அந்த மாநாட்டிற்கான செலவுகளுக்கு நிதி திரட்ட வேண்டுமென்று அண்ணா குறிப்பிட்டு - அந்தப் பணியை என்னிடத்திலே ஒப்படைத்தார்கள். அப்பொழுது நான் கழக அமைப்புகளுக்கு விடுத்த வேண்டுகோள் - நான் உங்கள் ஊர் கூட்டத்திலே வந்து பேசுவதென்றால் அதற்காகச் சென்னையில் நடைபெறுகின்ற கழக மாநில மாநாட்டிற்கு ஒரு கணிசமான தொகையை நிதியாகத் தர வேண்டும் என்பதாகும்.

அந்தக் கணிசமான தொகை 1952-ஆம் ஆண்டில் எவ்வளவு என்று கேட்டால் நூறு ரூபாய்

இருநூறு ரூபாய் அதிகபட்சம் ஐநூறு ரூபாய்தான். தற்போது காஞ்சிபுரத்தில் அன்றைக்கு நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர் கண்டோன் மெண்ட் சண்முகம் ஐந்து இலட்சம் ரூபாயினை இந்த மாவட்டத்தின் சார்பில் தந்தார். ஐம்பது இலட்சம் ரூபாய் கூட நாம் நிதி திரட்டிய காலத்திலே தரப்பட்டிருக்கின்றது. ஆனால் அன்றைக்கு அதிகபட்சம் ஐநூறு ரூபாய். கொடியேற்று விழா என்றால் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று இப்படி அன்றைக்குக் கட்டணம் வைத்து அந்தக் கூட்டங்களை விடிய விடிய இந்த மாவட்டத்திலே நடத்தி - என்னையும் அழைத்து அவைகளை வெகு சிறப்பாக நடத்தி - ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் - ஏழெட்டு கூட்டங்களில் பேசி வசூலித்துக் கொண்டு - சேர்ந்ததை எடுத்துக்கொண்டு நானும், சி.வி.எம்.

அவர்களும் காரில் சென்னைக்குச் செல்வோம்.

சென்னையில் எஸ்.ஐ.ஏ. மைதானத்தில்தான் மாநாடு. மாநாட்டிற்கான பணிகள், பந்தல் போடும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். அங்கே குவிக்கப்பட்டிருக்கும் மணலில் அண்ணா அவர்களும் கழக முன்னணியினரும் அமர்ந்திருப்பார்கள். நாங்கள் விடியற்காலை 2 மணிக்கோ, 3 மணிக்கோ இந்தப் பணத்தோடு செல்லும் போது எங்களை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பார்கள். எங்களையல்ல நாங்கள் மாநாட்டுச் செலவுக்காகக் கொண்டு வருகின்ற பணம் எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தூக்கி வளர்த்த பெருமைக்குரியவர்களில் ஒருவர் சி.வி.எம். அவர்கள். அவருடைய இல்லத்திலே

நடைபெறும் மணவிழா நிகழ்ச்சியில் மணமகன் சீர்வேந்தன் எத்தனை பட்டங்களைத் கல்வித் துறையிலே பெற்றிருக்கிறார் என்பதை இந்த அழைப்பிதழிலே பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

இந்தச் சமூகத்திலே ஒரு செல்வன் அல்லது செல்வி இத்தகைய பட்டங்களைப் பெறுவதென்றால் ஐம்பதாண்டு காலத்திற்கு முன்பு நடக்க முடியாத காரியம். ஆனால் திராவிட இயக்கம் தோன்றி, அதன் தலைவர்கள் செய்த முயற்சியினால்தான் இடஒதுக்கீடு - அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டோருக்கெல்லாம் இன்றைக்கும் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

அதனால்தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நண்பர் கிருஷ்ணசாமி அவர்கள், காங்கிரஸ் இயக்கத்திலே இருந்தாலுங்கூட, இடஒதுக்கீட்டின் பெருமையை அவரால் மறுக்க முடியவில்லை. அதை உணர்ந்து இங்கே பாராட்டிப் பேசினார். இந்தச் சமூக மக்கள் - நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தால் மாத்திரம் போதாது. எங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக அறிவித்தால் தான் இன்னும் அதிகப் பயன் இந்தச் சமுதாயத்திற்குக் கிடைக்கும் என்று குரல் கொடுத்த நேரத்தில் - அந்தக் குரல் ஒரு காலத்தில் கவனிப்பாரற்றுப் போனாலும்கூட 1989-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பேற்றதும், குரல் கிளம்பாத நேரத்தில்கூட வலிய அழைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இனி மேல் இருபது சதவிகிதம் தரப்படுமென்று அறிவித்ததை இங்கே கிருஷ்ணசாமி அவர்கள் மிகுந்த நன்றி உணர்வோடு குறிப்பிட்டார்கள்.

இந்தச் சமுதாயத்தின் நன்றி உணர்வை எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால் நானே மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு இந்த ஆதாயம் கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் மொத்தச் சமுதாயமும் பயன் பெற வேண்டுமென்பதற்காகவும் பல்வேறு இடஒதுக்கீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு - முன்னேறிய சமுதாயத்தினருக்கு என்று இருக்கின்ற இந்த நிலையினால் சில நேரங்களில் ஒருசில கேடுபாடுகள் எல்லாம் உண்டாவதை நான் மறுக்கவில்லை.

நோயைக் குணப்படுத்துவதற்காக ஒரு மருந்தைக் கொடுக்கும்போது, அதற்கு ("Side Effect") சைடு எபெக்ட் என்று கூறுவார்கள். அதனால் விளையக் கூடிய வேறு சில தீய விளைவுகளும் உண்டு. நல்ல மருந்தைக் கொடுத்தால் கூட, நல்ல மருந்து வேறு சில பக்க விளைவுகளை உடலிலே ஏற்படுத்தக்கூடும். அதைப் போல இடஒதுக்கீட்டின் காரணமாக இன்றைக்குச் சாதி மாறுபாடுகள், சாதி வேறுபாடுகள் நாட்டிலே தலை தூக்கியிருக்கின்றன. அதற்காக நோய் தீர நல்ல மருந்தைக் கொடுக்காமல் இருக்க முடியாது.

இந்த மருந்துக்குப் பக்க விளைவு (சைடு எபெக்ட்) ஏற்படுமே என்பதற்காக நோயை அலட்சியப்படுத்தி நல்ல மருந்தை கொடுக்காமல் இருந்துவிட முடியாது. பக்க விளைவு வந்தால் அதை எப்படிச் சந்திக்க வேண்டும்? எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்பதைச் சிந்தித்து நல்ல மருந்தைக் கொடுத்துத்தான் தீர வேண்டும்.

எனவேதான் 1920-ஆம் ஆண்டுக்கு முன்பு திராவிட இயக்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அரு மருந்துதான் இடஒதுக்கீடு என்பதாகும். அதுவும் அந்த இடஒதுக்கீட்டிற்கு - வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்குத் தமிழ்நாட்டிலே வரலாற்றிலே இடம்பற்றிடக்கூடிய ஒரு ஊர் உண்டு என்றால் அது காஞ்சிபுரம்தான்.

இந்தக் காஞ்சிபுரத்திலே 1925-இல் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. தலைமையிலே நடைபெற்ற சென்னை மாகாண மாநாட்டிலேதான் அன்றைக்குக் காங்கிரஸ் கட்சியின் தென்னாட்டுத் தளபதியாக இருந்த தந்தை பெரியார் அவர்கள், ஜஸ்டிஸ் கட்சி கொண்டு வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - நீதிக்கட்சி கொண்டு வந்த அந்த இடஒதுக்கீட்டுத் திட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு தீர்மானம் போட வேண்டுமென்று பெரியார் வலியுறுத்தினார்.

ஆனால் அன்றைக்குக் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உடனே தந்தை பெரியார் அவர்கள் துண்டை உதறித் தோளிலே போட்டுக்கொண்டு, நான் காங்கிரஸ் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறேன். சமூக நீதிக்கு - வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு இடம் தராத இந்தக் கட்சியிலே நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி சபதம் செய்து வெளியேறிய ஊர்தான் இந்தக் காஞ்சிபுரம் என்பதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

எனவே இட ஒதுக்கீட்டிலே மிக முக்கியமான ஒரு இடத்தை, வரலாற்றுக்குரிய இடத்தைப் பெற்ற காஞ்சிபுரத்திலே சி.வி.எம். அண்ணாமலை போன்ற தலைமைத் தளபதிகள் தோன்றுவதொன்றும் வியப்புக்குரிய விஷயமல்ல. எனவேதான் இங்கே சி.வி.எம். அண்ணாமலை தோன்றினார். அவரைத் தொடர்ந்து

பல முன்னணியினர் திராவிட இயக்கத்திலே இன்றைக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

சி.வி.எம். அவர்களுடைய கொள்கைகளை நெஞ்சிலே நிலையாக வைத்துக்கொண்டு பணியாற்றுகின்ற தம்பி பொன்மொழியின் நன்றியுரை பேச்சினைக் கேட்டீர்கள். அதிலே இடம்பெற்றிருந்த கொள்கை அழுத்தத்தை நீங்கள் எல்லாம் கண்டீர்கள். அத்தகைய குடும்பத்திலே இன்றைக்கு சீர்வேந்தனும் கோகிலாவும் மணமக்களாக நம் முன்னால் காட்சி தருகிறார்கள்.

மணமகனின் பெயர் சீர்வேந்தன். சீர்வேந்தனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, சீர் அதிகமாகக் கேட்கின்ற வேந்தனாக இருக்கக் கூடாது. (பலத்த கை தட்டல்) அப்படி இருக்கின்ற காரணத்தால்தான் பல குடும்பங்களிலே தகராறெல்லாம் ஏற்பட்டு என்னென்னவோ நடைபெறுகின்றது. அதற்கெல்லாம் இடம் தராமல் சீர்வேந்தன் பெயரளவில் சீரான வேந்தனாக இருக்க வேண்டுமென்று கேட்டு, மாமனார் வீடு வள்ளல் என்ற பட்டத்தைப் பெற்ற காரணத்தால் அதிக சீர் வரிசைகளை எதிர்பாராமல் சீரான வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று சீர்வேந்தனையும் கோகிலாவையும் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

வாழ்க மணமக்கள்.

22-11-98 அன்று காஞ்சிபுரத்தில் சி.வி.எம். அண்ணாமலை இல்ல மணவிழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000