காஞ்சிதான் அண்ணன்
பகுதி 1 · 1 / 1
‘காஞ்சி’
அண்ணன் நமக்கு அளித்துச் சென்ற படைக்கலம்—
அவரது உணர்ச்சிகளுக்கு ஒரு நிலக்களன்.
வாராவாரம் எழுதுவார்......
அதற்காக நாம் வாரம் முழுதும் காத்திருப்போம்!
எழுத்தென்றால் ஒவ்வொன்றும் பொன்னெழுத்து!
ஏடென்றால் ஒவ்வொன்றும் பொன்னேடு!
அழகு தமிழ் கொஞ்சும்......கலை ஆற்றொழுக்கை மிஞ்சும்......
பழகி வந்த நடை......பகுத்தறிவுப் பேரணிக்கு
பாதை அமைத்த நடை......
ஒன்றைப் படித்தால் சிரிப்பு வரும்.
மற்றொன்றைப் படித்தால் சிந்தனை எழும்!
‘தம்பி’ என்றழைத்துத் தொடங்குவார்......அந்த
கம்பீரம் வேறு எதிலுண்டு......கனிவு, வேறு எதிலிருக்கும்?
கலைகள் வளர்ந்த ‘காஞ்சி’ நகருண்டு.
கண்ணியத் தலைவனின் ‘காஞ்சி’யும் அங்கு உண்டு.
ஆனால் அண்ணன் எங்கே?
‘காஞ்சி’ தான் அண்ணன்......
அண்ணன் தான் ‘காஞ்சி’......!
பொங்கல் மலர்......பொன்போன்ற மலர்......
காஞ்சிப் பொங்கலின் சுவையினைப் பருகிட
காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்!
