சங்கத் தமிழ்
வாசிப்புப் பகுதி 61 · 61 / 104
*
(சிறுபாணாற்றுப்படை : 55 முதல் 61 முடிய பாடியவர் : நல்லூர் நத்தத்தனார்)
பொருள் விளக்கம்:
நோன்பகட்டு உமணர் = வலிமையான எருதுகளுடன் வருகின்ற உப்பு வணிகர். ஒழுகை = வண்டி. மகாஅர் அன்ன = பிள்ளைகளைப் போன்ற. நகாஅர் = பல். நளிநீர் முத்தம் = செறிந்த நீரோட்டமுள்ள முத்து. எருந்து = கிளிஞ்சல். நல்கூர் நுசுப்பு = மெலிந்த இடை. உளர் இயல் ஐம்பால் = அசையும் தன்மையுடைய ஐந்துவகைப் பின்னல் கூந்தல். உமட்டியர் = உப்பு வணிகப் பெண்டிர்.
*
'இனம்' காட்டும் இயற்கைக் காட்சி!
இனியதோர் காதற்கதையினையே கூறவந்த அம்மூவனார் இனம், இனத்தைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிடில் இன்னல்கள் ஆயிரம் எப்படியெல்லாம் விளையுமென்று கன்னற் சுவையூறும் நற்றிணையில் கடற்கரைக் காட்சியொன்றைக் காட்டுகின்றார்!
பொங்கியெழுந்து மோதுகின்ற அலைப்படைகள் பொருதிப்பொருதி சங்கொதுங்கும் கடற்கரையின் மணற்பரப்பில்; நாவல் மரத்துக் கனியொன்று உதிர்ந்து உருளக்கண்டு ஆவலுடன் அதுவும் தன் இனந்தான் எனத்தவறாகக் கருதியதால்; மண்டியதாம் அந்தக் கனியைச் சுற்றிச் சுற்றி வண்டினங்கள்! என்னே மடமை? அப்போது;
நண்டொன்று நல்லபழம் கிடைத்ததென்று விரைந்தோடி வண்டொன்றைக் காலில் பற்றிக்கொண்டதுவாம்! இனமறியாக் குற்றத்தால் இடுக்கண்ணில் சிக்கிக்கொண்டு மனம்பதறி அவ்வண்டு மாண்டுபோகும் நிலையைக்கண்டு; மொய்த்திருந்த வண்டுக் கூட்டம் மேலெழுந்து பறந்தவாறு முகம்வாடி அகம் நொந்து ஓசையிட்டுப் பூசல் புரிந்ததுவாம்!
வண்டென்று தெரியாமல், நாவல் பழமொன்று கிடைத்ததென் நண்டும் மிக மகிழ்ந்து அதனைக் கவ்விக்கொண்டே விரைந்த நேரம்; இனம் கண்டு கொள்ளாமல் நாவல் கனியை நெருங்கி இக்கட்டில் மாட்டியதால் இன்னுயிரை இழக்கின்றேன் - என்றே பாவம்; பளபளக்கும் அந்த வண்டு பதற்றாங்கே! யாரும் துணைக்கில்லா அந்தவேளை; மின்னலென
[Full-page illustration; no printed literary text.]
உதவியொன்று நாரை உருவில் வந்ததம்மா - வண்டின் உயிர்காக்கும் தோழன் போல் வந்த பறவையின் வாய்க்கு; இரையாகித் தொலையவேண்டுமே என்றஞ்சி அந்த நண்டு விரைவாக ஓடுதற்கு வண்டுதனை காலை விடுத்தெறிந்துவிட்டு, வளைதேடி ஒரு நொடியில் கண்டுபிடித்துத் துள்ளி ஒளிந்தேகி மறைந்ததனால் நண்டும் உயிர் பிழைத்துக் கொண்டதுவாம்!
நல்லவேளை; நாரைமட்டும் தக்க சமயத்தில் வராதிருந்தால் நாவல் பழத்தைத் தன்னினம் எனத் தடுமாறி ஏமாந்த வண்டின் நாள் முடிந்து போயிருக்கும்! “நண்டின் பிடியினின்று விடுபட்டு நமது இனத்தோழன் மீண்டான்!” என்று ஒலிகூட்டி; உற்சாக விழா நடத்தியதாம் வண்டுக்கூட்டம்!
“இனம், இனத்தைத்தான் தெளிந்து தெரிதல் வேண்டும்; அல்லால், மனம் நோகும் வகையில் தொல்லைவந்து துளைத்துவிடும்” என; காதலரின் பிரிவுத்துயர் உருக்கமுடன் உரைக்கும்போதும் கவிஞர்பிரான் அம்மூவனார் கவின்மிகு இயற்கைக் காட்சியுடன் கலந்தளிக்கும் அறிவுரையை கற்பனையால் பெருக்கிப் பார்த்து களிப்பொருபுறம் கொண்டேனாயினும்; கண்கள் மட்டும் ஏனோ கலங்கினவே!
*
“பொங்கு திரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப் பல்கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரைதேர் நாரை எய்தி விடுக்கும்.”
*
(நற்றிணை : பாடல் : 35. பாடியவர் : அம்மூவனார்)
பொருள் விளக்கம் :
கிளைசெத்து = தமது இனமெனக் கருதி. அலவன் = நண்டு. இமிழ் = ஒலி. அசாந்து = தளர்ந்து. பூசல் = போர். இரைதேர் = இரை தேடுகின்ற.
*
வெறியாடும்
வேலன்
எதற்காக?
“பித்துப் பிடித்தவள் போல் இருக்கின்றாள் - நான் பெற்றெடுத்த பொற்கொடியாள் - ஊன்றிவிட்ட வித்துப் போல் விழியிரண்டும் அசைவற்றுப் பார்க்கின்றாள்; வேலனை அழைத்து வந்து வெறி தணிக்க விரைவாய் தோழி!”
தலைவியினை ஈன்ற முதுபெருந்தாயொருத்தி - தோழியின் தாடையைப் பிடித்து தயைபுரிக என்றுரைத்தாள்! தமிழகத்தில் அந்நாளிலேயே வெறியென்னும் மருள் ஒன்று; தாய்க்குலத்தின் நம்பிக்கையாயிருந்தமைக்கு இது சான்று! வேலர் என்போர் அந்நாளில் வெறியாடிக் குறிசொல்வோர்; விரட்டிடுவார் மருள் நோயை என்று தாய்மார்கள் செல்வர்! காலமிக வேகமாக ஒளிபெற்றும் கருத்தை மட்டும்
அவர்
இருட்டாக்கும் கண்மூடி வழக்கமின்னும் நம் தாயகத்தில் மறையவில்லை.
அன்னையின் வேண்டுகோளை அன்னநடைத் தலைவிக்குரைத்து; “அழைத்து வரட்டுமா அந்த வேலனை” எனக்கேட்க; அவளோ “அய்யகோ! வேண்டாமடி; அவன் வந்தால் ஒருவேளை - என் அக நோய் இன்னதென அன்னைக்குத் தெரிய வைத்திடுவான்”; எனத்தடுத்தாள்!
