உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பூமுடி/பகுதி 1
கவிதைகள்

பூமுடி

பகுதி 1 · 1 / 1

அறிவுமணங் கமழுகின்ற அண்ணன் தலைமீது

பொன்வைத்தால் நோகுமென்று

பூவாலே முடி வைத்தார்.

பூவிதழின் மென்மையினும் மென்மையான

புனித உள்ளம் — அன்பு உள்ளம் —

அரவணைக்கும் அண்ணன் உள்ளம் — அவர்

மலர் இதழ்கள் தமிழ் பேசும் —

மா, பலா, வாழையெனும் முக்கனியும். தோற்றுவிடும்!

விழிமலர்கள் வேலாகும் — வாளாகும்

தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால் !

கால்மலர்கள் வாடிடினும் — அவர்

கடும்பயணம் நிற்காது !

கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை-கழகத்தை!

அம்மலரே எதிரிகளை மன்னித்து

நெற்கதிர் போல் தலைநாணச் செய்துவிடும்

மக்களாட்சி மலர் குலுங்க,

சமதர்மப் பூ மணக்க,

தாய்மொழி தமிழே வாழ்வுப் பொழிலாக,

ஆடிவரும் தென்றல்

நாடிவரும் பூ முடியே ! புகழ்முடியே ! உமைத்

தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே தினம்

பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்...

உனைக்காக்க எனைத் துறப்பேன்.

மு.கருணாநிதி