உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 5
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 5 · 5 / 23

சத்ய:— ஆட்சேபனை என்ன?...உங்களைப் போல பெரியவர்கள் தயவு இருந்தா இந்த சங்கம் ஆல்போல் தழைக்கும்...என்ன கண்ணா!?...

கண்:— தலைவரே!...இது உண்மைத் தொண்டர்கள் முகாம்! உத்தமர் காந்தியின் பெயரால் இயங்கும் உழைப்பாளிகளின் பாசறை! இதனைச் சுயநலவாதிகளின் கூடாரமாக...பதவிப் பித்தர்களின் வேட்டைக் காடாக மாற்ற நான் விரும்பவில்லை

சத்ய:— கண்ணா! வந்தாரை வரவேற்பது தானே தமிழன் பண்பு!...

கண்:— உண்மை!...கடலிலே கிடக்கும் முத்துச் சிப்பி, மழைத்துளிகளை மட்டுமே வாய் பிளந்து வரவேற்கும்...கழிவு நீரையும் வரவேற்கக் காங்கிரஸ் தயாராக இருக்கலாம்; ஆனால் இந்தக் காந்தியார் சங்கம் அதற்கு இடம் தர இயலாது!...

சத்ய:— கண்ணா!...பெரியவர்களை வைத்துக் கொண்டு மரியாதையாகப் பேசு!

கண்:— மரியாதை தருவது வேறு... மண்டியிடுவது வேறு...இரண்டாவது காரியத்துக்கு நான் இணங்கமாட்டேன்...

தசா:— கண்ணா...சும்மா இல்லை...இந்த சங்கத்தின் போஷகர் அப்பா,போஷகர்... வேண்டும்போதெல்லாம் பணம்...தேவைப்படும் போதெல்லாம் வசதி...தேர்தல் நேரத்தில்...,

கண்:— உங்கள் திருவிளையாடலுக்கு இது மண்டபம் அல்ல...முடியாது!...வேறு ஏதாவது பேசுங்கள்!

திரவி:— கண்ணா!...காங்கிரஸ் மீது உனக்கு ஆசை உண்டா இல்லையா?

கண்:— உண்டு...

திரவி:— அது தேர்தலில் ஜெயிக்க வேண்டுமா; வேண்டாமா?...

கண்:— அதற்காக.......?

திரவி:— என்னைப் போன்றவர்கள் ஆதரித்தால்தானே முடியும்...என்பணமும்... உன் உழைப்பும்...பேச்சும்...மூச்சும்... எழுத்தும்...காங்கிரசை வெற்றி பெறச் செய்யும்...நான் ஜெயித்தால் காங்கிரஸ் ஜெயித்ததாக அர்த்தம்...இல்லையா?...

கண்:— அய்யோ...காதுகளால் கேட்கமுடியவில்லை...கொஞ்சம் இருங்கள் மகாத்மா படத்தை திருப்பி வைத்து விட்டு வருகிறேன்...பிறகு பேசுங்கள்.

சத்ய:— (தடுத்து) கண்ணா! இந்த சங்கத்து தலைவன் என்ற முறையில்...நான் அவர்களைப் போஷகராக ஏற்றுக்கொள்ள முடிவு செய்து விட்டேன்.

கண்:— ஆ! பரவாயில்லை—முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் என்று நான் சொல்லமாட்டேன்...எனக்காக தாங்கள் முடிவை மாற்றினாலும்...செல்வந்தர்களுக்கு முன்னால் சாய்ந்துவிட்ட உங்கள் உள்ளத்தை என்னால் மாற்றமுடியாது...ஆகவே நான் என் இடத்தை மாற்றிக்கொள்கிறேன். வருகிறேன்...(புறப்படுகிறான்)

மூவரும்:— திரவி:— கண்ணா! சத்ய:— கண்ணணு! தசாவ:— கண்ணா!

(ஆவேசத்துடன்)

கண்:— போஷகராகுங்கள்! பொருளைக் குவியுங்கள்!! பொதுத் தேர்தல் நடத்துங்கள்!!! போலிக் காங்கிரஸ்காரர்களே! புதிய வரவுகளே! உங்கள் முன்னால்நான் சபதம் எடுத்துக்கொள்கிறேன்....உங்களையெல்லாம் ஓட்டிவிட்டு...உண்மை ஊழியர்களின் பாடி வீடாகக் காங்கிரசைமாற்றும் வரையில் எனக்கு ஓய்வில்லை... உறக்கமில்லை...வருகிறேன்...

(கண்ணன் போகிறான்)

திரவி:— ஓய்வில்லை... உறக்கமில்லை... ஏன் உணவுமில்லைன்னு சொல்லாம போயிட்டான்....

தசாவ:— நம்ம ஆட்சியில தான் அது சொல்லாமலே தெரியுமே...

(திரை)

உத்தமர் காந்தியின் உண்மை ஊழியர்சங்கத்தின் வாயிற்படி

தசாவ:— அப்பாடி! எப்படியோ உண்மை ஊழியர் சங்கத்தைக் கைப்பற்றியாச்சு... மலையைக் கெல்லி எலியைப் புடிச்சாச்சு.

திரவி:— எலியைப் புடிச்சு என்னய்யா பண்றது...

தசா:— எலின்னா என்ன கேவலங்கிளா? 67-லே தேர்தலிலே ஜெயிச்சா பிறகு பாருங்க... இந்தியாவின் தேசிய உணவே எலிதான்!

திரவிய:— தசாவதாரம்! கண்ணன் இல்லாத உண்மை ஊழியர் சங்கம் நம்ம கையிலே இருந்தா என்ன; இல்லா விட்டா என்ன; அவனுடைய வீரமான சொற்பொழிவு—விளக்கமான எழுத்து—ஓடியாடி வேலை செய்யும் திறமை—இதெல்லாம் நமக்குப் பயன் படாமல் போறது மட்டுமல்ல; காங்கிரஸ் மேடையிலேயே நின்னுக்கிட்டு... காங்கிரஸ் அபேட்சகரா நிற்கப் போற என்னைத் தாக்கிப் பேசினால் என்னாலே தாக்குப்பிடிக்க முடியாதப்பா... இத பார்... என்ன செலவானாலும் சரி; இந்தா பணம் ஐநூறு ரூபா இருக்கு!

அட்வான்ஸ் கொடு!... ஆயிரமாயிரமா தர்ரேன்னு சொல்லு... அவனை நம்ம ஆளா ஆக்கிடு.

தசா:— ஹி ஹி ஹி... ஐநூறைப் பார்த்தா ஆள் வாயைப் பிளந்து விடுவான். எஜமான்!... நான் அவனை வழிக்குக் கொண்டு வர்ரேன்... நீங்க கவலையை விடுங்க!..

திரவி:— இப்பவே புறப்படு! அவன் எங்கேயிருந்தாலும் கண்டு பிடி! காரியத்தை முடி... கண்ணன் என் கையில்!... அந்த வெற்றிச் செய்தியைக் கொண்டு வா!....