உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
ஒருதலைக் காதல்/பிரிவுகள் 3
கவிதைகள்

ஒருதலைக் காதல்

பிரிவுகள் 3 · 3 / 11

மந்திப் பகல் தொலைந்ததென்னும் மகிழ்ச்சியிலே - காதல்

சந்திப்புக்குத் தோதாக வருகின்ற இரவுக்கு வாழ்த்துரைப்பார்!

இங்கு நற்கண்ணை நாயகியின் நிலையே வேறு!

நுங்கு நிகர் நெடுங்கண்கள் விழித்தவாறு,

இரவெல்லாம் படுக்கையிலே உறக்கமின்றி

நிமிர்ந்தும், சாய்ந்தும், புரண்டும், எழுந்தும்

நினைவெல்லாம் கிள்ளியாக நிலைகுலைந்தாள்!

அதற்குள் இரவு முடிந்ததோ என்று

அணைப்புக்குள் கிடப்பவர்கள் அதிர்வதுண்டு!

ஆனால் இவளோ; ஏனிந்த ‘ஆமூர் இரவு’ மட்டும்

ஆமைபோல் நகரத் தொடங்கிறதென அவட்டிக்

கொண்டாள்!

‘ஆருயிராம் என் கிள்ளியினை வரவேற்கும் வாய்ப்புதனை;

அதிகாலைக் கதிர் விரைவில் எழுந்தாலன்றோ பெறமுடியும்!

இவ்வூர்ச் சேவலுக்கென்ன இருமலா? சளியா? காய்ச்சலா?

இல்லையெனில் தொண்டையில்தான் அடைப்பேதும்

உண்டா?

இன்னும் என் ஊர்ச்சேவல் விடியலுக்குக் கூவவில்லை?

இச் சோம்பேறிகள் கூவாவிடில் வைகறைதான் விழித்திடாதோ?

தோழி எங்கே போய்விட்டாள்? அவளிருந்தால்

கோழி போலக் கூவச் சொல்லிச் சூரியனை எழுப்பலாமே!’

மின்னல் கொடி மங்கை நற்கண்ணை மிக வருந்திப்

பின்னல் சடை அவிழ்ப்பாள்; பின் முடிவாள்!

என்ன நேர்ந்தது இந்தக் கிழமை மலருக்கு?

ஏன் இன்னும் மலரவில்லையென ஓடிவாள்!

“தெள்ளமுதே! திருமகளே! தேனூறிய ஓவியமே!

நள்ளிரவில் நீ மட்டும் தூங்காமல் துவள்வது ஏன்?”

கள்ளமிலா நெஞ்சத்துத் தாய், அவள் அருகே வந்து

வெள்ளம்போல் அன்புதனைப் பொழிந்து கேட்டாள்!

“முள்ளொன்று காலில் தைத்தால் எளிதாக

எடுத்திடலாம் அம்மா! அந்த

முள்ளே நம் நெஞ்சில் தைத்துவிட்டால் எடுப்பதென்ன

எளிதான செயலா தாயே?”

“உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுகின்றாய்

மகளே! எனக்குச்

‘சுள்’ என்று கோபம் வருவதற்குள் உண்மையைச்

சொல்லிவிடு” என்றாள்!

“அன்னாய்! கேள்! அரிய பாடல் ஒன்றெழுதி

நன்னாளாம் நாளை விருந்துக்கு வருகின்ற கிள்ளியிடம்

பரிசாகத் தருவதற்குத் திட்டமிட்டுப்

பறக்கின்றேன் கற்பனை வானில் சிறகடித்து!” என்று

பக்குவமாய்ப் பொய் கூறித் தாயை அனுப்பிவிட்டு

படுக்கைத் தலையணையில் மார்புமுத்திப் படுத்துக்கொண்டாள்!

கற்பனையெதுவும் கருத்தரிக்காக் காரணத்தால்

கவிதையெழுதக் கண்ணுறக்கமின்றித்

தவிப்பதாகத் தாயிடத்தில் பொய்யுரைத்துத்

தப்பித்தாள் என்றாலும் நற்கண்ணை;

தன்னிலையைக் சூசகமாய் விளக்குவதற்குப்

பொன்மணியாய்க் கவிதையொன்றை ஓலையிலே தீட்டி,

மார்புக் கச்சைக்குள் மறைத்து வைத்து,

மறுநாள் கிள்ளி வந்தவுடன் தருவதற்குத்

தயாராய்த்தான் காத்திருந்தாள் - அதை அறியாத

தாயார்தான் தன் மகளின் பேச்சை நம்பித்

தலைசாய்த்தாள் கூடத்தில்! பாவம்; மகளின்

நிலை அறியா வெகுளி அன்னை!

♦

இரவென்னும் இமைப் பேழையினைத் திறந்துகொண்டு

வெள்ளை விழிப்பகல்; மெல்ல எட்டிப்பார்த்தவுடன்,

குறித்த நேரம் தவறாமல் ஊர்ச் சேவல் கூவியது!

குணதிசையில் உதயசூரியனும் மேவியது!

♦

அலைகடலோடும் வணிகன் இல்லத்து அடுக்களையில்

ஐந்தாறு பணியாட்கள் கூடி அமளிதுமளியாய் ஆடி ஓடினர்!

“இலைகள் எல்லாம் தலைவாழையாய்

இருக்கட்டு” மென்றாள் அன்னை!

“குலைகுலையாய்க் கனிவகைகள் குவியட்டு” மென்றார் தந்தை!

“கொத்துக் கறியை நெய் சொட்டச் சொட்ட வதக்குக”

என்றாள் தோழி!

“கோழிச் சப்பையில் மிளகுக்குழம்பிட்டு, நாமணக்கச்

செய்திடுக” என்றாள் நற்கண்ணை!

“சீரகச் சம்பா அரிசியை உலையிலிடுமுன்

நீருடன் பாலையும் சரிபாதி கலந்திடுக” என்றாள் அன்னை!

“கட்டித் தயிரைக் கையிலெடுத்தால் வெண்ணெய்

உருண்டை போல இருக்க வேண்டு” மென்றார் தந்தை!

“அப்பமுடன் ஆட்டுக்கால் எலும்புச் சாறூற்றி

ஊறவைத்து உருசியினைப் பெருக்கிடுக”

என்றுரைத்தாள் நற்கண்ணை!

“உப்பு மட்டும் போடுதற்கு மறந்திடாதீர்!

உப்பில்லாப் பண்டமும் ஒருதலைக்காதலும்

குப்பையிலே!” எனச் சொன்னாள் தோழி!

திடுக்கிட்டாள் நற்கண்ணை!

தெப்பமென இன்பத் திருக்குளத்தில் மிதந்திட்ட நிலைமாறி

அப்படியே சோர்ந்து போனாள், அமங்கலச் சொல்

கேட்டவுடன்!

“தப்பு! தப்பு! பெண்ணே!” என்று தோழி

தாடையிலே போட்டுக்கொண்டும், தணியவில்லை

அவள் கோபம்!

அழைக்கப்பட்டோர் எல்லாம் விருந்துக்கு வந்தபோது

அன்புடனே வரவேற்று, அமரவைத்துப்

பெருங்கோழிநாய்கன்; தன் துணைவி

பெருந்தேவிநாச்சியையும்

பெற்ற மகள் நற்கண்ணையுடன் உற்ற தோழி

பொற்கொடியினையும்

ஆமூர்த்தலைவனுக்கும் அடலேறு நற்கிள்ளிக்கும்

அவர்களுடன் வந்திருந்த பெரும்புலவர் சாத்தந்தைக்கும்

அறிமுகம் செய்துவைத்துப் புன்முறுவல் பூத்தபோது;

பெருமாட்டியொருத்தியினைப் பெருநற்கிள்ளி

பெருமை பொங்கச் சுட்டிக்காட்டி,

“இவர்கள் யார் தெரியுமா உங்களுக்கு? - நான்,

இளமையிலே தாயிழந்த குறைதீர்த்து - என்

இன்னுயிர் காத்து இவ்வண்ணம் வளர்த்து விட்ட

கன்னித் தமிழ்க் கவியரசி காவற்பெண்டு இவர்தான்” என்றான்.

கரங்குவித்து ஒருவருக்கொருவர் வணக்கம் செய்து,

கனிந்த அன்பைப் பரிமாறிக்கொண்டு,

விருந்தருந்தி முடித்தவுடன் விழியிமைகள் படபடக்க;

வேங்கைநிகர்க் கிள்ளியிடம் விரைந்து வந்தாள் நற்கண்ணை!

“இங்கு வந்து எம் இல்லமும் உள்ளமும் நீவிர்

இன்புறச் செய்தமைக்கு இதயத்து நன்றியினை

ஓலையில் ஒரு பாட்டாக ஆக்கியுள்ளேன்;

ஓய்விருக்கும்போது படித்தால் போதும்!” என்றாள்.

பெற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில்

படித்து விடுவானோ என நடுங்கி

முற்றாகத் தனைமறந்து நற்கண்ணை நின்றபோது;

“கொற்றவனே! கொடும்பகைவர் ஆமூர் நோக்கி

குதிரைப்படைகளுடன் வருகின்றார்” என்று

கட்கம் ஏந்திய காவலன் ஒருவன்

காற்றெனக் கடிது ஓடிவந்தான்!

“படை வகுக்கப் பாசறைக்குப் போகின்றேன்

விடை கொடுப்பீர்” என வணங்கி,

புலிப்போத்து நடைபயிலும் நற்கிள்ளி,

புயல் போலப் பாய்ந்திட்டான் புரவிமீது!

ஆமூர்ப் பாசறைக்குள் சென்றவுடன் படைகளை

அணிஅணியாய்க் கிளம்புதற்கு ஆணையிட்டான்!

அதற்கிடையே நற்கண்ணை தந்திட்ட கவிதையினை,

அவசரமாய்ப் படிப்பதற்கும் முனைந்திட்டான்.

அந்த ஓலை இதுதான்:-

★ “என்னை புற்கையுண்டும் பெருந்தோ ளன்னே

யாமே புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே,

போரெதிர்ந்து என்னை போர்க்களம் புகினே!

கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண்,

ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு

உமணர் வெரூஉம் துறையன் னன்னே!”

(புறநானூறு : பாடல் : 84

பாடியவர் : நற்கண்ணையார்

பாடப்பட்டோன் : சோழன் போரவைக்கோ பெருநற்கிள்ளி)

படித்துப் பார்த்தான் நற்கிள்ளி; அப்பாட்டை

வடித்துப் பார்த்தான் எளிய நடைக் கவிதைவரியாக!

அது; இதோ:-

“ஏற்றமிகு உறையூர் நாடிழந்த என்தலைவன்:

எளிய உணவருந்தி வாழ்கின்றானெனினும்,

எதிரிகள் அஞ்சியோடும் வலிய தோளுடையான்!

என் மனையோ அவன் வாழுமிடத்திற்கு

அருகிருந்தும் என்ன பயன்? என்

மென்தோளில் அவன் மேனிபடுவதற்கு வழியில்லை!

அந்நாளை எதிர்பார்த்து என்னுடல் மிக வாடிப்

பொன்போலும் பசலை நிறம் படர்ந்ததுவே!

ஒப்பில்லா என் தலைவன் போருக்குச் சென்றாலோ;

உப்பு வணிகர்களைப் பயந்தோட வைக்கின்றோமெனத்

தற்பெருமையாய்ப் பேரூர்ப் போர் விழாவில்

தருக்கித் திரியும் வீரர்கள் சிலர்;

தம் வலியைத் தாமே இழப்பது போல்

என் தலைவன் முன்னே வீரர்கள் வருந்திடுவர் அன்றோ?

எதிர்த்தரப்பு வீரர்களை வருத்துதல் போல்

என்னையும் என் தலைவன் வருத்துதல் நன்றோ?”

இவ்வாறு:

நற்கண்ணை எழுதித்தந்த பாடலிலே

நயம் மட்டும் காணவில்லை நற்கிள்ளி! அவள்

சொற்கண்டு சொக்கிவிட்டால் சிக்கிக்கொள்வோமென்று

பயமுறுத்தி நெஞ்சத்தை அடக்கிவைத்தான்!

“போர்வாளைத்தான் நான் காதலிக்கின்றேன்;

பூவிதழை அல்ல! அல்ல! அல்லவே அல்ல!”

என்றோங்கி உயர்த்திப் பிடித்தான் வாளை - ஒரு

குன்றேறி நின்று வீரர்களை அழைத்திட்டான் - அந்தக் காளை!

பொருள் விளக்கம் :

என்னை = என் தலைவன். புற்கை = எளிய உணவு.

புறஞ்சிறை = அருகில் உள்ள இடம்.

பொன்னன் னம்மே = பொன்னிறமாய்ப் பசலை படர்ந்ததே.

ஏமுற்றுக் கழிந்த மள்ளர் = தமது வலிவைத் தாமே புகழ்ந்து

இறுமாப்புற்று வலிவை இழந்திடும் வீரர்கள். உமணர் = உப்பு

வியாபாரம் செய்வோர்.

♦ ♦ ♦

“ஆமூர்ப் பெருமக்காள்; ஆர்த்தெழுவீர் போருக்கு!

அதிரட்டும் முக்காவல் நாட்டுக் கோட்டை முரசங்கள்!

நாப்பறை கொட்டி நம்மண் மீது காலூன்றும் பகையைப்

போர்ப்பறை கொட்டிப் புழுதி மேடாக்கிடுவோம்!

கருவாகி உருவானார் ஒரு பெண் வயிற்றில்;