உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - தியாகிகள் மணிமண்டபத் திறப்புவிழா

பகுதி 1 · 1 / 1

சென்னை - தியாகிகள் மணிமண்டபத் திறப்புவிழா

இன்று நான் முதலிலேயே குறிப்பிட்டதைப்போல ஒரு உணர்ச்சி மிகுந்த விழா. என்னைப் பாராட்டி இந்த மண்டபம் இங்கே உருவானதற்காகப் புகழ்ந்து இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களும், சிராஜில் மில்லத் சமது அவர்களும், நண்பர் நல்லகண்ணு அவர்களும் இங்கே உரையாற்றியிருக்கின்றார்கள். குறிப்பாகச் சொல்லப்போனால் இந்தப் பெருமை முழுவதும் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களைத்தான் சாரும் என்பது என்னுடைய கருத்து.

ஏனென்றால் அவர்தான் கடந்த ஆண்டு காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் “தியாகிகள் மணிமண்டபம் ஒன்றை அமைத்திட வேண்டும்” என்ற ஒரு கருத்தை எடுத்துக்கூறி அதை நிறைவேற்ற வேண்டும் என்று அன்பாக ஆணை பிறப்பித்தார்.

நான் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு விரைவில் அதற்கான ஏற்பாடுகளை இந்த அரசு செய்யும் என்று அன்றைக்கே குறிப்பிட்டேன். அதற்கேற்ப - செய்தித்துறை அமைச்சர் தம்பி முல்லை வேந்தனும், பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் இந்தக் கட்டிடம், இந்த மண்டபம்

விரைவில் அமைவதற்கான ஒத்துழைப்பைத் தந்தார்கள். அதிலும் குறிப்பாக முல்லைவேந்தன் என்னுடைய கண்ணில் பட்டால் மண்டபம் என்ன ஆயிற்று என்று கேட்பேன் என்பதற்காகக் கண்ணிலே படாமலிருந்து, ஆனால் இந்தக் காரியத்தை மிக வெற்றிகரமாக முடித்துத் தந்துள்ளார்.

கடந்த நான்கைந்து நாட்களாகத் தொடர்ந்து மழை. நான் மிகுந்த கவலைப்பட்டேன். இந்த நிகழ்ச்சி எப்படி நடைபெறும் என்று. ஆனால் இங்கே இலக்கியச் செல்வர் குறிப்பிட்டதைப்போல பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அடக்கம் செய்த நேரத்திலும் இப்படித்தான் மழை கொட்டியது. அதற்காக இடம் பார்ப்பதற்கு நள்ளிரவில் வந்த போதும் மழை கொட்டிக் கொண்டுதான் இருந்தது. ஒருவேளை அன்றைக்கு வானம் சிந்திய கண்ணீர். தியாகிகளை நினைந்து, தொடருகிறது என்பதற்கு அடையாளமாகத்தான் தியாகிகளுடைய மணிமண்டபம் திறக்கப்படுகிற நேரத்திலும் மழை பொழிவதாக நான் பொருள் கொள்கின்றேன்.

தியாகிகளை மதிக்கின்ற அரசாக இந்த அரசு இருப்பதை அனைவரும் எடுத்துச் சொன்னார்கள். ஒரு அரசு அமைந்த பிறகு மாத்திரமல்ல; நாங்கள் தியாகிகளை மதிப்பது என்பது அரசு அமைவதற்கு முன்பே நல்லகண்ணு இங்கே எடுத்துக் கூறியதைப்போல, எனது இளமைப் பருவத்திலேயே, கிட்டத்தட்ட ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே மலேசியாவில் போராடிய மாவீரன் அதற்காகவே மாண்டு மடிந்த கணபதி அவரைப்பற்றி ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்கின்ற சிறிய அளவு நூல்தான், அதை உணர்ச்சிப் பிரவாகமாக நான் அன்றைக்கே எழுதினேன்.

ஒரு அரை மணி நேரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்னையிலிருந்து

விடைபெற்றுச் சென்ற அந்த நிகழ்ச்சி எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. பதிப்பாளர் நமச்சிவாயம் என்ற ஒரு தோழர் நான் ரயிலுக்குப் புறப்படுவதற்கு முன்பு என்னைச் சந்தித்து இந்த நூலை நீங்கள் எழுதித் தரவேண்டும் என்று கேட்டபோது அன்றைக்குத்தான் அந்தச் செய்தி பத்திரிகைகளிலே வந்தது. நான் உடனடியாக அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து எழுதித் தந்த நூல் அது.

எனவே இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய உத்தமர்கள், வீரர்கள் அவர்களுடைய வாழ்க்கையை வரலாறாக ஆக்கவேண்டும் என்பதிலும் அதனைப் பின்பற்றி எதிர்காலச் சமுதாயம் வீறுகொள் சமுதாயமாக, வீரங்கொள் சமுதாயமாக, தியாகத்திற்குத் தயாராக இருக்கக்கூடிய சமுதாயமாக இருந்திட வேண்டும் என்பதிலும் இருந்த ஆழ்ந்த அக்கறையின் காரணமாகத்தான் இன்றைக்கும் அந்தத் தொண்டினை அரசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து செய்து வருகின்ற அந்தப் பணியை நாங்கள் பெற்றிருக்கின்றோம்.

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், தந்தை பெரியார் அவர்கள் தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து, காந்தியடிகள் ஈரோடு வந்தால் பெரியாருடைய இல்லத்தில்தான் தங்குவது என்ற நிலையெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் அதே பெரியார் அவர்கள் காங்கிரசோடு மாறுபட்டு காந்தியடிகளைக் கூட, அவர்களுடைய கொள்கைகளைக்கூட கண்டனம் செய்கின்ற அளவிற்கு ஒரு தலைவராக வளர்ந்திருந்தாலும் காந்தியடிகள் கொல்லப்பட்டார் என்ற செய்தி வந்ததும் மறுநாள் விடுதலை பத்திரிகையில் தலையங்கம்

எழுதினார். அறிக்கை வெளியிட்டார். இந்தியாவிற்கு “காந்தி நாடு” என்று பெயர் வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அவர் வழியிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் காந்தியடிகளைப் பற்றி தீட்டிய சித்திரங்கள், வானொலியில் ஆற்றிய உரைகள் இவைகளெல்லாம் இன்றைக்கும் நம்முடைய செவிகளிலே ரீங்காரம் செய்து கொண்டிருப்பவைகளாகும்.

எனவே திராவிட இயக்கம் என்பது அதிலும் குறிப்பாக தந்தை பெரியார் அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கம், பேரறிஞர் அண்ணா அவர்களால் வழிகாட்டப்பட்ட இயக்கம், இந்த இரண்டு இயக்கங்களும் என்றைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகத்தான் இந்த மணிமண்டபம் இங்கே உருவாகியிருக்கின்றது.

இந்த மண்டபத்தை ஐந்து அல்லது ஆறு மாத காலத்தில் அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கின்றார்கள். இதிலே வைக்கப்பட்டிருக்கின்ற படங்களில் பெரும்பாலான படங்கள் ஒரு பத்துப் பதினைந்து படங்களைத் தவிர என்றுதான் சொல்ல முடியும்; அவ்வளவு படங்களையும் சேகரித்து வழங்கியிருப்பவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் என்பதற்காக இந்த விழாவிலே அமர்ந்திருக்கின்ற தியாகிகள் சார்பாக மாத்திரமல்ல; இந்த விழாவிற்கு வராத தியாகிகள் சார்பிலும், மறைந்த தியாகிகள் குடும்பத்தின் சார்பிலும் அவருக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஆயிரத்து இருநூற்று ஐம்பது படங்கள் வைப்பதற்கான வகையிலே இந்த மண்டபம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இன்றைக்கு இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள படங்களின் எண்ணிக்கை இருநூற்று ஐம்பதுதான். மீதமுள்ள ஆயிரம் படங்களை

வைத்தாக வேண்டும். இங்கே யார் யாருடைய படங்கள் வீராங்கனைகளுடைய படங்களெல்லாம்கூட இன்னும் வந்து சேரவில்லை என்று சொன்னார்கள். அவைகளையெல்லாம் சேகரித்துத் தருகின்ற பணியில் ஆங்காங்கு உள்ள தியாகிகள், தியாகிகளாக இல்லாவிட்டாலும் அவர்களுடைய வழித்தோன்றல்கள் சமுதாயப் பொதுப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அதுபற்றி ஆராய்ந்து தேடிக் கண்டுபிடித்து அவற்றை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் வாயிலாக அல்லது நேரடியாக அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

மேடையில் அமர்ந்திருக்கும்போது இன்னொன்றையும் தம்பி முல்லைவேந்தனிடம் சொன்னேன். ஒவ்வொரு தியாகியைப்பற்றியும் பத்து வரிகள் அங்கே படத்திற்குக் கீழே எழுதுவதற்கு இடமில்லை. எந்த ஊர் என்ன பெயர் என்பது தான் அதில் எழுத முடிகிறது. எனவே, ஒவ்வொரு தியாகியைப் பற்றியும் ஒரு பத்து வரிகள் கொண்ட ஒரு சுருக்கமான வரலாற்றுச் சுருக்கத்தை அச்சியற்றுகின்ற வகையிலே புத்தகங்களாக அச்சிட்டு, அந்தப் புத்தகங்களுக்கு மலிவான விலை குறிப்பிட்டு, இந்த மண்டபத்திற்கு வருகின்றவர்கள் அதை வாங்கிப் பயன்பெறுகின்ற வகையிலே அந்த புத்தகங்கள் இங்கே வைக்கப்பட வேண்டும் என்று நான் முல்லைவேந்தனிடம் சொல்லியிருக்கின்றேன்.

காரணம் இங்கே அன்புக்குரிய சமது அவர்களும், நல்லகண்ணு அவர்களும் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல் தியாகிகளுடைய படங்கள் இங்கே வைக்கப்பட்டிருப்பது, அந்தப் படத்திற்கு உரியவர்களைப் பெருமைப்படுத்த மாத்திரமல்ல; அவர்களுக்கு நன்றி காட்டுவதற்காக, நம்முடைய கடமையை உணர்த்துவதற்காகத்தான் அத்தகைய படங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இதிலே மிக முக்கியமாக இந்தப் படங்கள் இங்கே வைக்கப்பட்டிருப்பதற்கும், ஒரு மண்டபம் கட்டப்பட்டிருப்பதற்கும் காரணம் என்னவென்றால் இந்த மண்டபத்திற்குள் நுழைகின்ற இளைஞர்கள், வாலிபர்கள் இந்தப் படங்களைப் பார்த்து, பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எவ்வளவு சுக துக்கங்களையெல்லாம் புறக்கணித்து விட்டு, வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் நாட்டின் விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் என்கின்ற அந்தச் செய்திகளை அந்த வரலாறுகளை அவர்கள் எண்ணிப் பார்க்கும்போது, தாங்களும் இவ்வாறு எங்கேயாவது மணிமண்டபத்தில் தங்கள் படம் வரவேண்டும் என்கின்ற அந்த ஆவலை எதிர்கால இளைஞர்கள் பெற்றாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மணிமண்டபமே தவிர வேறு எதற்காகவும் அல்ல.

ஏனென்றால் இன்றைய இளைஞர்கள் கேளிக்கைகள், விழாக்கள் இவைகளில் தங்களது மனத்தைப் பறிகொடுப்பவர்கள்தாம் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அதற்காக ஒரு நாட்டில், சமுதாயத்தில் கேளிக்கைகளே கூடாது, விழாக்களே கூடாது, மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளே கூடாது என்று வாதிடுபவன் அல்ல நான். மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் இருக்கலாம். கேளிக்கைகள் இருக்கலாம். விழாக்கள் இருக்கலாம். ஆனால் நாட்டைக் காப்பாற்ற வேண்டும், மொழியைக் காப்பாற்ற வேண்டும், சமுதாயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது, அந்த மகிழ்ச்சியை, கேளிக்கைகளையெல்லாம் துறந்துவிட்டு - தியாகம் செய்துவிட்டு, இந்தக் குறிக்கோளுக்காக நம்முடைய உயிரை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த உணர்வு எல்லா இளைஞர்களுக்கும், எல்லா

வாலிபர்களுக்கும் வந்தாக வேண்டும். அத்தகைய ஒரு தியாக உணர்வை வளர்ப்பதற்காகத்தான் இந்த மண்டபம் பயன்பட வேண்டும் என்று நாம் கருதுகிறோமேயல்லாமல் வேறல்ல.

அது மாத்திரமல்ல; நல்லகண்ணு இங்கே எடுத்துச் சொன்னார். இஸ்லாமியர்கள், இந்துக்கள் என்றெல்லாம் பேதமில்லாமல் ஆதிதிராவிடர்கள், அய்யர்கள் என்றெல்லாம் பேதமில்லாமல் இந்தப் படங்களெல்லாம் அங்கே வரிசையாக வைக்கப்பட்டிருக்கிற நிகழ்ச்சியை எடுத்துச் சொல்லி படங்களாக மாத்திரமல்ல; அவர்களுடைய வாழ்க்கையிலேகூட ஒன்றாக இருந்து, சமத்துவமாக இருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள் என்ற அந்தச் செய்தியையும் அவர்கள் இங்கே தொகுத்துக் காட்டினார்கள்.

ஆனால் இன்றைக்குச் சாதிகளால் நாம் பாழ்பட்டுக் கிடக்கின்றோம். மதங்களால் கூறுபட்டுக் கிடக்கின்றோம். இந்த நிலையை மாற்றுவதற்கு இந்த மணிமண்டபம் பயன்பட்டாக வேண்டும். எதிர்காலத்தில் சாதி-மத பேதமில்லாத சமத்துவ நிலையிலே நம்முடைய சமுதாயத்தைக் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய நாட்டை அந்த அளவிற்கு வளர்த்தாக வேண்டும்.

வெளிநாடுகளுக்குச் சென்றால் இங்கிருப்பதைப் போல அங்கெல்லாம் சாதி கிடையாது. அன்றைக்கே பாரதி பாடினான், “ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி” என்று கேட்டான். அந்நியர்கள் வரக்கூடாது என்பதிலே அழுத்தம் திருத்தமாக இருந்தாலும்கூட ஆயிரம் சாதி இங்கு உண்டு என்பதை அன்றைக்கே தேசியக்கவி சுப்பிரமணிய பாரதி வேதனையோடு ஒத்துக் கொண்டிருந்தார். சாதிகள் இருப்பதற்காகச் சுதந்திரம் வேண்டாம் என்று யார் சொல்வார்கள்.

சுதந்திரம் வாங்குவது வேறு. சாதிகளை

ஒழிப்பது வேறு. அந்த நிலையிலேதான் அன்றைக்குச் சொல்லப்பட்டது. சுதந்திரத்திற்காகப் போராடினோம் வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது நமக்குள்ள கடமை என்னவென்றால் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்திட வேண்டும். அந்தக் கடமையை நாம் செய்தாக வேண்டும். சுதந்திரம் எவ்வளவோ கஷ்டத்திற்கிடையே நாம் ரத்தம் சிந்தி, தூக்கு மேடை ஏறி, சிறைச்சாலையில் அடைபட்டு, சித்திரவதைகளை ஏற்றுக்கொண்டு, செக்கிழுத்து, கஞ்சிக் கலயம் ஏந்தி இப்படியெல்லாம் வேதனைப்பட்டு விடுதலை பெற்றிருக்கிறது.

இந்த நாடு பெற்ற விடுதலையை வீணாக்கி விடக்கூடாது. பெற்ற சுதந்திரம் வீணாவதற்கு இன்றைக்கு இருக்கின்ற வழிகள் மதச்சண்டை, சாதிச்சண்டை இவைகள்தாம். இவைகளை விட்டொழிக்க வேண்டும். மதச்சார்பற்ற நிலையை, மத நல்லிணக்கத்தை, மனித நேயத்தை உருவாக்கி, “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி சொன்னதை மெய்யாக்கிப் பாடுபட வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையிலேதான் இந்த மண்டபம் தன்னுடைய பயனை விளைவிக்கும் என்று நான் கருதுகிறேன். அந்த நம்பிக்கையை நான் பெறுகின்றேன். இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளையில்லாவிட்டாலும் மறுநாள் ஒரு சமத்துவ தமிழகத்தை, சமத்துவ இந்தியாவை நாம் உலகிற்கு நிச்சயமாக அறிமுகப்படுத்துவோம். அதை இந்த தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் ஒரு சூளுரையாக மேற்கொள்வோம் என்று கூறி உங்கள் அனைவருக்கும் எனது அன்பையும், நன்றியையும் காணிக்கையாக்குகிறேன்.

23-10-98 அன்று சென்னையில் தியாகிகள் மணிமண்டபத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000