உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

சென்னை - நாத்திகம் இராமசாமி இல்ல மணவிழா

பகுதி 1 · 1 / 1

சென்னை - நாத்திகம் இராமசாமி இல்ல மணவிழா

அருமை நண்பர் நாத்திகம் இராமசாமி அவர்களுடைய அன்புச் செல்வன் சுபாஷுக்கும், பரமேஸ்வரன் அவர்களுடைய அன்புச் செல்வி மாலதிக்கும் நம்முடைய இனிய நல்வாழ்த்துக்களோடு மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ள எங்களை எல்லாம் அருமை நண்பர் நாத்திகம் இராமசாமி வரவேற்றுப் பேசுகிற நேரத்தில் ஒரு திருமண விழாவிலே ஆற்றுகின்ற வரவேற்புரையாக இல்லாமல், வழக்கம்போல் நாத்திகம் பத்திரிகையிலே அவர் எழுதுகின்ற சொற்களை அள்ளி வீசி, ஆவேசமான வார்த்தைகளைப் பொழிந்து, எங்களை வரவேற்றிருக்கின்றார்.

எப்போதும் வரவேற்புரையில் இனிமை இருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அவர் ஆற்றிய வரவேற்புரையில் “வா” என்ற இனிமை இல்லை. வ...ா...ர் என்கிற கடுமையிருந்ததை (கைத்தட்டல்) நாமெல்லாம் கவனித்தோம். காரணம் அவருடைய உள்ளத்தின் ஆழத்திலே அன்று தொட்டு இன்று வரை ஆழமாகப் பதிந்து போயிருக்கின்ற உணர்வின் அலை அது. அதைத்தான் இங்கே நாமெல்லாம் கண்டு கேட்டுச் சுவைத்திருக்கிறோம்.

பேராசிரியர் அவர்களும், தமிழ்க்குடிமகன், ஆலடி அருணா ஆகியோரும் இங்கே எடுத்தியம்பியதைப் போல இளமைக்காலந்தொட்டு தான் ஏற்றுக் கொண்ட ஒரு கொள்கையில் இன்று வரையிலே உறுதியாக இருக்கின்றார். மனதில் பட்டதை கொஞ்சமும் தயக்கமின்றி, அச்சமின்றி எடுத்துக் கூறுகின்ற அந்தப் பண்பாட்டுக்குச் சொந்தக்காரராக பாலபருவம் முதல் இன்று வரையிலே அவர் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

அவர் பேசும்போது, முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு எத்தனையோ வேலைகளையெல்லாம் விட்டு விட்டு எங்கள் அழைப்பையேற்று இங்கே வந்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். நான் அவருக்கும் உங்களுக்கும் சொல்வேன். எங்களுக்கு வேலை என்பது முதல் வேலையே இந்த வேலைதான். இதற்குப் பிறகுதான் எங்களுக்கு மற்ற வேலையெல்லாம். தந்தை பெரியாரிடம் பாடம் பயின்ற மாணவர்களாக இருந்த அந்தக் காலத்திலும் சரி, அறிஞர் அண்ணா அவர்களின் வழிகாட்டுதலோடு அரசியல் நெறியிலே நாங்கள் ஒழுகிட வேண்டுமென்பதற்காக அந்தக் களத்திலே அடியெடுத்து வைத்து இன்றைக்கு உலவிக் கொண்டிருக்கின்ற இந்தக் கால கட்டத்திலும் சரி, நாங்கள் ஆரம்பத்தில் பார்த்த வேலை இந்த வேலைதான் என்பதை நாங்கள் என்றைக்கும் மறப்பதில்லை.

அதை மறந்துவிட்டால் இந்த வேலைக்கெல்லாம் அர்த்தமில்லாமல் போய்விடும். ஆரம்பத்திலே பார்த்த வேலை இந்த வேலை என்பதால் என்னைப் பொறுத்த வரையிலே கூட, ஏன், நம்முடைய பேராசிரியரைப் பொறுத்தவரையிலே கூட, நாங்களெல்லாம் தந்தை

பெரியார் அவர்களிடத்திலே மாணவர்களாக இருந்த அந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலும் எங்களுடைய இயக்கப் பிரச்சாரம் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துக் கூறுகின்ற மேடை; மணவிழா மன்றங்களாகத்தான் இருந்திருக்கின்றன. அப்படி அன்றைக்கு மணவிழா மன்றங்களாக இருந்த எங்களுடைய பிரச்சார மேடை பிறகு மாநாடுகளாக, பொதுக் கூட்டங்களாக விரிவடைந்தது என்றாலும்கூட, அந்த முதல் வேலை பார்த்தோமே, மணவிழா மேடை வேலை; அதுதான் எங்களுக்குச் சில நேரங்களில் ஆபத்தில் கைகொடுத்த மேடையாகும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமேயானால், இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தபோது, கூட்டங்கள் போடக்கூடாது, மாநாடுகள் நடத்தக்கூடாது, பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. எப்பொழுதுமே தடை விதிக்கப்பட்டால்; இப்பொழுது கூட நீங்கள் பார்க்கலாம் - 144 தடையை எந்த அரசு, எந்த மாநிலத்திலே பிறப்பித்தாலும், அதற்குச் சில விதிவிலக்குகள் உண்டு. “திருமண நிகழ்ச்சிகள், வேறு சில மதச் சடங்குகள் தவிர” என்றிருக்கும்.

எனவே அந்த விதிவிலக்கைப் பயன்படுத்திக் கொண்டு நெருக்கடி நிலை காலத்தில் நாங்கள் பிரச்சாரம் செய்ததெல்லாம் இந்த மணவிழா மேடைகளிலேதான். அதிலே கூட பல இடங்களில் ஒலி பெருக்கி அனுமதிக்கப்படுவதில்லை. மெகபோனைக் கையிலே வைத்துக் கொண்டு கூட பல இடங்களில் நெருக்கடி நிலையின்போது 76-ஆம் ஆண்டு நான் மணவிழா மேடைகளில் பேசியிருக்கிறேன்.

எவ்வளவோ எதிர்ப்புக்கிடையேதான், ஏச்சுக்கள், இழித்தைப் பேச்சுக்களுக்கிடையேதான் இன்றைக்கு இந்தக் கொள்கையை நாம் வளர்த்துக் கொண்டிருக்

கிறோம். நாத்திகம் இராமசாமி அவர்கள் “நாத்திகம்” என்ற அடைமொழியை அவருடைய பெயரில் விடாமல் வைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதை பேராசிரியர் இங்கே குறிப்பிட்டார். நாத்திகம் என்ற அந்தக் கொள்கையோ, சுயமரியாதைக் கொள்கையோ அல்லது வேறு எந்தக் கொள்கையாக இருந்தாலும்கூட, ஏற்றுக் கொள்ளும் அந்தக் கொள்கைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு ஆன்மீகத் துறையிலே கடவுளை ஏற்றுக் கொண்டு வழிபட்டு, கடவுள்பால் தங்கள் உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கின்ற பக்தர்களும் இருக்கிறார்கள்; அதே நேரத்தில் பக்தர்கள் என்று வேடமிட்டு அந்தப் பகவானை ஏமாற்றுகின்றவர்களும் நாட்டில் இருக்கிறார்கள். அதைப் போல பகுத்தறிவு பேசிக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட காரியங்களிலே ஈடுபடுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.

எனவே எல்லோரும் மனிதர்கள்தாம். அவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொண்டாலும் அல்லது பக்திமான் என்று சொல்லிக் கொண்டாலும் அந்த இரண்டு நிலைகளிலும் ஏற்றுக் கொண்ட கொள்கையிலே உறுதியாக இருக்கிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி உறுதியற்றவர்கள் இரு துறையிலும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தந்தை பெரியார் அவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னார். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று தி.மு.கழகத்திற்கு கடவுளைப் பற்றிய கொள்கையை வகுத்துக் கொடுத்தார். ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்று சொல்கின்ற

நேரத்தில் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அல்ல, அந்தப் பாரதிதாசனுக்கு ஆசிரியராக வாய்த்திருந்த தேசியக் கவி - கவிச்சக்கரவர்த்தி சுப்பிரமணிய பாரதியார் - “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்; அறிவொன்றே தெய்வம் என்று ஓதி அறியீரோ?”

என்று அறிவுறுத்துகிறார். அறிவே தெய்வம் என்று பாடிய பாரதியார், “தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மைதான் தெய்வம், அந்த உண்மைக்குப் பயந்து நடந்தால் அது தெய்வத்தை வழிபடுவதற்குச் சமம் என்று பாரதியாரே குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கருத்தைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று தி.மு.கழகத்திற்கு ஒரு கொள்கைத் தத்துவத்தைத் தந்தார்கள். அதுகூட திருமூலருடைய வாக்கியம்தான். இந்த இயக்கம் அன்று தொட்டு இன்று வரையில் எதிர்ப்பிலேயே வளர்ந்து, எதிர்ப்பிலேயே வாழ்ந்து எதிர்நீச்சல் போட்டு வருகின்ற இயக்கம்.

அதனால்தான் அருமை நண்பர் நாத்திகம் இராமசாமி அவர்கள் “நாத்திகம் இராமசாமி”, என்பதை அழுத்தந்திருத்தமாக இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

படாதபாடுபட்டு நாம் இந்தப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும் எனக்கு மேடையிலே பேசுகின்ற ஆற்றலை வளர்த்துத் தந்தவருமான பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரிசாமி அவர்களைப் பற்றி உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். சிலர் அறியமாட்டார்கள். அவர், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் திருச்சியிலிருந்து சென்னை வரை நடைப் பயணம் மேற்கொண்டார். அவரோடு மணவை திருமலைசாமி, மூவலூர் மூதாட்டி

இராமாமிர்தம் அம்மையார் போன்றவர்கள் எல்லாம் அந்த நடைப் பயணத்தில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்படி வருகின்ற வழியில் ஒரு கிராமத்தில் செருப்பாலேயே தோரணம் கட்டி, செருப்பாலேயே வரவேற்பு வளைவை வைத்து பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களையும், ஊர்வலத்தினரையும் அவமானப்படுத்தும் வகையிலே ஒரு செயலைச் செய்திருந்தார்கள். ஆத்திரம் கொண்ட தொண்டர்கள் அதை அவிழ்ப்பதற்காகச் சென்றபோது அண்ணன் அழகிரிசாமி அவர்கள், யாரும் அந்தத் தோரணத்தை அவிழ்க்காதீர்கள் என்று கூறிவிட்டு, ஒரு ஸ்டூலைப் போட்டுக் கொண்டு, அதிலே ஏறி நின்று ஒரு மணி நேரம்; “ஏன் இந்த தமிழர்படை ஊர்வலத்தை மேற்கொண்டேன்” என்பதற்கான காரண காரியங்களை விளக்கிய பிறகு, செருப்புத் தோரணம் கட்டியவர்களே அந்தத் தோரணத்தை அவிழ்த்து விட்டு அழகிரிசாமி அவர்களோடு வந்தவர்களுக்கு விருந்தளித்து சென்னைக்கு வழியனுப்பி வைத்தார்கள் என்பது சரித்திரம்.

(கைத்தட்டல்) இதுதான் இந்த இயக்கத்தின் வரலாறு.

1957-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலிலே ஈடுபட்டபோது, காஞ்சிபுரத்தில் அவருடைய வீட்டு வாசலிலேயே ஒரு நீளமான பலகையில் எழுதி வைத்தார்கள். அண்ணா அவர்களைப் பற்றி எவ்வளவு தரக்குறைவாக இழிவாக எழுத முடியுமோ அந்த அளவிற்கு எழுதி வைத்தார்கள். கழகத் தோழர்கள் ஆத்திரப்பட்டார்கள். அண்ணா - யாரும் ஆத்திரப்படக் கூடாதென்று சொல்லிவிட்டு - மாலை 6 மணிக்கு மேல் இருட்டு வந்த பிறகு ஒரு பெட்ரோமாக்ஸ் லைட்டைக் கொண்டு வரச் சொல்லி அந்தப் பலகைக்குப் பக்கத்திலே அந்த விளக்கைத் தொங்க விடச் செய்து, “விளக்கு

உபயம் அண்ணாதுரை” என்று எழுதி வைத்தார். அது இரவில் எல்லோருக்கும் தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக அதை எழுதி வைத்தார். அப்படி எதிர்நீச்சல் போட்டவர்கள் நாம்.

கடலூரில் இருக்கின்ற ஒரு பாலத்திற்குப் பக்கத்தில் பெரியாரின் சிலை ஒன்றிருப்பதை நீங்கள் பார்த்திருப்பார்கள். அதை நான்தான் கடந்த காலத்தில் முதல்வராக இருந்த போது திறந்து வைத்தேன். அந்தச் இடத்திற்கு ஒரு வரலாறு உண்டு. ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் பெரியார் ஊர்வலமாகச் சென்றபோது, அந்தப் பாலத்திற்குப் பக்கத்தில் சென்றபோது, அந்த ஊர்வலத்தில் பெரியாரின் மீது செருப்புகள் வீசப்பட்டன. அப்படிச் செருப்பு வீசப்பட்ட அந்த இடத்தில் அந்த நினைவாக அந்தச் சிலையை வைக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்பினார்கள் பெரியார் அந்தச் சிலை திறப்பு விழாவிலேயே பெருமிதத்தோடு கலந்து கொண்டு அதைப்பற்றிச் சொன்னார்.

இவைகளையெல்லாம் சொல்வதற்குக் காரணம் ஏச்சு, பேச்சு, இழிவு, தூற்றல் இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு இந்த இயக்கம் வளர்ந்திருக்கின்றது. சிறைச்சாலைக்கும் சென்றிருக்கிறோம். இதைப்போன்ற சித்திரவதைகளையும் எங்களுடைய குலத்தைப் பற்றி, குடும்பத்தினரைப் பற்றி, உற்றார் உறவினர்களைப் பற்றி, எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையைப் பற்றியெல்லாம் தரக்குறைவாகப் பேசப்பட்ட அந்த எதிர்ப்புக்களையெல்லாம் கடந்துதான் இந்த இயக்கம் இன்றைக்கு வளர்ந்திருக்கின்றது.

அத்தகைய வளர்ச்சிக்கு நம்முடைய அருணா அவர்கள் குறிப்பிட்டதைப் போல - ஒளிமயமான

இடத்திலே இருந்து கொண்டு உழைக்காவிட்டாலும், என்னுடைய அருமைச் சகோதரர் நாத்திகம் இராமசாமி அவர்களும் தன்னுடைய உழைப்பைத் தந்திருக்கிறார், பணியாற்றியிருக்கிறார். அவருடைய எண்ணங்களை, எழுத்துக்களை இந்த இயக்கத்திற்கு வழங்கி வளர்த்திருக்கிறார் என்ற வகையிலே அதற்கு நன்றிக் கடனாகத்தான் - அதைப் பாராட்டுவதற்காகத்தான் - அந்தப் பெருமையிலே நாங்களும் பங்கு கொள்வதற்காகத்தான் இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மணமக்கள் சுபாஷையும் மாலதியையும் வாழ்த்துகிறோம்.

18-10-98 அன்று சென்னையில் நாத்திகம் இராமசாமி இல்ல மணவிழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000