உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நாடகங்கள்

சிலப்பதிகாரம் — நாடகக் காப்பியம்

காட்சி 1 · 1 / 38

சிலப்பதிகாரம்

நாடகக் காப்பியம்

கலைஞர் மு. கருணாநிதி

[சேர நாட்டுத் தலை நகரான வஞ்சி மூதூரில் இளவரசன் செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவுக்கான அறிவிப்பு!....ஆனையின் மீது முரசறைவோன் அமர்ந்திருக்கின்றான். ஆனையை அழகுபடுத்தியிருக்கும் நெடிய ஆடையில் வில் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதன் முகத்தில் தொங்கும் வேலைப்பாடமைந்த துகில் மீதும் வில் சின்னம் காணப்படுகிறது. அசைந்தாடி வரும் ஆனை வஞ்சித் தலைநகரின் வீதிகளிலே புதிய எழுச்சியைத் தோற்றுவிக்கிறது.

முரசறைவோன் செய்தியை முழக்குகிறான் பூரிப்போடு!]

வாழ்க தமிழ்! வெல்க தமிழகம்! இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க இமயம் சென்று விற்கொடி. நாட்டிய வீரர் பெருந்தகை சேரர் தலைவர் நெடுஞ் சேரலாதர் அன்புத் திருமகனும் ஆற்றல் மிகு வீரரும் செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவை இன்று சேர மண்டலமெங்கும் சிறப்புறக் கொண்டாடக் கொட்டுவோம், கொட்டுவோம் முரசம்! வாழ்க இளவரசன் செங்குட்டுவன்! வாழ்க சேரர் தரணி! வாழ்க செந்தமிழர் தாயகம்!

[முரசு முழங்குகிறது]

[செங்குட்டுவனின் தனி மாடம். அவனை அழகு படுத்திக் கொண்டிருக்கிறாள் அவன் துணைவி வேண்மாள்.]

வேண்மாள்! விழாக்கோலம் பூணச் செய்து என்னைக் கொலு மண்டபத்திற்கு அனுப்புகிறாயே, இதுபோலவே போர்க் கோலம் பூணச் செய்து களத்திற்கு வழி அனுப்ப வேண்டிய காலமும் வருமல்லவா?

பிறகென்ன; விழுப்புண் பெறுதவர்கள் வீரர்கள் அல்லவே! களத்திலே ஏற்படும் காயங்களை ஆற்றுவதற்கு என் உதட்டிலே வைத்திருக்கிறேன் மருந்து!

கண்டேன்! ஆண்டுதோறும் பிறந்த நாள் விழா நமக்கு மாத்திரம் வருகிறது...

நமக்கொன்று பிறக்கவில்லே என்கிறீர்களா?....இன்று கொலு மண்டபத்திற்கு வரும் நிமித்திகனிடம் ஆருடம் கேளுங்களேன்;எப்போது நீங்கள் தந்தையாவீர்கள் என்று!

[அப்போது மகிழ்ச்சியுடன் இளங்கோ நுழைகிறான்]

ஆருடமா? நிமித்திகனிடமா? அவன் பொய்யுரைகளே நீங்களும் நம்புகிறீர்களா அண்ணி?

[புன்னகை தவழ] இளங்கோ?

விழாவுக்கு நேரமாகிறது அண்ணா! புறப்படுங்கள்!

நான் முன்பே தயார்! உன் அண்ணி தான் மெருகு கொடுத்துக் கொண்டேயிருக்கிறாள் அலங்காரத்துக்கு!

அண்ணி! விடை கொடுத்து அனுப்புங்கள் அண்ணனுக்கு! நான் வாயிற்புறம் காத்திருக்கிறேன், அண்ணா!

இரு இரு இளங்கோ! நானும் வருகிறேன்! குறும்புக்காரா!...வேண்மாள்!...

[“வருகிறேன்” என்பதை விழியால் உணர்த்திவிட்டுத் தம்பியுடன் செங்குட்டுவன் தனி மாடத்தை விட்டு வெளியேறும் காட்சியை வேண்மாள் பார்த்தவாறு மகிழ்ச்சிப் பெருமூச்சு விடுகிறாள்.]

[பிறந்த நாள் விழா நடைபெறும் கொலுமண்டபம் மிக்க அழகுற அமைக்கப்பட்டிருக்கிறது. வேந்தன் நெடுஞ்சேரலாதனும் அரசி நற்சோணையும் அமர்ந்திருக்கிறார்கள் அரியாசனத்தில்! வில்லேந்திய வீரர்குல மங்கையரின் கூத்து நடைபெறுகிறது. செங்குட்டுவனும் இளங்கோவும் மண்டபத்தில் நுழைந்திடும்போது, கூத்தாடும் பாவையர், அவர்களை எதிர்கொண்டழைத்து அரசர் இருக்கையிடம் அழைத்துச் செல்கிறார்கள். இருவரும் பெற்றோரை வணங்கி அருகே அமர்கிறார்கள்.

தொடர்ந்த கூத்து முடிகிறது. நெடுஞ்சேரலாதன் எழுந்து வாழ்த்துரையாற்றுகிறான்]

அவையத்துப் பெருமக்களே! சேர நன்னாட்டின் செழிப்பையும் புகழையும் பெருக்கிடும் ஆற்றல் பெற்ற செங்குட்டுவனை மகனாகப் பெற்றதை எண்ணி எண்ணி என் மனம் துள்ளுகிறது இன்று! தம்பியுடையான் படைக்கஞ்சான் எனும் பழமொழிக்கேற்ப இளங்கோவை இளையோனாகப் பெற்ற என்னருஞ் செல்வனை வாழ்த்துகிறேன், இந்த நன்னாளில்! விரைவில் செங்குட்டுவன் முடிசூடி செங்கோல் ஏந்தி, தமிழ் அறம் வளர்ப்பான் என்றும்...அந்நாள் அண்மையில் அமையுமென்றும் அறிவிக்கின்றேன்...

வாழ்க செங்குட்டுவன்! செங்குட்டுவன் வாழ்க!!

[நிமித்திகன் குறும்புச் சிரிப்புடன் எழுகிறான்]

வாழ்க செங்குட்டுவன்! வாழ்க எதிர்கால மன்னர் இளங்கோ!!

என்ன? நிமித்திகரே! என்ன கூறுகிறீர்?...

நான் கூறவில்லை அரசே! ஊழ்வினை அப்படித்தான் கூறுகிறது! முடியினையும் உரிமை மூத்தமகன் செங்குட்டுவனுக்குத் தான் உண்டெனினும்... விதி புனையும் கதையோ வேறுக இருக்கிறது! இளையவன் இளங்கோ தான் சேர மண்டிலத்தை ஆளுவனும்...

[வியப்புடன்] என்ன?...

மூத்தவனிருக்க இளையவனுக்குப் பட்டமா?

[செங்குட்டுவன் முகம் மாறுகிறது. அதை இளங்கோ கவனிக்காமல் இல்லை.]

இல்லை! இல்லை!! என் அண்ணனே ஆளப் பிறந்தவர்!

இளங்கோ! நிமித்திகர் வாக்குப் பொய்க்காது!

அஞ்சுகம் வெளியீடு, சென்னை-6 — பதிப்பாண்டு அச்சிடப்படவில்லை