உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் விழாவில் கலைஞர் உரை

பகுதி 1 · 1 / 1

கலைவாணர் நினைவுக் குழுவின் தலைவர், அருமை நண்பர் ஏ. எல். சீனிவாசன் அவர்களே, அருமை நண்பர் சின்ன அண்ணாமலை அவர்களே, கலையுலகப் பெருமக்களே, தாய்மார்களே, நண்பர்களே.

ஆண்டு தோறும் நடைபெறுகின்ற கலைவாணர் நினைவு நாள் விழா இந்த ஆண்டும் மெத்த உணர்ச்சிப் பெருக்கோடும், கலைவாணரை நினைவுகூர்ந்து, அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்திட வேண்டும் என்கின்ற பேரார்வத்தோடும் நடைபெறுவதைக் காண நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

கலைவாணர் அவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றியினை இந்த ஒரு வகையிலேதான் செலுத்திட முடியும் என்பதை நான் சுட்டிக்காட்டாமல் இருக்க இயலாது.

கலைவாணருடைய குடும்பம் என்பது அவர் கட்டி வாழ்ந்த அந்த வீட்டுக்குள்ளே இருக்கின்ற ஒரு சிலர் மாத்திரமல்ல. கலைவாணருடைய குடும்பம் என்பது கலைக்குடும்பம்.

அந்தக் கலைக்குடும்பத்திலே நலிந்துபோகின்ற யாரையும் நலிந்துபோகாமல் காப்பாற்ற, வாடி வதங்காமல் வாழ்விக்க, அவர்களுடைய இல்லத்திலும் பெரிய ஒளிவிளக்குகளை ஏற்றி வைக்க முடியாவிட்டாலும், சிறிய அகல்விளக்குகளையாவது ஏற்றி வைக்க இந்த நாள் பயன்பட வேண்டும் என்ற முறையிலேதான், ஆண்டு தோறும் கலைவாணரோடு நெருங்கிப் பழகிய, அன்போடு பழகிய, கலைவாணருடைய விசுவாசத்திற்கு, கலைவாணருடைய பெருமதிப்பிற்குப் பாத்திரமாக இருந்த நண்பர்கள், கலையுலகத் தோழர்கள், அவர்கள் வாழ்விலே நலிந்திருப்பார்களேயானால், அவர்களுக்குச் செய்திட வேண்டிய மரியாதையை முடிந்த வரையிலே நாம் செய்து வருகின்றோம்.

தொடக்கத்திலே கலைவாணரோடிருந்து, கலைவாணருடைய எண்ணத்திற்கேற்ப புரட்சிகரமான பாடல்கள் பலவற்றை இயற்றித் தந்த உடுமலை நாராயணக் கவிராயர் அவர்களுக்கு இந்த இடத்திலேதான் சிறப்பு செய்யப்பட்டது. பொன்னாடை போர்த்தி, பொற்கிழியும் வழங்கினோம். ஏறத்தாழ பதினைந்தாயிரம் ரூபாய்க்குமேல் பணமுடிப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது.

அப்போது இந்த இடத்திற்குப் பெயர் சிறுவர் அரங்கம் அல்லது பாலர் அரங்கம்.

நான் அந்த விழாவிலேதான் குறிப்பிட்டேன்: இந்த இடம் புதுப்பிக்கப்பெற்று, கலைவாணர் அரங்கம் என்கின்ற பெயரை விரைவிலே சூட்டிக்கொள்ளும் என்று குறிப்பிட்டேன்.

இந்தப் பெயரைச் சூட்டுவதற்கு முன்பிருந்த அரங்கம் அவ்வளவு தகுதி வாய்ந்தது அல்ல என்ற காரணத்தாலும், சென்னை மாநகரத்திலே நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், வேறுபல பொது நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்ற வகையிலே இதனை அமைத்திட வேண்டும் என்று எண்ணிய காரணத்தாலும், சற்றொப்ப இருபத்தைந்து இலட்ச ரூபாய் செலவில் இந்த மண்டபம் புதிதாக உருவாக்கப்பட்டு, கலைவாணருடைய பெயர் ஏற்றி வைக்கப்பட்டது.

அருமை நண்பர் அப்துல் சமது அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல், கலைவாணருடைய பெயர் வைப்பதா என்று கேட்பதற்குப் பதிலாகச் சில பேர், பாலர் அரங்கம் என்கின்ற அந்தப் பழைய பெயரை மாற்றுவதா என்று கேட்டார்கள்.

ஆனால் அவர்களுடைய கேள்வியைத் தமிழ்ச் சமுதாயமும் கலையுலகமும் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாகத்தான் இந்த மண்டபம் இங்கே கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது என்பதை நான் மிகுந்த பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.

இதைப் போலவே திருக்குற்றாலத்தில் ஓர் அரங்கம் நிர்மாணிக்கப்பட்டது. அந்த அரங்கத்திற்கு என்ன பெயர் சூட்டுவதென்று அங்குள்ள அதிகாரிகள் ஆய்வு நடத்திக்கொண்டிருந்தபோது, நான் நெல்லை மாவட்டத்திற்கு, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில், சென்றேன்.

நான் அதிகாரிகளை அழைத்து, திருக்குற்றாலம் கலைவாணருக்கு மிகவும் பிடித்தமான இடம்; ஆகவே இந்த அரங்கத்திற்கும் கலைவாணருடைய அரங்கம் என்கின்ற பெயரையே சூட்டுங்கள் என்று நான் அவர்களுக்கு யோசனை கூறினேன்.

குற்றாலத்திலே எழுந்திருக்கின்ற அந்த அரங்கத்தினுடைய பெயரும் கலைவாணர் அரங்கம் என்றுதான் திகழ்கிறது.

இந்த அரங்கம் இந்தச் சென்னை மாநகரத்திலே பல கலைஞர்களுடைய தேவையை நிறைவு செய்கின்ற அளவிற்கு, பல நிறுவனங்களுடைய தேவையை நிறைவு செய்கின்ற அளவிற்கு பயன்பட்டு வருகின்றது.

இப்படிப்பட்ட ஒரு மாமன்றத்தில் ஆண்டு தோறும் கலைவாணருக்கு நினைவு விழாவை நடத்தி, அவர் எந்த வள்ளல் தன்மையோடு வாழ்ந்தாரோ, அந்த அளவிற்குப் பெரும் தொகையினை நம்மால் வழங்க இயலாவிட்டாலும், முடிந்த அளவிற்கு அவரோடு நெருங்கிப் பழகிய நண்பர்களுக்குச் சிறிய அளவு பொற்கிழியினை வழங்குவதென்றால், வழங்கப்படுகின்ற தொகையின் அளவு குறைவாக இருந்தாலும், உணர்ச்சியின் அளவு மிகப் பெரியது என்பதை மாத்திரம் இந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொண்ட நண்பர்களுக்கு நான் கூறிக்கொள்கிறேன்.

பரிசுகளைப் பெற்றவர்களைக் கண்டீர்கள். தங்கப்பன் அவர்களும், பகவதி அவர்களும் எந்தக் கோலத்திலே இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதை நேரில் நீங்கள் உணர்ந்தீர்கள்.

அதைப்போலவே பல்வேறு நாடகங்களிலே மிகத் திறம்பட நடித்த வெங்கடாசலம் அவர்கள் எத்தகைய நிலையிலே இருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

அவர்களுக்கெல்லாம் நாம் செய்கின்ற இந்தச் சிறு உதவி, அவர்களுடைய வாழ்க்கையிலே ஓரளவு நிம்மதியாவது ஏற்படுத்துமேயானால், அந்த நிம்மதிதான் கலைவாணருடைய காலடியிலே நான் வைக்கின்ற காணிக்கை என்று மாத்திரம் நான் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.