உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சொற்பொழிவுகள்

அன்னை தெரசா நூல் வெளியீட்டு விழா

பகுதி 1 · 1 / 1

அன்னை தெரசா நூல் வெளியீட்டு விழா

நேற்று வரையில் ஒரு மணி என்பது அறுபது நிமிடங்களைக் கொண்டது. இன்று முதல் ஒரு மணி என்பது பத்து நிமிடங்களைக் கொண்டது. ஏனென்று கேட்டால் அதற்கு உண்மையான பொருள் தம்பி வலம்புரி ஜானுக்கும், வின்சென்ட் சின்னதுரைக்கும்தான் தெரியும். என்னை அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்த போது பத்தே நிமிடங்கள் நீங்கள் நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டுவிட்டு சென்று விடலாமென்றார்கள். சரியாக பத்து மணிக்கு வந்தேன்.

அறுபது நிமிடங்கள் ஓடிவிட்டன. எனவே இன்று முதல் காலக் கணக்கு மாறுகின்றது (சிரிப்பு) இனிமேல் ஒரு மணி என்றால் அறுபது நிமிடங்கள் அல்ல. வலம்புரி ஜான், வின்சென்ட் ஆகியோரின் கணக்குப்படி பத்து நிமிடங்கள் என்று (பலத்த சிரிப்பு) எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நூலுக்கு ‘பூமியின் தேவதை’ என்று வின்சென்ட் சின்னதுரை அவர்கள் பெயரிட்டிருப்பது பொருத்தமானதல்ல. வியப்பாக இருக்கும் உங்களுக்கு! அன்னை தெரசா; பூமிக்கு மாத்திரம் தேவையல்ல. அடுத்து மனிதன் இன்னும் ஒரு நூற்றாண்டுக்

காலத்திற்குள் சென்று வாழவிருக்கின்ற சந்திர மண்டலத்திற்கும் செவ்வாய் மண்டலத்திற்கும் கூட அன்னை தெரசா தேவதைதான். (கைத்தட்டல்) ஏனென்றால் சந்திர மண்டலத்திலே மலைகளைக் காணலாம். மணலைக் காணலாம், நீரூற்றுக்களைக் காணலாம்; பனிக்கட்டிகளைக் காணலாம். அன்பைக் காண முடியாது. அந்த அன்பை அங்கெல்லாம் பொழியக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர் அன்னை தெரசா என்பதால் அவர் பூமிக்கு மாத்திரம் தேவையல்ல. புதிது புதிதாக மனிதன் கண்டுபிடித்து வாழக்கூடிய இடங்கள் எங்கெங்கு உண்டோ அந்த அண்டபகிரண்டத்திற்கும் அன்புத் தேவதையாக இருக்கக்கூடியவர்தான் அன்னை தெரசா அவர்கள்.

அவர்களைப் பற்றி இங்கே உரையாற்றியவர்கள் எல்லாம் விளக்கியிருக்கிறார்கள். யாரும் எடுத்துச் சொல்லாமலே அன்னை தெரசா அவர்களைப் பற்றி அனைவரும் அறிந்திருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அதைச் சொல்லும்போது எப்படி தேன் தெவிட்டுவதில்லையோ அதுபோல அன்னை தெரசா அவர்களைப் பற்றிய புகழுரைகள் யாருக்கும் தெவிட்டுவதில்லை.

அன்னை தெரசா ஒரு சாதாரணக் குடும்பத்திலே பிறந்தார்கள். இந்த நூலிலே குறிப்பிடவாறு அழகான கவிதை வரிகளில் வின்சென்ட் அவர்கள் சிறப்பித்திருக்கின்ற அந்த பாங்கிற்கேற்ப,

“அன்னை திரானாவின் அடிவயிற்றுச் சீதனமாக சிலையெடுக்கப்பட்ட மூன்றாவது குழந்தைதான் ஆக்னஸ் கொன்சகா பொஜாக்ஸியு - இதுதான் அன்னை தெரசாவின் இயற்பெயர்.”

அடுத்துச் சொல்கிறார்,

“முல்லை அவிழ்ப்பாக - பிள்ளைச் சிரிப்பாய் கொள்ளை வனப்போடு இருந்தாள். “கொன்சகா” என்கிற அல்பேனியச் சொல்லை அருந்தமிழில் பெயர்த்துப் பார்த்தால், “அரும்பு” என்றே அர்த்தப்படும். அதுதான் வீட்டில் அவளை அழைத்த செல்லப் பெயர்.”

என்று குறிப்பிடுகிறார். அரும்பு என்பதுதான் கொன்சகா என்கிற அல்பேனியச் சொல்லால் அமைந்த அந்தப் பெயருக்கு சரியான, பொருத்தமான தமிழ் என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அவர்கள் அரும்பாகவே இருந்து மறைந்தார். ஆனால் ஏழையெளிய மக்களுக்கெல்லாம் அவர் கரும்பாகவே விளங்கினார். அவர் மறைந்தார் என்று சொல்வது தவறு. ஏழை - எளிய பாமர மக்கள் அத்தனை பேருடைய நெஞ்சங்களிலும் நிறைந்தார் என்று சொல்வதுதான் சரியான சொற்றொடராகும்.

அன்னை தெரசாவைப் பற்றி மேற்கு வங்க முதலமைச்சராக இருந்தவரும், இந்தியத் திருநாட்டின் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான பி.சி. ராய் அவர்கள், அவருடைய எண்பதாவது பிறந்த நாளில் சொன்ன வாசகத்தை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

“80ஆவது பிறந்த நாள் கொண்டாடுகின்ற நீங்கள் மேற்கு வங்க முதல்வர் பதவியிலே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் எதை நினைத்து இன்புறுகிறீர்கள்?” என்று கேட்டபோது, பி.சி. ராய் சொன்னாராம். “உலக உத்தமர் காந்தியடிகள், அவரை நான் வணங்கி வழிபட்டவன். இன்றைக்கும் அவரைப் போற்றிக்

கொண்டிருப்பவன். ஆனால் அவரோ அல்லது நான் நெருங்கிப் பழகிய பண்டித நேருவோ இந்த எண்பதாவது பிறந்த நாளில் உடனடியாக என் நினைவிற்கு வரவில்லை. என் நெஞ்சிலே நிழலாடிக் கொண்டிருப்பதெல்லாம் அன்னை தெரசாவின் பெயர் தான்.” என்று பி.சி. ராய் குறிப்பிட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கின்றது.

பி.சி. ராய் எப்படிப்பட்டவர், எத்தகைய இரும்பு நெஞ்சம் கொண்டவர் என்பதெல்லாம் இந்திய வரலாறு உணர்ந்தவர்களுக்குப் புரியும். பண்டித நேருவையே பெயர் சொல்லி அழைக்கக்கூடிய அளவிற்குச் செல்வாக்கு மிக்கவர். அவருக்கு எண்பது வயது. அப்போது அன்னை தெரசா அவர்களுக்கு 50 வயது. அந்த ஐம்பது வயது பெருமாட்டிதான் தன் நெஞ்சத்திலே நினைவலைகளாக இருக்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அன்றைக்கே புகழீட்டியவர் அன்னை தெரசா அவர்கள்.

தம்பி வலம்புரி ஜான் இங்கே குறிப்பிட்டார். எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். எத்தனை முறை உரையாற்றியிருக்கிறார். எத்தனை ஏழை எளியோருடைய பகுதிகளுக்கெல்லாம் சென்று தன்னுடைய பங்குப் பணியினை ஆற்றியிருக்கிறார் என்றெல்லாம் குறிப்பிட்டார். கழக அரசு குடிசை மாற்று வாரியம் என்ற புதிய திட்டத்தை ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கியபோது 70 அல்லது 71- ஆம் ஆண்டுகளில் அன்னை தெரசா அவர்கள் அந்தக் குடிசை மாற்று வாரிய வீடுகளைக் காண வேண்டுமென்று விரும்பியதும், அப்போது குடிசை மாற்று வாரியத் தலைவராக இருந்த என்னுடைய அருமைச் சகோதரர் அரங்கண்ணல் அவர்களைச் சந்தித்து அவர்கள் உரையாடியதும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும்.

இன்றைக்கும் சகோதரர் அரங்கண்ணல் வீட்டில் அன்னை தெரசா அவர்கள் குடிசை மாற்று வாரியம் பற்றிப்பேசிய அந்தப் பேச்சு நடைபெற்ற போது எடுத்த புகைப்படம் இருப்பதை நான் சில நாட்களுக்கு முன்பு கூடப் பார்த்தேன். ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சாதாரண விஷயங்களாக இருந்தால்கூட அது சாமான்ய மக்களுக்குப் பயன்படுகிற ஒன்றாக இருந்தால் அதில் எல்லாம் தன் கவனத்தைச் செலுத்தக் கூடியவராக விளங்கியவர் அன்னை தெரசா அவர்கள்.

அவருடைய புகழைப் போற்றுகின்ற இந்த நாளில் அவரது புகழை மேலும் பரப்புகின்ற அளவிலே நம்முடைய அன்பிற்குரிய அருள் தந்தை வின்சென்ட் சின்னதுரை அவர்கள் இந்த அழகான, அருமையான, அர்த்தம் பொதிந்த, சொல்லுக்குச் சொல் சுவையேற்றி யாத்துத் தந்துள்ள இந்த கவிதை மலரை ‘பூமியின் தேவதை’ என்ற பெயருடைய இந்த நூலை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

வரவேற்புரையாற்றிய அருட்தந்தை ஜோ அந்தோணி அவர்கள் இங்கே ஒரு கேள்விக்குறியை எழுப்பிவிட்டுப் போய் இருக்கிறார். அதற்கு நான் முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் நிலைமை வேறு விதமாக ஆகிவிடும். எனவே அந்தக் கேள்விக்குறிக்குப் பதில் அளித்து நான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.

மத்தியிலே ஒரு அரசு, மாநிலத்திலே ஒரு அரசு இருக்கும் போது மத்தியிலே உள்ள அரசை மாநிலத்திலே உள்ள அரசு நிர்வாக ரீதியிலே அனுசரித்துப் போவதும், மாநிலத் தேவைகளுக்காக மத்திய அரசோடு வாதிடுவதும், மத்திய அரசோடு உறவு கொள்வதும், நான் சார்ந்துள்ள இயக்கம், இன்று நேற்றல்ல. ஆரம்பக் காலத்திலிருந்து ஏற்றுக் கொண்ட அணுகுமுறையாகும்.

அதனால்தான் இந்திராகாந்தி அவர்கள் இராஜாஜி மண்டபத்தின் முகப்பில் நடந்த விழாவில் அறிஞர் அண்ணா அவர்களின் படத்தைத் திறந்து வைக்க வந்தபோது அவர்கள் முன்னிலையிலே நான் சொன்னேன் - “அம்மையார் அவர்களே, உங்களோடு நாங்கள் உறவுக்குக் கை கொடுப்போம். அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று கூறினேன்.

அந்தச் சொல் தேயவில்லை. ஊனமடைய வில்லை, சிதையவில்லை, சேதாரமடையவில்லை. அதைத்தான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

மத்தியிலே உள்ள ஆட்சியை ஆதரிப்பது என்பது வேறு. அந்த ஆட்சியை நடத்துகின்ற கட்சியை ஆதரிப்பது என்பது வேறு. எனவே என்னுடைய அருமை பெருமக்களே, ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய வல்லமை, வலிமை, திறமை, ஆற்றல் அனைத்தும் உங்களுக்கு உண்டு என்று நான் கருதுகிறேன், நம்புகிறேன்.

இந்த இயக்கம் - இங்கே தமிழகத்தில் இப்போது ஆட்சி நடத்துகின்ற இயக்கம் - இன்று நேற்றல்ல. அந்தக் காலத்தில் அதாவது நாங்கள் ஒரு ஆட்சிக்கு வருவோமென்று கருதாத அந்தக் காலத்திலிருந்தே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்து மக்களுக்கும், குறிப்பாக சிறுபான்மைச் சமுதாயத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாகத் திகழக் கூடிய இயக்கமாகும்.

எனவே ஆட்சிக்கு வந்துவிட்ட காரணத்தால் அந்தப் பாதுகாப்புப் பணியிலேயிருந்து நாங்கள் ஒதுங்கி விட மாட்டோம். என்றைக்கும் உங்களோடு இருப்பவன்தான் நான். உங்களுக்கு வருகின்ற எந்தத் துன்ப துயரங்களையும் களைவதில் எனக்குப் பங்கு உண்டு.

(பலத்த கைத்தட்டல்) எனவே இந்தச் சமுதாயத்தை, இந்தச் சிறுபான்மைச் சமுதாயத்தைக் காப்பாற்றுவதில் முதல் ஆளாக நான் இருப்பேன். முதல் இயக்கமாக எங்கள் இயக்கம் இருக்கும் என்ற உறுதியை இங்கே நான் வழங்கி நம்முடைய அருட்தந்தை ஜோ அந்தோணி அவர்களுக்கு ஏற்பட்ட ஐயத்தைப் போக்கி விடை பெறுகிறேன்.

5-9-98 அன்று சென்னையில் அன்னை தெரசா நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

முதல் பதிப்பு 2000