உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
சங்கத் தமிழ்/வாசிப்புப் பகுதி 25
இலக்கிய உரை

சங்கத் தமிழ்

வாசிப்புப் பகுதி 25 · 25 / 104

கண்ணகனார் எனும் புலவர், கண்ணீரை மலராக்கி கவிதையாம் கவின்மாலையொன்று தொடுத்து அந்த நடுகற்களுக்கே சூட்டுகின்றார்!

“பொன்னும் முத்தும் பவளமும் மணியும் ஒன்றுக்கொன்று தொலைவில் விளையினும் - அவற்றை மின்னும் அணியாய்க் கோத்திடும்போது

பின்னிப் பிணைந்திடும் நெருக்கம் போலவே மன்னன் சோழன் உறையூர் தனிலும் மாகவியாம் பிசிராந்தை பாண்டிய மண்ணிலும்

பசும் பொன்னைப் போல் முத்தைப் போல் பல கல் தொலைவினிலே தனித்தனி பிறந்தார் எனினும், அணியாக ஆனபின்பு அருகருகே இருக்கின்ற மணிகள் போல - என்றும் அணையாத நட்புக்கோர் விளக்கொளியாய் நடு கல்லாய் அமைந்துவிட்டார்!

சான்றோர் என்றுமே சான்றோர் அருகிருப்பர்... சான்றாண்மை இல்லாதார், வரலாற்றில் சருகாகி உதிர்ந்து போவார்!”

கண்ணகனார் எழுதிவைத்த கவிதை ஏடு - சோழ மன்னனுக்கும் பிசிராந்தைக் கவிஞருக்கு மட்டுமல்ல; எண்ணமெலாம் தூய்மையாக நட்புக்கொள்வோர் அனைவருக்கும் - தேன் கிண்ணமாகும்! தெவிட்டாத தெள்ளமுதமாகுமன்றோ?

*

\* “தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே; செல்வக்காலை நிற்பினும், அல்லற்காலை நில்லலன் மன்னே.”

(புறநானூறு : பாடல் : 215 பாடியவர் : கோப்பெருஞ்சோழன்)

\* “பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய மாமலை பயந்த காமரு மணியும், இடைபடச் சேய ஆயினும், தொடைபுணர்ந்து, அருவிலை நன்கலம் அமைக்கும்காலை, ஒருவழித் தோன்றியாங்கு - என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப; சாலார் சாலார் பாலர் ஆகுபவே.”

*

(புறநானூறு : பாடல் : 218 பாடியவர் : கண்ணகனார்)

பொருள் விளக்கம் :

தென்னம்பொருப்பன் = தென்திசைப் பொதிகைமலையையுடைய பாண்டியநாட்டு மன்னன். என் உயிர்ஓம் புநன் = என் உயிருக்குத் துணை நிற்கும் நண்பன். செல்வக்காலை = வாழும் காலத்து. அல்லற்காலை = இன்னல் வந்த காலத்து. நில்லலன் = நிற்காமல் வருவான்.

இடைபடச் சேயவாயினும் = ஒன்றுக்கொன்று இடையே தொலைவிலிருப்பினும். தொடைபுணர்ந்து = (அணியாக) கோக்கப்பட்டு. அருவிலை நன்கலம் = அரியவிலையுடைய அணிகலன். பாலர்ஆப = பக்கத்தவர் ஆவர். சாலார் = சான்றோரல்லாதார்.

*

உலைக் களத்து இரும்பும் ஒரு துளிநீரும்!

சின்ன மருது, பெரிய மருது என சிவகெங்கைச் சீமை ஆண்டு; சிவந்தமண்ணின் வரலாற்றில் செங்குருதி மலராய்ப் பூத்த சிங்கநெஞ்ச மாவீரர் இருவருக்கும் சிலைகள் இருக்கின்ற, காளையார்கோயிலுக்குப் பழங்காலத் தமிழகத்தில்; ‘கானப்பேர்’ என்று பெயர் உண்டு; இன்றும் அது, மானப்போர் தொடுக்கின்ற மறவர்பூமி - அங்கு; வேங்கை மார்பன் எனும் குறுநில வேல்வேந்தன் ஓங்குபுகழ் கொண்ட அரண் ஒன்று அமைத்து - அதனை வெற்றி கொள்ள யாரால் முடியுமென அறைகூவல் விடுத்திருந்தான்.

அணுவைத் துளைத்து அதற்குள் நுழையவும் கூடும் - ஆனால் அந்த அரணுக்குள் நுழைதல் இயலாதென்று அடலேறு வீரரெல்லாம் திகைத்து நின்றார்!

அப்போது பாண்டி நாட்டை ஆண்ட மன்னன் அரிமாதான் போர்க்களத்தில்! உக்கிரப்பெருவழுதி; ஆனைகளைத் தூக்கிப் பந்தாடும் பலமுடையான்! அவன் வாளுக்குத் தப்பிப் பகைவர் உயிர் வாழ்தல் அரிதரிது! ஆற்றல் பெருக்குடனே அறிவார்ந்த கலையுள்ளம் கொண்டதாலே; அகநானூறு பாடல்களைத் தொகுத்தளித்துப் பெருமை பெற்றான். அணையாச் சுடர் விளக்காம் திருக்குறளின் நலம்பாடும் அரங்கேற்றுவிழா அவன் முன்னிலையில்தான் நடந்ததென்பார்! ஒளவை ஒருநாள்; அவனும், சோழன் பெருநற்கிள்ளியும் அவர்களுடன் சேரமான் மாரிவெண்கோவும் வீற்றிருந்த காட்சி கண்டு,

அருந்தமிழ்க் கவியாரம் தொடுத்துச் சூட்டி, அங்கு மூவேந்தர் ஒற்றுமைக்கு வாழ்த்துரைத்தாள்.

கயற்கொடி கொண்ட மன்னன் உக்கிரப்பெருவழுதி கயல்விழி மங்கையொருத்திக்கும் காதலனாம் - அந்தக் காதற்கிழத்தியுடன் ஒருநாள் கட்டிலறைக் காவியம் படித்தபோது;

அவள் கடைவிழியோரம் வினாக்குறியைத் தொங்கவிட்டு, “கண்ணாளா! எனக்கோர் ஐயம் போக்கிடுக” என்றாள்.

“என்ன கண்ணே; உனக்கு ஐயம்? அதோ நீந்துகின்ற அன்னத்தின் தூவிபோல் மென்மை உனக்கு எப்படி வந்ததென்று என்னைக் கேட்கின்றாயா? அல்லது வண்டுகள் கொண்டுவந்து கொட்டாமலே உன் வாயிதழில் மொண்டு குடிக்கின்றேனே தேன்; அது வந்தவிதம் தெரிந்துகொள்ள விரும்புகின்றாயா?

செந்தாமரையைப் பார்த்துச் செய்யப்பட்டது உன் முகமா? செல்வமே! உன் முகம் பார்த்துத்தான் செந்தாமரை அல்லது உருவானதோ என்ற ஐயமா?

செண்டு இரண்டும் தாங்காமல் - குளத்தில் கெண்டைக்குப் போட்ட தூண்டிலில் நெளிகின்ற புழுப்போல நெளியும் இடை நிலைக்குமா? அல்லது ஒளியுமிழும் உன் தந்தத்தொடைகள் அதனைத் தூக்கி நிறுத்துமா?

உன் மனத்தில் விளைந்த ஐயமெல்லாம் இதுதானே?” எனக்கேட்ட வழுதியின்முன்; வளைந்த கதிர்போல தலை நாணிக்கொண்டு அவள்;

“என்மீது கவிதையெழுதிப் பரிசுபெறக் கேள்வி எழுப்பவில்லை