மணிமகுடம்
காட்சி 2 · 2 / 47
ரோஜாப் பூவா?
இல்லை! நீ விற்பனை செய்து பிழைக்கிறாயே, இந்த மக்கள் தொண்டன் பத்திரிகை! இது ஒரு பிற்போக்கு சக்தி! கண்ணை மூடிக் கொண்டு ஆட்சிப் பீடத்தை ஆதரித்து, மக்களை சந்தியில் நிறுத்தும் இந்த ஏட்டுக்கு மக்கள் தொண்டன் என்று பெயர்! ஆட்சிப் பீடம் மக்கள் சுமக்க முடியாத வரிகளைப் போட்டபோது, இது மக்கள் பக்கம் நிற்பதில்லை! அரசுக்கு - ஆண்டவன் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களிடம் உண்டு பண்ணும் சச்சரவுகளை இந்த மக்கள் தொண்டன் இதுவரை கண்டித்ததில்லை!
அரசனை தெய்வ அவதாரம் என்று கூறிவிட்டு, அரசன் பெயரால் நடத்தப்படும் அக்கிரமங்கள் அத்தனைக்கும் இந்த ஏடு துதி பாடிக் கொண்டேயிருக்கிறது! முதலில் இந்த ஏடு அழிக்கப்பட வேண்டுமா - அழிக்கக் கூடாதா?
நீங்கள் சொல்வது மிகவும் உண்மை! உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு இந்தப் பத்திரிகையை விற்கவும் எனக்கு மனம் வரவில்லை. சே! இதை விற்றுப் பிழைப்பது மானத்தை விற்றுப் பிழைப்பது போல!
(பத்திரிகை கட்டுகளை தூர எறிகிறான். இந்த நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் தூர இருந்து கவனித்த பொன்னழகன் இவர்களிடம் நெருங்கி வருகிறான்)
யார் நீங்கள்?
புதுமை நிறைந்ததும் - நாட்டுப் பற்று மிகுந்ததுமான உங்கள் உரையாடலைக் கேட்டுக் களிப்புற்ற ஒருவன் - நீங்கள் யார்?
நான் ஒரு நாடோடி!
பெயர்?
புதுமைப்பித்தன்.
பொருத்தமான பெயர் - புதுமைப்பித்தரே! மணிமகுடபுரிதானே தங்களின் சொந்த நாடு...
ஆமாம்... தாங்கள்?
பொன்னழகன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அடடே - நீங்களா? நான் பொதுக்கூட்டத்தில் பார்த்திருக்கிறேனே - அடையாளம் தெரியாமல் போய் விட்டது...?
கிடைத்தற்கரிய வாய்ப்பு! உங்களைப் போன்ற உத்தமர்களை சந்திப்பதும் உரையாடுவதும் எத்தனை உற்சாக நிகழ்ச்சி தெரியுமா?
அதைப்போலவே நானும் மகிழ்கிறேன். ஒரு ராஜாங்க விரோதியை சந்திக்கிறோம் என்ற எண்ணத்தில்!
நாடெல்லாம் அரசாங்கத்தின் விரோதிகள் - அல்லது - மக்களுக்கு நண்பர்கள்; அவ்வளவுதான்! பொன்னழகரே! ஒரு வேண்டுகோள்! நிறைவேறுமா?... தங்களோடு இணைந்து நின்று தாயகத்தின் மேன்மைக்குத் தொண்டாற்ற விரும்புகிறேன்...
நிச்சயமாக நிறைவேறும், தங்கள் ஆசை! எங்கள் சங்கத்தில் அங்கத்தினராகவே ஆகும் தகுதியுடையவர் தாங்கள் என்பது என் நம்பிக்கை!
நானும் கூட சேரலாமா...?
எங்கள் கூட இருக்கலாம். சில மாதங்களுக்குப் பிறகே, நீ அங்கத்தினராகலாம் - உன் பெயர்?
அதான் - பெரிய விசேஷம்! நான் பிறந்தவுடனேயே எங்க அப்பா அம்மா செத்து விட்டார்கள்! செத்தவர்கள் எனக்குப் பெயராவது வைத்துவிட்டுப் போகக் கூடாதா? அதனால் பெயரில்லா மனிதன் நான்!
உனக்கு ரோஜா மலர் மீது பிரியமாக்கும்?
ஆமாம்!
நீ ஆளோ கருப்பு! உனக்குப் பிரியமோ சிகப்பு ரோஜா மீது!
என்ன பண்ணுவது; கருப்பு ரோஜா கிடையாதே!
நீதான் கருப்பு ரோஜாவாக இரேன்! உனக்கு இனிமேல் பெயரே கருப்பு ரோஜா...
சரியான பெயர்...ம். போகலாமா? கருப்பு ரோஜா வா..வா!
(கருப்பு ரோஜாவும், புதுமைப் பித்தனும் ஒருவரை யொருவர் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டு பொன்னழகன் பின்னே நடக்கிறார்கள்)
(ஏழை மக்கள் வாழும் குடிசைகள். இருளைப் போக்குவதற்காக அவர்கள் வீடுகளில் மின்மினி போன்ற விளக்குகள், குடிசைகளின் வெளிப்புறங்களில் படுத்திருப்போரும் உட்கார்ந்து கொண்டு ஊர்க்கதை பேசுவோருமாக எலும்பு உடலினர் பலர். அந்தப் பக்கம் பொன்னழகன், புதுமைப்பித்தன், கருப்பு ரோஜா மூவரும் வருகிறார்கள். பொன்னழகனைக் கண்ட ஏழைகள் அனைவரும் எழுந்து ஆவலுடன் அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். “தலைவர் ஐயா வந்துவிட்டார்; தலைவர் ஐயா வந்துவிட்டார்” என்று கூறிக் கொண்டே பொன்னழகனை வணங்குகிறார்கள்)
என்ன ஏதாவது புதிய செய்திகள்...?
இல்லாம இருக்குமா? பக்கத்து தெருவிலே ஏழு பேருக்குப் பேதி கண்டு இரண்டு தீர்ந்து விட்டது... நாலு பிழைக்கிறது சந்தேகம்.
பேதியா? நேற்று வரும்போது நான் கேள்விப்படவில்லையே - அரசாங்க வைத்திய இலாகாவுக்குச் சொல்லி அனுப்பினீர்களா?
சொல்லி அனுப்பினோம். கவனிக்கிறோம் என்று சொன்னார்கள்.
