கலை வளர்ப்போம்
பகுதி 1 · 1 / 1
கலை வளர்ப்போம்
தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெறுகின்ற இந்த இனிய விழா, நாமனைவரும் சந்தித்து, இடையிடையே துவண்டு போகின்ற தமிழ் உணர்வையும், கலை உணர்வையும் புதுப்பித்துக் கொள்வதற்குப் பயன்படுகிற வகையில் அமைந்துள்ளது.
தமிழின் கலையை இழக்கச் சம்மதிக்க மாட்டான்; கலையை வளர்ப்பதிலும், கலையின் மூலம் கருத்துக்களை வழங்குவதிலும், சமுதாயத் தொண்டாற்றுவதிலும் இன்று தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கின்ற மறுமலர்ச்சி, உள்ளபடியே பாராட்டத்தக்கதாக - வரவேற்கத் தக்கதாக அமைந்துள்ளது என்றாலும், இடையிடையே கலை தோன்றுவதற்கும் கலை இடம் கொடுத்து விடுகின்ற காரணத்தால் கலை கலையாகவே இருந்திட வேண்டும், கலைகள் தோன்றிடாமல் கலை வளர்க்கப்பட வேண்டும் என்ற சூளுரையை இந்த விழாவில் நாமனைவரும் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டுமென்று என்னுடைய அன்பான வேண்டுகோளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்ற ஆண்டு இந்த மாமன்றத்திலே நாமெல்லாம் கூடியபோது, சங்கீத நாடக சங்கம் விடுத்த அழைப்பின் பேரில் கலந்து கொண்டோம். இந்த ஆண்டு இயல் இசை நாடக மன்றம் தந்த அழைப்பின் பேரில் கூடியிருக்கிறோம். பெயரில் மாற்றம் இருந்தாலும், இங்கே நடக்கிற நிகழ்ச்சிகளில் மாறுபாடு இல்லை, அளிக்கப்படுகிற
சிறப்புக்களில் வேறுபாடு இல்லை; தேர்ந்தெடுக்கப்பட்ட விதிக்கப்படுகிற தகுதிகளில் முரண்பாடில்லை! ஆனால் தமிழ் உணர்வில், அதற்கும் இதற்கும் இடையில் மகத்தான வேறுபாடு உண்டு. அந்த வேறுபாட்டின் அடிப்படையில் கடந்த இரண்டொரு திங்களுக்கு முன்பு நடைபெற்ற வேறொரு விழாவில் நாமவரும் நானும் கலந்து கொண்டபோது, தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் என்ற பெயரை இயல், இசை, நாடக மன்றம் என்று மாற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அந்தக் கருத்தை உடனடியாக இந்த மன்றத்தினரும் அரசினரும் ஏற்றுக் கொண்டு, பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது.
பெயர் மாற்றங்கள் சிலருக்குச் சாதாரணமாகத் தோன்றலாம்; இது என்ன, பெயர் மாற்றம்தானே, இது தேவையா என்று தோன்றலாம். சிலருக்கு ‘ஏன் மாற்ற வேண்டும்’ என்று கேட்கத் தோன்றலாம்! ஆனால் பெயரில் எத்தகைய உணர்வுகளை நாம் உள்ளடக்க முடியும் என்பதற்கு இந்தப் பெயர் மாற்றம் தக்க சான்றாகும்.
சங்கீத நாடக சங்கம் என்று விருதுகள் வழங்கும் நேரத்தில், சங்கீதத் துறையிலும் நாடகத் துறையிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த விருதுகளைப் பெற முடியும். ஆனால் கொஞ்சம் வரம்பு கடந்து, ‘சினிமாத் துறையிலே உள்ளவர்களும், கதை வசனம் எழுதுபவர்கள் எல்லாம்கூட இங்கே விருதுகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று யார் விருது பெற்றாலும் அவர்கள் இயல், இசை, நாடகம் என்ற இந்த மூன்று துறையின் வட்டத்திற்குள் வருபவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற வகையில் இந்தப் பெயர் மாற்றம் பொருத்தமுடையதாக அமைந்திருக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும், நாவலரும் நானும் எங்களுடைய மாவட்டமான தஞ்சை மாவட்டத்தின் சார்பில் பெருமைப்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த
விருதுகள் வழங்கப்படுகின்றன. மறைந்த ஏழு பேருடைய படங்கள் இங்கே திறக்கப்பட்டன என்றால், அதிலே மதுரை பொன்னுச்சாமி அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் தஞ்சை மாவட்டத்திற்குச் சொந்தமானவர்கள் என்று சொல்லுவதாலோ, மேலும் இங்கே இன்று 29 பேர் கலைமாமணி விருது பெற்றார்கள் என்றால், அவர்களிலே பன்னிரண்டுக்கு மேற்பட்டவர்கள் தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் என்று சொல்லுவதாலோ நான் மாவட்ட சுயநலத்தோடு பேசுவதாகக் கருதிக் கொள்ளக்கூடாது.
தஞ்சை மாவட்டம் எப்படி நெற்களஞ்சியமாக இருக்கிறதோ அதைப்போலக் கலைக் களஞ்சியமாகவும் விளங்குகிறது என்பதற்கு இது ஓர் ஆதாரமே தவிர வேறல்ல.
மற்ற மாவட்டத்துக்காரர்கள் யாரும் கோபித்துக் கொள்ளக்கூடாது. தஞ்சை மாவட்டத்திலே முன்பெல்லாம் சொல்லுவார்கள்; திட்டப்பா போன்ற பெரிய மேதைகள், சுந்தராம்பாள் அம்மையார் போன்ற பெரிய நல்ல கலைஞர்கள், கலை வல்லுநர்கள் எல்லாம், தஞ்சை மாவட்டத்திலே சென்று ஒரு கலை நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு விட்டால், அதற்குப் பிறகு அவர்கள் ஏதோ விசுவாமித்திரர், வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றால் எவ்வளவு பெருமையாகக் கருதுவாரோ அதைப் போலக் கருதுகிற காலம் ஒன்று இருந்தது.
இருந்தது என்று சொல்லுவதால் இறந்தகாலம் என்று கருத வேண்டாம். இன்றைக்கும் இருக்கிறது என்ற பெருமை பேருதான் அதை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அப்படிப்பட்ட கலை, தஞ்சை மாவட்டத்திலே இருந்து பிறந்து, செழித்து, வளர்ந்து, இன்று தமிழகமே ஒரு கலைப் பூங்காவாக திகழ்கிற அளவிற்கு இருக்கிறது என்ற பெருமைக்கு எல்லாக் கலைஞர்களும் உரியவர்கள். எனவே பரிசு பெற்ற அத்தனை கலைஞர்களையும் நான் பாராட்டுகிறேன்.
பண்டைக் காலத்தில் அரசர்களிடம் ஜமீன்தார்களிடம் கலைஞர்கள் பரிசுகளைப் பெற்றார்கள் என்று
நாவலர் குறிப்பிட்டார். இன்றைக்குப் பரிசு கொடுக்க அரசு வம்சங்கள் அழிந்து விட்டன. ஜமீன்தார்கள் அழிக்கப்பட்டனர். ஆனால் பரிசு பெற்ற கலைஞர்கள் வம்சம் அழியாமல் இருக்கிறது. தொடர்ந்து வளர்ந்து கொண்டும் இருக்கிறது. அதற்குக் காரணம் இதை அழிக்க முடியாது; கலை உள்ளம் உள்ளவர்களையும் கூண்டில் அடைத்துவிட முடியாது.
பொறுப்பை ஏற்கின்றவர்களுக்கு கலையுள்ளம் இருக்கின்ற நேரத்தில்தான் அவர்களால் மனிதாபிமான உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ள முடிகிறது. கலையுள்ளம் படைத்தவர்கள் பொறுப்பேற்கும்பொழுது அவர்கள் தாம் படைத்த பாத்திரங்களையே நாட்டில் காண்கிறார்கள்.
இன்று பரிசுபெற்ற சேதுநாத் அரங்கண்ணல் அவர்களானாலும், மற்ற எழுத்தாளர்களானாலும், பல பாத்திரங்களைப் படைக்கின்ற ஆற்றல் படைத்தவர்கள். ஏழையைப் பிச்சைக்காரனைத் தொழுநோயாளியைப் பாத்திரமாகப் படைக்கின்றோம். அவர்களுடைய கஷ்டங்களை எல்லாம் எழுதுகிறோம். அங்கே அந்தப் பாத்திரமாகவே மாறுகிறோம். ஒரு பிச்சைக்காரனைப் பற்றி எழுதுகிற நேரத்தில் அந்த எழுத்தாளரும் பிச்சைக்காரனாகவே மாறினால்தான் அந்தப் பாத்திரம் ஒழுங்காக இருக்க முடியும்.
அப்படிப்பட்ட பாத்திரம் படைக்கப்பட்ட பிறகு எழுத்தாளனாகவே நின்று விடுவார்களானால், அந்தப் பாத்திரங்களுக்காக வாதாடுபவர்களாக மட்டுமே அவர்கள் இருப்பார்கள்.
ஆனால் அந்த எழுத்தாளர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து விடுவார்களானால் நாம் படைத்த பாத்திரங்கள் நாடக மேடையில் மாத்திரமல்ல, நாட்டிலும் நடமாடுகிறார்கள். ஆகவே அவர்களை வெறும் பாத்திரங்களாகப் படைப்பது மாத்திரமல்ல, அவர்களுடைய கையிலே இருக்கிற பிச்சைப் பாத்திரங்களைப்
பிடுங்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். இதற்கு அடிப்படைதான் கலை உள்ளத்தோடு பிரச்சினைகளை அணுகுகின்ற தன்மையாகும். ஆகவே, கலை உள்ளம் படைத்தவர்கள் நிச்சயமாக மனிதாபிமானத்தோடு இருப்பார்கள். இது அனைவருக்கும் உரிய பொது இலக்கணமா என்றால் சில விதிவிலக்குகளும் உண்டு. இதையே பொது இலக்கணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கலையுள்ளம் படைத்தவர்கள் நிச்சயம் மனிதாபிமான உணர்ச்சியோடு இருப்பார்கள் என்று நம்பலாம்.
கலைஞர்கள் அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சிறப்பிக்கப்பட்டார்கள்! கிள்ளிவளவன் என்ற மாமன்னனுக்கு உற்ற தோழர் நப்பசலையார் என்னும் புலவர். அவர் அந்தக் கிள்ளிவளவனைப் பற்றிப் பாடுகிறார்.
கிள்ளிவளவன் இறந்து விடுகிறான். அவன் எப்படி இறந்திருக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார் புலவர்! அவனை யாருமே கொல்ல முடியாது!
“பொலந்தார் மண்டமர் கடக்குந் தானைத் திண்டேர் வளவற் கொண்ட கூற்றே”
அப்படிப்பட்ட மாமன்னன் உயிரை எடுத்துவிட்ட கூற்றுவன் - எமன் - எப்படி அவன் உயிரைப் பறித்திருக்க முடியும் என்று கேட்கிறார்! ஏன் எடுக்க முடியாதாம்...?
“செற்றன் றாயினும் செயிர்த்தன் றாயினும் உற்றன் றாயினும் உய்வின்று மாதோ!”
எதிர்த்தோ உறவாடியோ சண்டையிட்டோ கிள்ளிவளவனுடைய உயிரை எமனால் பறிக்க முடியாது. பிறகு எப்படி பறித்திருப்பான்?
“பாடுநர் போலக் கை தொழுதேத்தி இரந்தன் றாகல் வேண்டும்.”
எமன் ஒரு கவிஞர் போல வேடம் போட்டுக் கொண்டு போய்க் கிள்ளிவளவனுடைய உயிரைத் ‘தா’ என்று கேட்டிருப்பான். கிள்ளிவளவன் கூற்றுவனைப் புலவனெனக் கருதித் தனது உயிரைக் கொடுத்திருப்பான் என்கிறார்.
ஆக, அந்தக் காலத்தில் அரசர்கள் புலவர்கள் மீது எத்தகைய மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் நப்பசலையாரின் இந்தக் கவிதையாகும்.
அப்படிப்பட்ட பேரும் புகழும் சீரும் சிறப்பும் வாய்ந்த கலையுலகப் பெருமக்களைத் தமிழக அரசு தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே இருந்த அரசு தொடங்கிய காரியம் இது என்பதை நாம் மறந்துவிடவில்லை. ஆனால் நல்லவைகளைத் தொடர்ந்து செய்வதில் இந்த அரசு என்றைக்கும் பின்வாங்குவதில்லை என்பதற்கு அடையாளமாகத் தொடர்ந்து செய்வது மாத்திரமல்ல, அதை விரிவாகச் செய்வது, மேலும் மணம் கமழ்கின்ற அளவுக்குச் செய்வது என்பதிலே இந்த அரசு தொடர்ந்து நற்பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டித் தொடர்ந்து மேன்மேலும் பணியாற்றுவோம் என்பதையும் எடுத்துச் சொல்லிப் பரிசு பெற்றவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றேன்.
1974-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் நாள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற விருது வழங்கு விழாவில் ஆற்றிய உரை.
