உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 81
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 81 · 81 / 104

பல்லி சொல்லுக்குப் பலன்!

(ஏற்ற இசையில் பாடுக)

(எடுப்பு)

பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு — இதைப் பகுத்தறிவாளர் மறுப்பார் எனினும் பல்லியின் சொல்லுக்கு நிச்சயம் பலனுண்டு!

(தொடுப்பு) (1)

எல்லையற்ற கவலை இனியென் தலைவிக்கு எதற்காக? தொல்லையை நீக்கிடத் துணைவர் வருவார் விரைவாக! - இந்தத் தோழியை நினைத்து வாழ்த்திடுவாய் அதற்காக! ஆழிபோல் இன்பம் காத்திருக்குதுனக்காக!

(பல்லியின் சொல்லுக்கு)

(தொடுப்பு) (2)

பாடுபட்டுப் பொருள் தேடப் பயணம் தொடர்ந்து காடு; பட்டுப்போன கொடும் பாலையில் நடந்து கூடுவிட்டுப்போன ஆவிபோல — உன்னை வாடவிட்டுப் போனவர்; வந்திடுவார் இன்னே!

(பல்லியின் சொல்லுக்கு)

(தொடுப்பு) (3)

மூடநம்பிக்கையில் உனை மூழ்கடிக்க — நான் நாடகம் ஆடுவதாய் நினைக்காதே! உன் எழில் நிலா முகத்தை; இமையுடைத்துப் பொழிகின்ற கண்ணீரால் நனைக்காதே!

(பல்லியின் சொல்லுக்கு)

(தொடுப்பு) (4)

பாலையில் கள்ளிக்காடுகள் பல உண்டாம் — ஆங்கு பல்லிகள் பல துள்ளி ஓடுதல் உண்டாம் — அதில் ஆணொன்று பெண்ணைக் கூடிடக் கொண்டதாம் ஆசை!

[Full-page illustration; no printed body text.]

அதற்காகவே அது எழுப்பியதாம் காதல் ஓசை!

(பல்லியின் சொல்லுக்கு)

(தொகையறா)

விரல் நகத்தால் அம்பின் கூர்மையை நெருடி வேடனொருவன் அதைச் சரிபார்க்கும் வேளை எழுந்திடும் ‘டிக் டிக்’ ஓசையைப் போலே — காதில் விழுந்திடும் அந்தப் பல்லியின் ஓசை; அதைக் கேட்டதும் உன் தலைவர்க்குப் பிறந்திடும் ஆசை; இந்த வீணையை மீட்டிட வந்தேனென்று முறுக்குவார் இளமீசை!

(பல்லியின் சொல்லுக்கு)

*

“உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம் பொன்புனை பகழி செப்பம் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்காற் பல்லி தன்துணை பயிரும் அங்காற் கள்ளியம் காடு இறந் தோரே”

*

(குறுந்தொகை பாடல் : 16 பாடியவர் : பாலைபாடிய பெருங்கடுங்கோ)

பொருள் விளக்கம் :

உள்ளார் கொல்லோ = நினைக்காதிருப்பாரா? பொன்புனை = இரும்பாலான. பகழி = அம்பு. செப்பம் கொண்மார் = சரிசெய்யும் பொருட்டு. உகிர்நுதி = நகத்து நுனி. பயிர் = ஒலிக்குறிப்பு. காடு இறந்தோர் = காட்டைக் கடந்தோர்.

*

பாசியும் பசலையும்!