இதயங்கள் இயந்திரங்கள் ஆகவேண்டாம்!
பகுதி 1 · 1 / 1
இதயங்கள் இயந்திரங்கள் ஆகவேண்டாம்!
சிக்காகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் கருத்தரங்கில் உரையாற்றுவதற்கு அன்பழைப்பு விடுத்த லாயிட் ருடால்ப் அவர்களுக்கும், சுசேனே ருடால்ப் அவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், மாணவ நண்பர்களுக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியதாகுக!
அமெரிக்க நாட்டுச் சுற்றுப் பயணத்திற்கிடையே இந்தப் பல்கலைக் கழகத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
விவேகானந்தரின் பொன் மொழிகள் எதிரொலித்த நகரம், இங்கு எழில்மிகு சிக்காகோ நகரமாகும். அந்தப் பெருமைக்குரிய மனிதர் பிறந்த நாட்டிலிருந்து - அமைதி வழியில் விடுதலைப் போர் நடத்தி வெற்றி கண்ட காந்தியடிகள் தோன்றிய நாட்டிலிருந்து - இருள் மிகுந்திருந்த தென் பகுதியில் பகுத்தறிவு ஒளி பரப்பிய பெரியார் ராமசாமியும், அரசியலில் புது வழி வகுத்த அறிஞர் அண்ணாவும் தோன்றிய நிலப்பரப்பிலிருந்து - ஒரு பெரிய மக்கள் இயக்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களை எல்லாம் இந்த அரசியல் கருத்தரங்கில் சந்திக்கிறேன்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்று எச்சரிக்கை விடுத்த, சிலப்பதிகாரம் - சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர் ஆண்ட நாடுகளின்
அரசியல் சிறப்பை இன்னும் விளக்கிக் கொண்டிருக்கிறது.
அரசியலுக்கென ஒரு தனி அதிகாரமே வகுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் நெறி கண்ட வள்ளுவரின் திருக்குறள் மணங்கமழும் நாடு, நான் பிறந்த தமிழ்நாடு.
அந்தப் புகழ் மிக்க மாநிலத்தின் நான்கு கோடி மக்களின் கவனத்தை ஈர்த்து மட்டுமல்லாமல் இருபதாண்டுகளாக ஆட்சியில் இருந்த ஒரு பெரிய கட்சியை ஜனநாயகப் போர்க்களத்தில் சந்தித்து - பதினெட்டு ஆண்டுகளில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி மாற்றத்தைச் செய்த சரித்திரம் என்னுடைய கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.
அடிமை விலங்கொடித்து - ஆனந்த சுதந்திரம் வந்த பிறகும், எதிர்பார்த்த ஒளிமிகு வாழ்வு எங்கள் மக்களுக்குக் கிட்டவில்லை.
ஆளவந்தவர்களிடம் காணப்பட்ட அக்கறையற்ற தன்மை அதற்கொரு காரணமாயினும் இந்திய நாடு அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு என்பதை மறந்துவிட முடியாது.
ஆறு பிரதேச நாடுகள் - ஒன்பது ரைஜீயங்கள் - பதினைந்து எகிப்துகள் - கிட்டத்தட்ட மூன்று அமெரிக்க நாடுகள் ஆகியவற்றின் மக்கள் தொகையைக் கொண்டது இந்திய நாடு. அதற்காக மக்கள் தொகைக் கணக்கையும் அதன் நிலைமையையும் கூறிக் கொண்டே பொறுப்புக்களையும் தட்டிக் கழித்திடவும் கூடாது.
புதிய சிந்தனையும் புதிய கண்ணோட்டமும் தேவைப்பட்டதை இந்திய மக்கள் உணர்ந்தனர். இந்தியாவின் முற்போக்குத் தலைவர்கள் உணர்ந்தனர்.
முற்போக்குக் கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதில் இந்தியப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி நாட்டம் கொண்டார்.
“எல்லாம் அவனவன் தலையில் எழுதியதுதான் நடக்கும்” என்று ஏமாற்றுகிறவன் கூற, அதனை ஏமாற்றப்பட்டவனும் ஏற்றுக் கொண்டிருந்த காலத்தை மாற்றி, அந்தத் தலையெழுத்தைத் திருப்பி எழுத நாங்கள் எழுதுகோல் பிடித்திருக்கிறோம். அதில் இந்தியாவில் இப்பொழுது தமிழ்நாடு முன்னணியில் நிற்கிறது என்றால், எங்கள் கட்சி மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிற அரசியல் விழிப்புதான் காரணம்.
சாதாரண மக்களுக்குத் தொண்டு செய்ய - அந்தஸ்து மிக்க குடும்பத்தினர்தான் பதவிப் பொறுப்புகள் ஏற்க வேண்டுமென்றிருந்த ஜாதி கத்தை அறவே மாற்றிச் - சாமான்ய மக்களுக்குத் தொண்டாற்ற - அந்தச் சாமான்ய மக்களின் மத்தியிலிருந்தே - தலைவர்களைத் தோன்றச் செய்த பெருமை எங்கள் அரசியல் கட்சியின் அஸ்திவாரமாய் அமைந்த சுயமரியாதை இயக்கத்திற்கு உண்டு.
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் எங்கள் நாட்டு மனிதனின் கண்களைத் திறந்தது. அறிஞர் அண்ணாவின் அரசியல் ஈடுபாடு, அந்த மனிதனுக்கு ஜனநாயக உணர்வுகளைத் தெளிவு படுத்தியது.
பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கிற நீங்கள், எங்கள் இயக்க வளர்ச்சியைப் பற்றியும் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் காண நான் மகிழ்கிறேன்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டித நேரு இந்தியா முழுமைக்கும் பரப்பித் தொடங்கிய ஜனநாயக ஒளி தமிழகத்தில் முழுப் பிரகாசமாகத் திகழ்வதற்குக் காரணம் - எங்கள் இயக்கம் பட்டி தொட்டிகளில் உள்ள ஏழை, எளிய சாதாரண மக்களிடமும் கல்வியறிவற்ற மக்களிடமும் ஜனநாயகத் தத்துவத்தை ஓயாமல்
தன் கையிலே தரப்படுகின்ற வாக்குச் சீட்டின் சக்தியை ஒவ்வொரு குடிமகனும் இன்று உணர்கிறான். அதனால் அரசாங்கத்தின் அச்சாணி சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ இருக்கிறது என்று அடையாளத் தீர்க்குச் சொன்னாலும், உண்மையிலே மக்கள் மத்தியில்தான் அந்த அச்சாணி இருக்கிறது. அவர்கள் தான் எங்களைத் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாக மாற்றியிருக்கிறார்கள். நாங்கள் போற்றி வரும் அரசியல் பண்பாடு - நீண்ட காலமாகவே ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயுள்ள பகையின் அகலத்தை வெகுவாகக் குறைத்திருக்கிறது.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு, ஐந்து ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் மக்களின் முன்னேற்றத்துக்கும் பின்தங்கிய மக்கள் நலனுக்கும் திட்டங்கள் வகுத்துச் செயல்படுகிறோம்.
பட்டி தொட்டியெல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கிடவும் தீவிரமாகச் செயல்படுகிறோம். பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கு நாங்கள் எடுத்துள்ள முயற்சி வேகமாக நடைபெறுகிறது. குடிசைகளை மாற்றி நல்ல வீடுகளைக் கட்டித் தருகிறோம். குடியிருப்பு மனைகள் சொந்தமில்லாதிருந்த விவசாயத் தொழிலாளிக்கு அவைகளைச் சொந்தமாக்கச் சட்டம் செய்துள்ளோம். நிலமற்ற ஏழை, எளியோர் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டோருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கியுள்ளோம்.
இலக்கியப் புகழும் வரலாற்றுப் புகழும் மிக்க தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறோம்.
இவைகளால் எல்லாம் நாங்கள் திருப்தியடைந்து விட்டோமா எனில், இல்லை. பண்டித நேரு அவர்கள் ஒரு முறை கூறியதுபோல் கடலியாக ஓர் ஏழையின் கண்ணீர் துடைக்கப்படும் வரையில் எங்கள் பணி முடிந்ததாக அர்த்தம் இல்லை!
மிகப் பெரிய இந்திய நாட்டில் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் நல்வாழ்வு பெருகி - மாநிலங்கள் மேலும் மேலும் பலமும் வளமும் பெற வேண்டுமானால் - மத்திய அரசில் குவிந்துள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்குப் பரவலாக்கப்பட வேண்டுமென்று “மாநில சுயாட்சி” குரலை தி.மு.க. எழுப்பி வருகிறது. மத்திய அரசை எந்த வகையிலும் பலவீனப்படுத்தாமல் மாநில சுயாட்சி அமைந்திட வழிவகைகள் உண்டு. அவைகளை விவாதித்து நல்ல முடிவுக்கு வரவேண்டும்.
ஒரு ஜனநாயக நாட்டில் இதனைப் பேசித் தீர்த்துக் கொள்வது இயலாத காரியமல்ல. இதனை வலியுறுத்திப் பேச, இப்போது இந்தியாவில் நிலைமைகள் சரி இல்லை. எண்ணிய தீவிரத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல், எல்லையோர அக்கிரமிப்பினால் ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சோதனையை அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் - தாமதமின்றி தயக்கம் காட்டாது - தவிர்த்திட முன்வர வேண்டும்.
உலகம் இயந்திரமயமாகிக் கொண்டு வருகிறது. உள்ளங்களும் இயந்திரங்களாகிவிட்டால் பிறகு உருகி அழுகின்ற கண்களையும், உவகையால் சிரிக்கின்ற உதடுகளையும் காண முடியாது.
அந்த நிலைமை ஏற்படாமலிருக்க மனிதாபிமான உணர்வுடன் எதனையும் அணுகும் அன்பு வழியில் ஜனநாயக அரசியல் வளர்க்கப்பட வேண்டும்.
1971-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் நாள் சிக்காகோ பல்கலைக் கழகக் கருத்தரங்கில் ஆற்றிய சிறப்புரை.
