காகிதப்பூ
காட்சி 7 · 7 / 23
எல்லாம் இந்த மனுஷர் செய்ற வேலை... சாமி!... போய்ட்டு வர்றேன்... நீ இல்லேன்னா... இந்நேரம் முதுகுத் தோல் உறிஞ்சிருக்கும்...... ம்... முகத்திலேயே ஒரு அமைதி தான் இருக்கு...
(சுற்றுமுற்றும் பார்த்து விட்டு கதவைத் தொட்டு பார்த்தவாறு)
ஏப்பா; யார் காதிலாவது விழப் போவுது தசாவதாரம்!... பொழப்பிலே மண்ணைப்போட்டுக்காதே.
(திரை)
இடம், நெசவாளி வீடு.
[கயிற்றுக் கட்டிலில் நெசவாளி, முருகன் முழங்காலைக்கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்... மனைவி, மீனா வருகிறாள்...]
மீனா:— என்னாங்க இப்படி முழங்காலைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க? விட்டுக்கு வீடு பொங்கல் திருவிழா நடக்குது; நம்ப வீட்ல மாத்திரம் ஒண்ணும் கிடையாதா?...
முருகன்:— ஏழை நெசவாளி வீட்ல ஏது மீனா பொங்கல்? மாடி வீட்டு மாணிக்கம்—கோடி விட்டு குபேரன் எல்லாரும் கொண்டாடுராங்க பொங்கல்! இருக்கிறவன் வீட்டில் வெண்பொங்கல்—சர்க்கரைப் பொங்கல்—இல்லாதவன் வீட்டில் கண்ணீர்ப் பொங்கல்—சோகப் பொங்கல்.
மீனா:— குழந்தை அழுதுகிட்டே தெருவலே நிக்கிறான்... அடுத்த வீட்டு ஆனந்தன் கரும்பு திங்கிறான் வாங்கிக் கொடுங்கிறான்... நான் எங்கே போவேன் வாங்கிக் கொடுக்க...?
முரு:— நம்ப வீட்டுக் குழந்தைமாத்திரம் இல்ல மீனா; நாட்டிலே பலலட்சம் கைத்தறி நெசவாளி வீட்டு குழந்தைகள் இன்னைக்கு மட்டுமல்ல—என்னைக்கும்—கரும்புகூட அல்ல—கஞ்சி கிடையாதுன்னு கண்ணீர் விட்டுகிட்டு இருக்குதுங்க. எல்லாம் கடவுள் செயல்!
மீனா:— கடவுள் செயல்னு சொல்லிக்கிட்டு இருந்தா போதுமா? நம்ப வீட்ல பொங்கல் நடக்கணும்—வருஷத்திலே ஒரு பண்டிகை—அதுக்கு வழியைப் பாருங்க!
முரு:— நான் என்ன மீனா பண்ணுவேன்... கைத்தறி நெசவாளிகளின் கண்ணீரைத் துடைக்கிற ஆட்சி இன்னும் வரலியே... புண்யவான்கள் கதருக்குக் காட்டுற சலுகையை கதறிக்கிட்டு இருக்கிற நெசவாளிகளுக்குக் காட்டக் கூடாதா?
முரு:— தாலியை வித்துச் சாப்பிட்டாச்சு! வேட்டி சட்டைகளை வித்துச் சாப்பிட்டாச்சு! நீ கட்டியிருக்கிற புடவைதான் மிச்சம்... அதையும் கொடு...
மீனா:— அய்யயோ... புடவையையும் வித்துட்டுப் பொங்கல் கொண்டாடுறதா?...
முரு:— இல்லென்னா சும்மா கிட; தரித்திரம் புடிச்சவளே! மனுஷன் உயிரை ஏன் வாங்குறே?
மீனா:— ஏன் கோபிக்கிறீங்க?... குழந்தை அழுவுறானேன்னு மனசு கேக்கலே; சொன்னேன்... இந்தாங்க; வேற வழி இல்லைன்னா... இதொ புடவையைத் தர்ரேன்... இதை வித்து பொங்கல் பானை, அரிசி எல்லாம் வாங்கிட்டு வாங்க... இதோ தர்ரேன்...
(கதவை சாத்திவிட்டு, இடுக்கின் வழியாகக் கட்டியிருந்த ஒரேபுடவையைச் சுருட்டித் தூக்கி எறிகிறாள்...)
(முருகன், புடவையுடன், சோகந்ததும்பப் போகிறான்)
ரோடு
(நெசவாளி முருகன் தெருவில் புடவை விற்கிறான்)
முருக:— அய்யா... அய்யா... இந்தப் புடவை வேணுங்களா?
ஒருவன்:— ஏனப்பா பழைய புடவையை விக்கிற, பாவம்!
முருக:— வீட்ல பட்னி அய்யா... பொங்கல்கொண்டாடணும் ஏதாவது கொடுங்க இதை எடுத்துக்கிட்டு...
(கையை விரித்து விட்டுப் போகிறார்கள்)
(தசாவதாரம் வருதல்)
முரு:— அய்யா....
தசா:— சே... என்னடா சோம்பேறி!
முரு:— சோம்பேறி இல்லைய்யா; சொகுசா வாழ்ந்தது இல்லைய்யா... உழைச்சு உழைச்சு உலுத்துப்போனவன் நான். கஷ்டப்பட்டு துணிநெய்து காலத்தைக் கழித்தேன். உழைக்க கையில்லாம் இல்லை. உடவில் சக்தியில்லாமல் இல்லை. ஆனா உழைக்க வழி? நூல் கிடைச்சா போதும்... துணியாக்கிக் கால் காசு சம்பாதிப்பேன்... நூல் எனக்கு இப்போது எங்கே கிடைக்கிறது... அலைந்தேன்—திரிந்தேன்—கேட்டேன்—நான் உழைக்க வழியில்லை. ஏழை நெசவாளி எனக்கு வேறு கதி ஏது?
வீட்டில் தறி தூங்குகிறது—பசி தூங்கி விடுமா என்ன? நான் என்ன செய்வேன்... அய்யா, பொங்கல் திருவிழா—வருஷத்துக்கு ஒரு நாளாவது பசியில்லாம இருக்கிறோம்—இந்தப் புடவையை உங்க வீட்டு வேலைக்காரிக்கு வாங்கிக் கொடுத்து... ஏதோ இரண்டு ஒண்ணு பணம் கொடுங்க சாமி...
தசா:— ஆகா, எங்க விட்டு வேலைக்காரி மேல எவ்வளவு அன்புடா உனக்கு?... வேலைக்காரிக்குப் புடவை எடுத்துக் கொடுக்கிறதுதானே எனக்கு வேலை?... போடா போ. சோம்பேறிப் பசங்க... வீட்ல படுத்திருந்தா சர்க்கார் சோற்றைக் கொண்டாந்து வாயில போடும்னு இருக்கானுங்க... ரஷ்யாவைப் பாரு. எங்க தலைவர் போய்ட்டு வந்து சொன்னாரு. அங்கவனும்—பவனும் உழைக்கிறானாம்...
முருக:— இங்க உழைக்காமலா இருக்கிறோம்... அடப்பாவிகளா!... சென்னை மவுண்ட் ரோட்ல மாடுகளுக்கு பதிலா முதுகெலும்பு ஓடிய மூட்டை வண்டி இழுக்கிற பாட்டாளிகளைப் போயி... உங்க தலைவரைப் பார்க்க சொல்லுங்கய்யா!... அயர்வை அச்சத்தால் போக்கி—ரத்தத்தை வியர்வை குளமாக்கி வயல் வெளியில் வாடுகின்ற விவசாயிகளின் வேதனையைப் போயி, உங்க தலைவரைப் பார்க்கச் சொல்லுங்கய்ய... தார் காய்ச்சிறவன்—தணல்ல நிக்கறவன்—சாக்கடை எடுக்கிறவன்—மலம் அள்ளுறவன்—கட்டிடம் கட்டுறவன்—செருப்புத்தைக்கிறவன் இவனெல்லாம் வீட்டுக்குள்ளே படுத்துகிட்டா...
உங்களைச்சோறு கேக்கிறான்?.... தெரியாது; நீங்க சோறுபோடுகிற லட்சணம்—அரிசிக்கு கியூ அரைமைல் நீளம்....
தசா:— டே டே... நிறுத்து நிறுத்து.... அரிசி கியூ அரை மைல் நீளம்! உன் வாய் ஒருமைல் நீளம் இருக்கும் போலிருக்கே... புடவையை விக்க வந்துட்டான் புடவையை... புள்ள குட்டியை விக்காம..... டே... இனிமே மைல் கணக்கிலே பேசாதே கிலோமீட்டர் கணக்கிலே பேசு!
