அன்னை தெரசாவின் படத்திறப்பு
பகுதி 1 · 1 / 1
அன்னை தெரசாவின்
படத்திறப்பு
வேறு பல அலுவல்கள் காலை முதல் இருந்த காரணத்தால் சற்றுக் காலந்தாழ்ந்து வர நேரிட்டது. அந்த அலுவல்களை மீண்டும் தொடர வேண்டிய காரணத்தால் இடையிலேயே அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
அன்னை தெரசா மறைவையொட்டி சென்னைத் தொலைக் காட்சியிலும் வானொலியிலும் என்னிடம் இரங்கல் உரை கேட்டபோது நான் சொன்ன வாசகம் “பருந்துகளும் கழுகுகளும் வட்டமிடும் இந்த உலகத்தில் சமூக சேவை எனும் தடாகத்தில் நீந்திக் கொண்டிருந்த அன்னப்பட்சி மறைந்துவிட்டது” என்று குறிப்பிட்டேன்.
அன்னம் ஒரு பறவையையும் குறிக்கும். அன்னம் அன்னை தெரசாவையும் குறிக்கும். அன்னம், அவர்கள் ஏழையெளிய மக்களுக்கு அளித்த உணவையும் குறிக்கும். இப்படி எல்லா வகையிலும் வெண்புறாவாக - சமாதானப் பறவையாக ஏழைகளை உறவினராகக் கொண்டிருந்த - நலிந்த மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய அன்னை தெரசா அவர்கள் மறைந்து விட்டார் என்று சொல்லுவதைவிட நம் அனைவருடைய - உலக மக்கள்
அனைவருடைய உள்ளத்திலும் நிறைந்துவிட்டார் என்று சொல்வதுதான் பொருத்தமுடையதாகும்.
அன்னை அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் 1962-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆசியாவின் ஜோதி பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த அந்தக் காலத்தில் சிறந்த சமூக சேவிக்கென ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது பெரிதல்ல - அந்த விருதை வாங்கிச் சென்ற அன்னை தெரசா அவர்களைப் பற்றி - பண்டித நேரு அவர்கள் குறிப்பிட்டதுதான் என்றென்றைக்கும் அழியாத வரிகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
குடியரசுத் தலைவருடைய கையிலே இருந்து அன்னை தெரசா அவர்கள் விருதினை வாங்கிச் சென்ற காட்சி கொடிய நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையை தன் இரு கைகளாலும் பரிவோடு ஏந்தி எடுத்துச் செல்வது போன்ற ஒரு காட்சியை நினைவுறுத்தியது என்று குறிப்பிட்டார்கள். அது மாத்திரமல்ல; “அந்தக் காட்சியைக் கண்டபோது என் கண்ணீர்த் துளிகளை கட்டுப்படுத்துவது எனக்கு மிகவும் அரிதாக இருந்தது. அப்படியே உருகிப் போனேன்” என்று தன்னுடைய சகோதரி விஜயலட்சுமி பண்டிட் அவர்களிடம் நேரு சொன்னதாக ஒரு குறிப்பு.
இன்னொன்று மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் பி.சி.ராய், முதலமைச்சர்களிலேயே மிகுந்த புகழ் வாய்ந்தவர். பண்டித நேரு அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடிய அளவிற்கு பண்டித நேருவிடம் பழகியவர். அவர் அன்னையினுடைய அறப்பணிகளைக் குறித்து உதிர்த்த வார்த்தைகள்; பி.சி.ராய் அவர்களுடைய 80-ஆவது பிறந்த நாள், அப்பொழுது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அன்னை தெரசாவைப் பற்றி செய்தியாளர்கள் மேற்கு வங்க முதல்வராக இருந்த பி.சி.ராய் அவர்களிடம் கேட்டபோது பி.சி.ராய் கூறுகிறார் - அந்த வாசகத்தை அப்படியே படித்துக் காட்டுகிறேன்.
“இந்த என் பிறந்தநாளில் இந்த முதிய வயதில் முதன் முதலாக யாரைப் பற்றிய நினைவு எனக்கு வந்து தெரியுமா? நாட்டின் விடுதலைக்காக எந்தத் தலைவரோடு ஒன்றி நின்று போராடினேனோ அந்த என் அருமைத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் நினைவுகூட எனக்கு வரவில்லை. என் உயிர்க்குயிரான உற்ற தோழர் ஜவஹர்லால் நேரு அவர்களின் எண்ணமும், என் நெஞ்சில் எழவில்லை. ஏன், எனக்கு நெருக்கமான என் உற்றார், உறவினர் எவரைப் பற்றிய சிந்தனையுமே எனக்கு வரவில்லை.
ஆனால் எனது அலுவலகத்துக்குச் செல்லும் அந்த மாடிப்படிகளில் நான் காலடி வைத்து ஏறும்போது ஒரே ஒரு எளிய உருவம் மட்டுமே என் நெஞ்சம் முழுதும் நிறைந்திருந்தது. திக்கற்ற ஏழைகளையும் நோயாளிகளையும், குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காக, அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகத் தம் வாழ்வையே ஒப்படைத்துக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைக்கிறாரே அந்த தெரசாவின் மெலிந்த வடிவமே என் இதயம், மூளை எல்லாவற்றையுமே சுற்றி வளைத்துக் கொண்டு விட்டது.”
என்று பி.சி.ராய் பாராட்டுகிறார்.
பிறந்தநாளில் காந்தி அடிகளை நினைக்கவில்லை. பண்டித நேருவை பிறந்த நாளில் நினைக்கவில்லை. அன்னை தெரசாவின் உருவம்தான் தன் கண் முன்னால்
நின்றது என்று மேற்கு வங்கத்தினுடைய முதலமைச்சர் பி.சி.ராய் சொன்ன இந்த வாசகம் அவருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. நம் அனைவருக்கும் சொந்தமான ஒரு வாசகமாக ஆகி விட்டிருக்கின்றது.
அன்னை அவர்கள் நம்மை விட்டு நீங்கிவிட்டார்; பிரிந்து விட்டார் என்று யாரும் கருதத் தேவையில்லை. அவருடைய உழைப்பு; ஒப்பற்ற சேவை, ஏழை மக்கள் பால் கொண்டிருந்த இரக்கம், அன்பு நோயாளிகளிடம் காட்டிய பரிவு, நலிந்தோரிடத்திலே அவர் கொண்டிருந்த நாட்டம் இவைகள் எல்லாம் அன்னையின் வடிவிலே நம்முடைய உள்ளத்திலே பதிந்திருக்கின்றன.
அவைகளைச் செயல்படுத்துவது ஒன்றே அன்னை நம்மிடத்திலே விரும்பியது. மலர்களைவிட மென்மையான உள்ளத்தோடு ஏழையெளியவர்கள்பால் நாம் காட்டுகின்ற அன்பும் கருணையும்தான் அன்னை தெரசா விரும்பியது, அதைச் செய்வோம். அந்த வழி நடப்போம். அதையே நம்முடைய இந்த இரங்கல் நிகழ்ச்சியிலே மேற்கொள்கிற சூளுரையாகக் கொள்வோம்.
- முரசொலி 11.9.97
