உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 3
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 3 · 3 / 104

எளிய நடையில் எழுதிட முனைந்து என்னாலியன்ற பணியினை முடித்தேன்.

கடல் குளித்து முத்தெடுக்கும் போதும், கனிகள் வெட்டிப் பொன் குவிக்கும்போதும்,

களிப்பு துள்ளும் உள்ளத்தைப் போலே - இந்தக் கலைஞனது உள்ளமுமே துள்ளுவது உண்மை!

கருவூலப்பொருள்கூட அள்ள அள்ளக் குறையும்; - சங்கக் கவிப்பெரியோர்கள் கற்பனையோ அகழ்கின்ற ஊற்றாக நிறையும்!

பழம்புலவர்பெருமக்கள்; தமிழர் வீரம், காதல், பண்பாடு போற்றுகின்ற வாழ்க்கை நெறிமுறைகள்;

பாட்டாலே தொகுத்தளித்து; நம்மைப் பிற நாட்டாரும் போற்றுகின்ற செயல் புரிந்தார்!

ஏடுகளாய் எழுத்துக்களாய் வாழ்கின்ற - அந்தப் பீடுநிறைப் பெரியோர்க்கு வணக்கம் சொல்லி;

காடுகளில் மலைச்சோலைகளில் கபிலப்புலவன் கண்டறிந்து குறிஞ்சிப்பாட்டில் கோடிட்டுக்காட்டியுள்ள;

மலரையெல்லாம் பறித்தெடுத்து என் மனம் பறித்த மாத்தமிழ்ச் சுவடிகள் மேல் மாரியெனப் பொழிந்திடுவேன்!

இதோ; கபிலர் காட்டும் மலர்கள் காண்க:

*

\* “... ... ... ... ... ... வள் இதழ் ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை

காட்சிப் பதிவு

கண்ணாடி அணிந்த, அமர்ந்திருக்கும் ஒருவரை மலர்கள் மற்றும் ஓலைச்சுவடிக் கட்டுகளுடன் காட்டும் முழுப் பக்க வண்ண ஓவியம். இந்தப் பக்கத்தில் அச்சிடப்பட்ட அடையாளக் குறிப்புரை இல்லை; ஆகவே ஓவிய நபரின் அடையாளம் ஊகிக்கப்படவில்லை.

உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ், கூவிளம், எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான்பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க்காயா, விரிமலர் ஆவிரை, வேரல், சூரல், குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமா ரோடம், வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல், தாழை, தளவம், முள்தாட் தாமரை, ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்கொன்றை, அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி, மா இருங்குருந்தும், வேங்கையும், பிறவும்”

*

(பத்துப்பாட்டு (குறிஞ்சிப்பாட்டு) (61 முதல் 95 முடிய) (பாடியவர் : கபிலர்)

பத்துப்பாட்டாம் குறிஞ்சிப் பாட்டில் - மலர்களைப் பட்டியல் போடும் பாங்கே; பாவையர்

சரம் தொடுத்ததுபோல் அமைந்திட்டதம்மா; இந்தச் சங்கத்தமிழின் பெருமையைச் சாற்றுதல் எளிதோ?

*

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

மூன்று கூறாக ஆவதற்கு முன்பிருந்த முகவைப் பெரு மாவட்டத்தில் மூதறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பிறந்தார் எனக் கேள்வியுற்றுக் களிப்புடனே மகிபாலன்பட்டிக்குச் சென்றிருந்தபோது பூங்குன்றமெனப் பழையநாள் இலக்கியமாம் புறநானூற்றுக் குறிப்பில் இருந்த ஊரின் பெயர்தான் மகிபாலன்பட்டியாக மாறிற்றென்று, பெரும்புலவர் மாணிக்கனார் உரைக்கக் கேட்டு மகிழ்ச்சியிலே திளைத்துப் போனேன்.

கணியன் பூங்குன்றனார் எனும் அவ்வூர்க் கவிஞன் கற்குகையொன்றில் செதுக்கியுள்ள கவிதையினைக் காண வாரீர் என அழைத்திடவே; சென்று கண்டேன்! - அந்தப் பழம்புலவன் கரங்கொண்டு செதுக்கியதோ - அன்றி பார்புகழும் அப்பாட்டைப் பின்வந்தோர் செதுக்கியதோ? யார் செயலாய் இருந்திடினும் அப்பாட்டில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் அறைகூவல்தனை அற்றைநாளில் ஒரு தமிழன் நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும் விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் -

புதிய

வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான்!

பூத்தமிழில் வண்டாகப் புணர்ந்து கலந்து—இந்தப் பூமிக்கே பொதுக்கவிதைக் கனியொன்றைத் தந்த கவிஞன் பூங்குன்றந்தனில் பிறந்த புலவன் கணியன்தான் என்கின்றபோது புல்லரித்துப் பூரித்துப் போகுதம்மா; நம் எண்சாண் உடம்பு! அந்நாளில் புலவரெல்லாம் அகிலத்தை ஆளுகின்ற

அரசர்களின் அவைக்களத்தில் அரிய தமிழ்க் கவிகள்பாடி ஆனையென்றும் சேனையென்றும் ஆயிரம் பொற்கிழிகள் என்றும் மானியங்கள் மற்றும் பல பரிசில் என்றும் மலைமலையாய்ப்

பெற்றிடுவர்!

இந்நாளில் சில புலவர்போல் வாழ்வார்க்கு வாழ்த்துரைத்து இன்னலுற்று அவர் தாழ்வாராயின் அக்கணமே சிறகடித்து அற்றகுளத்துப் பறவைபோல அடுத்தகுளம் பார்க்கின்ற இயல்புடையார் அப்போதும் சிலர் இருந்திடத்தான் செய்தார்கள்! கணியூர்ப் பூங்குன்றனோ; அவர்கண்டு கவலைமிகக் கொண்டதனால் அணிமணிகள் தமிழில் செய்து அரசர்க்கும் வள்ளல்கட்கும் பூட்டி மகிழ்வதிலே ஆர்வமொரு கடுகளவும் காட்டாமல்