உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
காகிதப்பூ/காட்சி 12
நாடகங்கள்

காகிதப்பூ

காட்சி 12 · 12 / 23

தள:— எங்கள் நாட்டு உல்லாச மண்டபத்துக்கு உள்ளே இப்படிக் குழந்தைகளின் தலைகள் கொட்டப் பட்டிருக்கும். ஆனால் உங்கள் நாட்டில் உல்லாச மண்டபத்துக்கு வெளியே குழந்தைகளின் தலைகளைப் பொறுக்கலாம். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே!

திர:— அபத்தம்! அபாண்டம்! யார் சொன்னது அப்படி? பொய்! பொய்! எல்லாம் பொய்!

தள:— இதுவரை குடியேறிய எல்லோரும் ஒத்துக் கொண்ட உண்மையை நீர் மறுக்கிறீர். இதோ பொறுக்கிக் குவிக்கப்பட்ட அத்தனை தலைகளும் உங்கள் நாட்டிலே இருந்து கொண்டு வரப்பட்டவைதான். இவைகளில் பல, கல்யாணமாகாத பெண்களின் கருவிலே உதித்தவை. பல விதவைகளின் வயிற்றிலே விளைந்தவை; ஆயிரக்கணக்கானவை ஆற்றிலும், குளத்திலும் மிதந்தவை. ஏராளமான தலைகள் வறுமை வயலில் பொறுக்கப்பட்டவை. சில குழந்தைகளின் நெற்றியில் அவமானச் சின்னம் குத்தப்பட்டிருக்கும்.

சிலவற்றின் கழுத்தில் தாயின் கட்டைவிரல் ரேகைகள் அழுத்தமாகப் பதிந்து இருக்கும். அந்த ரேகைகளை ஆராய்ச்சி செய்ததில் ஈவு இரக்கமுள்ள பெண்களின் ரேகைதான் அவையென்றும் எங்கள் ஆஸ்தான ரேகை நிபுணர்கள் முடிவுகூறியிருக்கிறார்கள். சில குழந்தைகளின் கருவிழிகள் வட்ட வடிவமான அசோகச் சக்கரங்கள் போலவே அமைந்திருப்பதையும் கண்டோம். அது பற்றிய ஆராய்ச்சியை எமது விஞ்ஞான மேதை ஒருவரிடம் ஒப்படைத்திருக்கிறோம். இன்னும் முடிவு வெளிவர வில்லை.

இப்பொழுது என்ன சொல்லுகிறீர்?

திர:— சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?

(என்று தலைகுனிகிறார். அப்போது தூதுவர் ஒரு கிண்ணம் கொண்டு வருதல்.)

தள:— இம்! குருதி பானம் அருந்தும்!

திர:— ஐயோ! என்ன இது?

தள:— பொங்கி வழியும் இரத்தம்;

திர:— இரத்த பானமா? வேண்டாம்! வேண்டாம்!

தள:— எமலோகத்தில் நடைபெறும் உபச்சாரத்தைச் சரிவர ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?

திர:— என்ன தண்டனை?

தள:— பூலோகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களாகப் பிறக்க வேண்டும்!

திர:— ஐய்யோ! வேண்டாம்! வேண்டாம்! உபச்சாரத்தை மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். கொடுங்கள் கிண்ணங்கள்!

(திரவியம்பிள்ளை மது அருந்த மயக்கம் ஏற்படுகிறது)

தள:— ஆகாஷ்வாணி!

(அவலட்சணமான ஒரு பெண் வருகிறாள்)

ஆகா:— உஸுர்!

தள:— (திரவியம்பிள்ளையிடம்) இவள்தான் எமலோகத்தின் இசைக் குயில்! ஆகாஷ்வாணி! இவரைக் கவனித்துக் கொள்!

ஆகா:— அச்சா!

(திரவியம்பிள்ளை ஆகாஷ்வாணியைய் பார்க்கிறார். பிள்ளைக்கும் வாணிக்கும் காதல் பிறக்கிறது. இருவரும் ஆடிப்பாடுகிறார்கள்)

திர:— ஆகா! அழகுப் பதுமையே! அணங்கே! தேடக் கிடைக்காத திரவியமே! தேன் மொழியே! தித்திக்கும் கனியே! தெள்ளமுதே!

(ஆகாஷ்வாணியைக் கட்டிப் பிடித்தல்)

தள:— ஐயோ!

(அருவெறுப்புடன் போகிறான்.)

(அப்போது எமன் வருகிறார்.)

எம:— என்ன திரவியம்பிள்ளை! உபசரிப்புகளெல்லாம் சரிவர நடந்ததல்லவா!

திர:— ஆகா! நன்றாக நடந்தது. உபசரிப்பின் உச்சக்கட்டமே ஆகாஷ்வாணியின் பிரவேசம்தான்! ஆகா! வர்ணிக்கவே முடியாது!

எம:— உம்மோடு நீண்ட நேரம் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தும் நிறைவேற்ற இயலாது போய்விட்டது. குறுகிய காலத்திலேயே நமது பேட்டி முடியும்.

எம:— நீ (தளபதியைப் பார்த்து) உடனே சென்று இன்று நமதுசபை கூடுவதற்கு வசதியில்லை; ஏனெனில் வரியைப் பற்றி விளக்கம் தெரியாமல் சபை கூடிப் பயனில்லை. ஆகவே நாளைக்காலையில் சபை கூடுமென்று அறிவித்துவிடு!

(தளபதி போகிறான்)

எம:— நமது பேட்டியை ஆரம்பிக்கலாமா?