உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

அய்யணன் அம்பலம் படத்திறப்பு விழா

பகுதி 1 · 1 / 1

அய்யணன் அம்பலம் படத்திறப்பு விழா

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நிகழ்ச்சி எத்தனை சோகத்தோடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆற்றிய உரையிலிருந்து மிக நன்றாக நாமெல்லாம் அறிவோம். அய்யணன் அம்பலம் அவர்களை இங்கே அருமை நண்பர் திண்டிவனம் இராமமூர்த்தி அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல 1960-ஆம் ஆண்டிலிருந்து நான் நன்கறிவேன் பல ஆண்டுக்காலம் அவரோடு நெருங்கிப் பழகுகின்ற வாய்ப்பினையும் பெற்றவன் என்ற முறையில் இது எனக்கும் ஒரு பெரும் இழப்பு என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது இந்த இழப்பை அவ்வளவு விரைவிலே ஈடுசெய்ய முடியாது என்கிற கவலையும் என்னை ஆட்கொள்கின்றது.

தமிழகத்திற்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே தென் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கு மாத்திரமல்ல, இன்றைக்கு அகில இந்திய அளவில் பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராகவும் உயர்ந்த ஒரு சூழலில் அவரை

இழந்திருக்கிறோம் என்பதை எண்ணும்போது, இது அனைத்திந்தியாவிற்கும், இந்தியாவிலே உருவாக வேண்டிய சமத்துவ சமுதாயக் கொள்கைக்கும் ஒரு பெரும் இழப்பு என்றுதான் நாம் கொள்ள வேண்டும்.

அண்மையில் நண்பர்கள் எல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்குமான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி - அதிலே எந்த அளவிற்கு அவர் நிதானமாக உரையாற்றினார் என்ற அந்த நினைவு-எல்லோர் உள்ளத்திலும் பதிந்திருப்பதை நாம் கண்டோம். காரணம், வெப்பம் ஓங்கிய சூழலிலே கூட வெப்பத்தைத் தணித்து ஒளிமிகுந்த கருத்துக்களைத் தர வேண்டுமென்ற அந்த நிலையிலே அங்கே அவர் செயல்பட்டார்.

ஒரு கூட்டத்தில், நண்பர் சந்தானம் அவர்கள் மிகுந்த ஆவேசத்திற்கு ஆளாகி - வாருங்கள் செல்லலாம் என்று சிலர் ஆற்றிய உரையின் காரணமாக புறப்பட்டபோது, அய்யணன் அம்பலம் அவர்கள் அங்கே இருந்தவாறே என்னைப் பார்த்தார். நான் அவரைக் கையமர்த்தினேன். உடனடியாக சந்தானத்தையும் அமைதிப்படுத்தி இருக்கையில் அமரச் செய்து அய்யணன் அம்பலம் அவர்கள் அமர்ந்து, இரண்டு நாள் நிகழ்ச்சியை நம்முடைய நண்பர் வரதராஜன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல எந்தக் கொள்கைக்காக அன்றைக்குக் கூடினோமோ, எந்த முடிவை எடுப்பதற்காக கூடினோமோ, அதை நிறைவேற்றுவதற்குப் பெரும் ஒத்துழைப்பைத் தந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாய வளையத்திற்குள்ளே வைத்து நோக்கக் கூடியவரல்ல, சமுதாய

வளையத்திற்குள் சிக்காதவர், எல்லாச் சமுதாயமும் மனித சமுதாயம் என்கிற ஆகாயமளாவிய அந்தக் கொள்கையை நெஞ்சிலே ஏந்திக் கொண்டிருந்தவர். அதனால்தான் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்காக வாதாடுவது, போராடுவது என்றில்லாமல் மொத்தமாக ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உரிமை கோருகின்ற சமுதாயத்திற்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு சமுதாய எழுச்சிக்காகப் போராட்டங்களில் ஈடுபட வேண்டுமென்று சிலரைத் தூண்டிவிடுவது, உசுப்பிவிடுவது சுலபமான காரியம். குறிக்கோள் எது, அதை எப்படி அடைவது என்பதிலே உத்தமர் காந்தியடிகள் எடுத்துச் சொன்ன கருத்தை இளைஞர்களும் பெரியவர்களும் என்றென்றைக்கும் நெஞ்சிலே பதிய வைத்துக்கொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதைவிட அந்தக் குறிக்கோளை அடைவதற்காக நாம் மேற்கொள்கின்ற அணுகுமுறைதான் முக்கியம். அந்த அணுகுமுறையை நல்ல வகையிலே கற்றவர்.

கற்றதைச் செயல்படுத்திக் காட்டியவர் மறைந்த பெரியவர் அய்யணன் அம்பலம் அவர்கள். வன்முறையால் ஒரு குறிக்கோளை எய்துவதைவிட, நன்முறையால் அனைவரையும் கவர்ந்திழுக்கின்ற - அனைவருடைய ஆதரவைப் பெறுகின்ற ஆக்க ரீதியான பணிகளால் அந்தக் குறிக்கோளை அடைந்தால்தான் அது நிலைபெறும்.

இன்றைக்குத் தமிழகத்தின் நிலையை எண்ணும் பொழுது, யாரோ ஒரு காலத்திலே சாதிப் பிரிவினைகளை உருவாக்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் யார் சாதி வேறுபாடுகள் உருவாவதற்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டார்களோ, அவர்கள் யாரும் இன்றைக்குச் சாதி

வெறியை தூண்டிவிடுகின்ற முயற்சியிலே - வன்முறைக் களமாகத் தமிழகத்தை ஆக்குவதில் முனைந்து களத்தில் நிற்கவில்லை. ஆனால் பிரிக்கப்பட்ட - சாதி வாரியாகப் பிரிந்த மக்களாகிய நாம்தான் இன்றைக்கு ஒருவருக்கொருவர் சாதிபேதம் காட்டி, மத பேதம் காட்டி போரிட்டுக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காலத்திலே நூல்கள் எழுதுகின்ற ஆசிரியர்கள் ஒரு நாட்டு வளப்பத்தை முதலிலே குறிப்பிடுவார்கள். அதைக் குறிப்பிட்டுவிட்டுத்தான் ஒரு புதினத்தை எழுதுவார்கள். அப்படிக் குறிப்பிடும்போது சொல்வார்கள் - நீர்வளம், நிலவளம் நிறைந்த நாடு என்று தொடங்கி, அந்த நாட்டு ஆட்சியின் சிறப்பு எப்படியிருந்தது என்பதைச் சுட்டிக்காட்ட, புலியும் மானும் ஒரே துறையிலே தண்ணீர் குடித்தது என்று அந்தச் சிறப்பை எழுதுவார்கள்.

நான் எண்ணிப் பார்க்கிறேன். நான் ஒரு முறை கூட குறிப்பிட்டேன். “அந்தக் காலத்திலே ஒற்றுமைக்கு அடையாளமாக புலியும் மானும் ஒரே துறையிலே தண்ணீர் குடித்தது என்பதுகூட வேண்டாம், இந்தக் காலத்தில் மானும் மானுமாவது ஒரே துறையிலே தண்ணீர் குடிக்க வேண்டாமா” என்று நான் ஆதங்கப்பட்டுக் கூறியதுண்டு.

ஏனென்றால் யார் ஒடுக்கப்பட்டவர்கள், யார் அடக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலே இருக்கிறோமோ, அவர்கள்தாம் ஒருவருக்கொருவர் இன்றைக்கு மோதிக் கொள்கிறோம். யார் பிற்படுத்தப்பட்டிருக்கிறோமோ, யார் மிகவும் பிற்படுத்தப்பட்டிருக்கிறோமோ, யார் தாழ்த்தப்பட்டு இருக்கிறோமோ அவர்கள்தாம் இன்றைக்கு ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறோம்.

தலையிலே பிறந்தவர்கள், தோளிலே பிறந்தவர்கள், தொடையிலே பிறந்தவர்கள், காலிலே பிறந்தவர்கள் என்றெல்லாம் பிறப்புக்குக் கற்பனைகள் செய்யப்பட்டு அப்படிக் காலிலே பிறந்தவர்களாகக் கருதப்படுகின்ற நாம்தான் இன்றைக்கு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருக்கிறோம். தலை, தோள், தொடை எல்லாம் அமைதியாக, பத்திரமாக இருக்கின்றது. ஆனால் பாதங்கள்தாம் இன்றைக்குப் படாதபாடுபடுகின்றன.

இந்தப் பாதகச் செயல்களிலிருந்து நாம் விடுபட வேண்டும், ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாத் தலைவர்களும் பாடுபடுகிறார்கள். அப்படிப் பாடுபட்ட தலைவர்களிலே ஒருவராக விளங்கியவர்தான் மறைந்த பெரியவர் அய்யணன் அம்பலம்.

தேவர் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய வழியைப் பின்பற்றி அவர்கள் தன்னுடையப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். தேவர் திருமகன் முத்து ராமலிங்கத் தேவருடைய வழி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய வழி. 96-ஆம் ஆண்டும் நாங்கள் மீண்டும் பதவிப் பொறுப்பையேற்ற போது, சட்டப் பேரவையிலே உரையாற்றிய சந்தானம், வல்லரசு இருவரும் வருகின்ற சுதந்திரப் பொன்விழா ஆண்டில் சுதந்திரத்திற்காகப் பெரும் போரிட்ட நேதாஜியின் சிலையைத் தமிழகத்தின் தலைநகரத்திலே திறந்து வைக்க வேண்டுமென்று சொன்னார்கள்.

நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டு அவையிலேயே அறிவித்தேன். அந்தச் செய்தி ஏடுகளிலே வெளிவந்தது தான் தாமதம் - மதுரையிலிருந்து அய்யணன் அம்பலம் அவர்கள் தொலைபேசியில் என்னையழைத்து, நன்றி தெரிவித்தார்கள். அந்த நினைவோடு சுதந்திரப் பொன்

விழா ஆண்டிலே சென்னைக் கடற்கரை காமராஜர் சாலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசினுடைய சிலை திறக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தேன். வந்திருந்து உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை இன்னமும் என்னுடைய செவிகளிலே ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இன்று அவர் மறைந்தபோதும், அதற்கு முன்பும்கூட ஏன் பிறகும்கூட அவர் ஆற்றிய உரையைப் பற்றி இங்கே பேசிய நண்பர்கள் எடுத்துக்காட்டினார்கள். நானும் அதை நினைவில் கொண்டிருக்கிறேன். டாக்டர் அம்பேத்கர் அவர்களோ, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களோ, சாதியத் தலைவர்கள் அல்ல. அவர்கள் இருவரும் தேசியத் தலைவர்கள், தேசிய அளவிலே வைத்துப் போற்றத் தகுந்தவர்கள் என்ற கருத்தை ஓங்கியொலித்தவர் அய்யணன் அம்பலம்.

இன்றைக்குச் சாதி உணர்வுகளைத் தூண்டி விடுகின்ற சிலர் ஐம்பதாண்டு காலத்திற்கு முன் தமிழ்நாடு எப்படியிருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் - சாதி உணர்வுகளையெல்லாம் மங்கச் செய்து, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம் என்ற நிலைக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பெருந்தலைவர் காமராஜர் - இவர்கள் எல்லாம் பட்ட பாடுகளை எண்ணிப் பார்த்தால், இன்றைய இளைஞர் சமுதாயம் தங்களுடைய வழிமுறைகளை, தங்களுடைய துடிப்புணர்வுகளை மாற்றி அமைத்துக் கொண்டு எல்லோரும் ஓர் குலமாக, தமிழகத்திலே எல்லோரும் தமிழர்களாக, இந்தியத் திருநாட்டில் எல்லோரும் இந்தியர்களாக விளங்க உத்தமர் காந்தியடிகள் போதித்த அந்த அணுகுமுறையை மேற்கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன்.

பசும்பொன் தேவர் திருமகன் என்ன சொன்னார் என்பதை தோழர் பிஸ்வாஸ், எம்.பி. அவர்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஆற்றிய இரங்கல் உரையிலே கூடக் குறிப்பிட்டிருக்கிறார். 1957-ஆம் ஆண்டு தேவர் திருமகன் சொன்னது - அந்த வாசகம் - “நம்மை, நம்முடைய எதிரிகள் மோசமாகச் சீண்டி வம்புக்கு இழுத்தாலும், அமைதி காப்பதற்குப் பதிலாக வன்முறைக்கு வன்முறை என்று யாராவது இறங்குவார்களேயானால், அது என் இதயத்தைக் கிழித்து என் இரத்தத்தைக் குடிப்பதற்குச் சமமாகும்” - என்று சொன்னவர் தேவர் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் என்கிறபோது, வன்முறைக்குத் தமிழகத்திலே இடம் இருக்கலாமா?

அந்தத் தேவர் திருமகனைக் குற்றஞ் சாட்டலாமா? அதைப்போலவே இன்னொரு சாரார் தாழ்ந்தே கிடக்க வேண்டியவர்கள், ஒடுங்கியே கிடக்க வேண்டியவர்கள், அடங்கியே கிடக்க வேண்டியவர்கள், நாம் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே பிறந்தவர்கள் என்கிற ஆணவம் கொண்டும் திரியலாமா? என்ற இந்த வினாக்களுக்கு நாம் விடையிறுத்துக் கொள்ள வேண்டும்.

அப்படிக் கிடைக்கின்ற விடைதான் தமிழகத்திலே எல்லோரும் ஓர் குலம் என்கிற நிலை. அந்த நிலையை ஏற்படுத்துவதுதான் மறைந்த அந்தப் பெருமகனுக்கு நாம் செலுத்துகின்ற காணிக்கை.

நிகழ்ச்சியின் தலைவர் அசோக் கோஷ் குறிப்பிட்டார். இந்தப் பெருமகனார் மறைந்தவுடன் அதுபற்றி நீதி விசாரணை ஒன்று வேண்டுமென்று கேட்டதையும், அதை நான் ஏற்றுக்கொண்டதையும் குறிப்பிட்டு இங்கே வேறு சில நண்பர்கள் வைத்த கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இங்கே பேசிய நண்பர்கள் எல்லாம் எடுத்துக் காட்டியதைப்போல, இந்த நிகழ்ச்சியிலே கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறோம், எப்படி ஏற்றுக் கொள்கிறோம், எப்போது அதை நிறைவேற்றுவோம் என்பதைவிட, மிக முக்கியமான கோரிக்கை மறைந்தும் மறையாத அந்தப் பெரியவர் அய்யணன் அம்பலம் நம் முன்னால் வைத்த கோரிக்கை. அதை நாம் நிறைவேற்றுவோம். “நாமனைவரும் சகோதரர்கள் - நம்மிடையே சண்டை சச்சரவில்லை, மதமாச் சரியங்கள் இல்லை, சாதிகளிலே, மதங்களிலே சாய்ந்து நம்முடைய சமத்துவ உணர்வுகளைக் கெடுத்துக்கொள்ள மாட்டோம்” என்ற அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அய்யணன் அம்பலம் அவர்கள் விடுத்துச் சென்றிருக்கிறாரே, அந்தக் கோரிக்கையை நாம் நிறைவேற்றுவோம் என்று கூறி அவருடைய மறைவுக்காகவும், அவரோடு மறைந்த தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் முத்துராம லிங்கத்தின் மறைவுக்காகவும், அந்தக் கட்சியின் அமைப்புச் செயலாளர் உசிலை இராஜனின் மறைவுக்காகவும் ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்து இந்த அளவில் என் உரையை நிறைவு செய்கிறேன்.

15-11-98 அன்று அய்யணன் அம்பலம் படத்தை திறந்து வைத்து ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000