இளங்கோவடிகள் (3)
பகுதி 1 · 1 / 1
இளங்கோவடிகள் (3)
சோதனை வரும்போதெல்லாம் தமிழரசுக் கழகத்தின் நிகழ்ச்சிகளுக்கு நான் வருவதாகச் சிலம்புச் செல்வர் சொன்னார். சோதனையின் கொம்பை ஒடித்துக் கொள்வதற்காகத்தான் நான் இந்த மேடைக்கு வருகிறேன். இதை எழுதிப் பார்த்தால் தெரியும். சோதனையில் கொம்பை எடுத்துவிட்டால்... சாதனை!
சிலம்புச் செல்வர் மேலும் பேசுகையில், பூம்புகார்ப் பட்டினத்தில் இரண்டு நாட்களாக மக்கள் வெள்ளத்திற் கிடையே நீந்தி இன்று அதற்கு வரவேற்பு விழாபோல் இந்த விழா நடைபெறுகிறது என்று சொன்னார். நாங்கள் அவரைவிட வயதில் இளையவர்கள் என்ற காரணத்தால் மக்கள் வெள்ளத்தில் இரண்டு நாட்கள் நீந்த முடிந்து. நீங்கள் புரிந்து கொண்டால் அத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
சென்ற ஆண்டு இந்த விழா ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டும் அங்கேதான் நடைபெற்றது. இந்த ஆண்டு கற்பகாம்பாள் மண்டபத்தின் மாடியில் ஏன் இந்த விழா நடைபெறுகிறது என்று எண்ணினால், இளங்கோவின் புகழும், தமிழின் புகழும் உயர்ந்துள்ளது என்பதை உலகிற்கு உணர்த்த என்று கருதுகிறேன்.
தமிழன் உயர்கிறான், தமிழ் உயர்கிறது, தமிழர் கவின் வரலாறு உயர்கிறது. தமிழர்களின் உணர்வு உயர்கிறது. தமிழனின் தன்மானப்பற்று உயர்கிறது என்பதற்கெல்லாம் அடையாளமாகத்தான் இன்று இந்த
விழா இந்த மாடியில் நடைபெறுவதாக நான் கருதுகிறேன்.
நண்பர் அவ்வை நடராசன் பேசும்போது, கருணாநிதிக்குக் கண்ணேறு ஏற்பட்டுவிட்ட காரணத்தால், இன்று சில சோதனையான செய்திகள் வந்து, அதைச் சந்தித்துவிட்டு, இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இது கண்ணேறு கழிக்க என்று குறிப்பிட்டார். வரவேற்பு, வாழ்த்துக்களை வகைவகையாகப் பெற்று வருகிற நேரத்தில், தொலைத் தொலையாகப் பார்வைகள் ஆனி விட்டதும், பின்னர் தெளிப்பதும், இவைகள் எல்லாம் வாழ்க வாழ்க என்பதற்கான அடையாளங்களாக அமையக்கூடும்.
ஆனால் வீட்டிற்கு வந்ததும் அன்னையார் கையில் மிளகாயும், நெருப்புச் சட்டியுமாக வந்து அதை முகத்திற்கு நேராகக் கொண்டு வரும் நேரத்தில், அதிலுள்ள மிளகாய் வெடிக்கும். காரம் தாங்க முடியாது. சிதறும். தும்மல் கூட வரும். இவைகள் எல்லாம் எதற்காகச் செய்யப்படுகின்றனோ, இவ்வளவு வாழ்த்துக்களைப் பெறுகிற உனக்கு இப்படி திருஷ்டி கழிப்பது, நீ வாழ வேண்டும் என்பதற்காகத்தான். மிளகாய் காரமாக இருந்தாலும், ஒன்றிரண்டு வெடித்து முகத்திலே பட்டுச் சிறு புண்ணை உண்டாக்கினாலும், அவைகள் எல்லாம் மகன் வாழ வேண்டுமென்பதற்காக அன்னை செய்வதாகத்தான் நான் கருதுகிறேன்.
நண்பர் பாலசுப்பிரமணியம், சிலப்பதிகாரத்தில் சிலம்புச் செல்வர் எடுத்துக் காட்டியதை கூறி, கண்ணகி வழக்கறிஞராக மாறிய அந்தக் காட்சியை அழகாகச் சொன்னார். கண்ணகி வழக்கறிஞராக மாறியது மாத்திரமல்ல. கடைசியில் நீதி வழங்கும் நீதிபதியாகவும் மாறினாள் என்பதும் தெரியும்.
சிலப்பதிகாரத்தில் வருகிற கண்ணகியானாலும், மாதவியானாலும், கோவலன் ஆனாலும், செங்குட்டுவன் ஆனாலும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆனாலும் அவர்கள் எல்லாம் உருவாக்கி வைத்திருக்கிற அந்த உணர்வுகளை நாம் பெற்றிட வேண்டுமே
யல்லாமல் அதே செயல் முறைகளைத் திரும்ப வரலாற்றில் கொண்டு வர வேண்டும் என்பதல்ல. சிலப்பதிகாரம் கூறுகிற கருத்து என்ன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உணர்ச்சிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மனுநீதிச் சோழன் மகன் தேரினைச் செலுத்துகிற நேரத்தில் பசுவின் கன்று ஒன்றினைக் கொன்று விட்டான் என்பதற்காகக் கன்றை இழந்த பசு கதறி அழுததால், அதே மகனைத் தேரின் காலில் இடுக்கிக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று அந்தக் கதையைக் கேட்கிற நேரத்தில், அதையே இப்போதும் நாம் செய்ய வேண்டுமென்பதல்ல. காரில் செல்கிற நேரத்தில் வழியில் ஒரு கன்றுக்குட்டி அடிபட்டு விடுமானால் உடனடியாக நாமும் அப்படியே செய்ய வேண்டுமென்று யாரும் கூறத் துணிய மாட்டார்கள்.
அப்போது கூட, அப்படிப்பட்ட துணிவிற்கே காரணம், மகன்மீது தேரைச் செலுத்துகிற நேரத்தில் மகேசன் தோன்றி மகனுக்கு உயிர் தந்தான் என்பதுதான். இப்போது யாருக்கும் மகேசன் வருவான், உயிரைத் தருவான் என்ற நம்பிக்கை இல்லை. புராணத்தை இடித்துரைக்கிறேன் என்று யாரும் கருத வேண்டாம். எனினும் மனுநீதிச் சோழன் பெற்றிருந்த நீதி உணர்வை நாம் பெற வேண்டும்.
கண்ணகி, நெடுஞ்செழியன் கொலு மண்டபத்திற்குச் சென்று ஆர்த்தெழுந்து, நீ மன்னனா? நீ வழங்கியது நீதியா? என்றெல்லாம் கேட்டதைப் போல, இன்றைக்கு அந்த வீர உணர்ச்சியை, நீதி பெற வேண்டும் என்ற உணர்ச்சியைத் தாய்க்குலம், தமிழ்க் குலம், மனித குலம் பெறவேண்டுமேயல்லாமல் அந்தக் கண்ணகி பாண்டியன் மேல் போய் பெற வேண்டும் என்று யாரும் சொல்லமாட்டார்கள். சில உணர்ச்சிகளை உள்ளத்தில் பதிய வைத்துக் கொள்ளச் சிலப்பதிகாரம் மெத்தவும் பயன்படுகிறது.
தமிழர்களுடைய வரலாற்றைச் சொல்கிற நூலாகவே இது அமைந்திருக்கிறது.
தமிழர்களிடம் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் அதைக் கட்டிக் காப்பதற்காகவும்தான் புகார்க் காண்டமே தீட்டப்பட்டது என்பதை இங்கே எடுத்துச் சொன்னார்கள்.
நேற்று காவிரிப்பூம்பட்டினத்தில் கண்ணகியைக் காட்ட, காதல் நிறைந்த தமிழ் இளம் பெண்களையும் - கோவலனையும் - இருபுறம் சேர்ந்த சுதமதியையும் இரண்டு நாட்கள் கண்டோம். இன்று இந்த விழாவாய். முதல் நாள் காலையில் எட்டு கால்கோள் விழாக்கள் நடைபெற்றன.
பூம்புகாரில் இருந்த பழைய மன்றங்கள் எல்லாம் மீண்டும் உருவுபெற வேண்டுமென்பதற்காக, காலை எட்டு விழா நடைபெற்றது. அச்சிலம்புத்திருவிழாவில், இன்று போன்று நாட்டின் அக்கறையுடனும், இளங்கோவின் நெஞ்சங்களில் என்னுடைய பெயர் மாறித் தமிழில் நெருங்கும்போது எனது சிலம்புச் செல்வர் சொன்னார். என்னுடைய பெயர் மாறுகிற நிலை இருந்தால் போதாது என்பதற்காக, என்னோடு சேர்ந்த பெரியவர்களின் பெயர்கள் எல்லாம் இருக்க வேண்டும்.
எப்படி கடல் கொண்ட பூம்புகாரின் அடையாளங்கள் சில இன்று காணப்படுகின்றனவோ அதைப்போல், எப்போதோ ஒரு காலத்தில், அப்போது நாம் உயிரோடு இல்லாவிட்டாலும், ஆராய்ச்சி நடைபெறுமானால், அப்போது கிடைக்கும் மன்றங்களில் என்னுடைய பெயர் மாத்திரமல்லாமல் - சிலம்புச் செல்வருடைய பெயரும் மற்றவர்களுடைய பெயரும் இருந்திட வேண்டும் என்பதற்காக இந்த அடிக்கல் நாட்டுவிழாக்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன என்பதைத் தன்னடக்கத்தோடு கூறுகிறேன்.
என்னை அவர்கள் ஏற்றிப் போற்றுகிறார்கள் புகழ்கிறார்கள் என்றால் அது ஓர் அடையாளத்திற்காகத்தானே தவிர, அந்தப் புகழுக்கு நான் மாத்திரமல்ல - சிலம்புச் செல்வரைப் போன்ற சான்றோர்கள், புலவர்கள், கலைஞர்கள் ஆகிய அத்தனை பேருடைய
ஒத்துழைப்போடுதான் தமிழகத்தில் இந்தக் காரியங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட அருமையான காரியத்தை இன்று பூம்புகாரில் செய்து முடித்திருக்கிறோம். இன்று தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்தச் செயலை வாழ்த்துகிறார்கள்.
“இளங்கோவடிகளுடைய வாழ்க்கை வரலாறு தமிழ் மக்களுடைய உள்ளத்தில் பதிந்திட வேண்டும்; அவருக்கு விழாக் கொண்டாட வேண்டும்” என்று இருப்பது ஆண்டு கழுகுக்கு முன்னால் நினைத்ததாகவும், அது இன்று நிகழ்ச்சியாக மாறுகிறது என்றும் சிலம்புச் செல்வர் சொன்னார்.
நான் அவரையும் அவரைப் போன்ற தமிழ் அறிஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன்; நீங்கள் நினைப்பதை எல்லாம் செய்து முடிக்கிற அந்த உரிமை - உரிமையை நானே எடுத்துக் கொள்கிறேன்.
எங்களுக்கு நினைக்க நேரமில்லை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நினையுங்கள். நீங்கள் நினைப்பதை எல்லாம் செய்து முடிக்கிற ஏவலர்களாகத்தான் நாங்கள் இன்றைக்குத் தமிழகத்தின் ஆட்சிப் பீடத்தில் இருக்கிறோம்.
நீங்கள் நினைக்க பலவற்றைக் காரியமாகக் காட்டியிருக்கிறோம். இளங்கோவடிகளுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். செய்திருக்கிறோம். விழாக் கொண்டாட வேண்டும் என்று நினைத்தீர்கள். கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
உங்களைப் போன்ற உத்தமர்கள் நினைப்பதை எல்லாம் முடிந்தவரை நிறைவேற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்; ஒய்வில்லாமல் உழைக்கிற எங்களுக்கு நினைப்பதற்கு நேரமில்லாவிட்டாலும், உங்களுடைய நினைவுகளை நிறைவேற்றிக் காட்டுகிறோம் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன்.
1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் நாள் சென்னையில் இளங்கோவடிகள் விழாவில் ஆற்றிய உரை.
