உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 8 · 8 / 300

“மன்னா, மலையைத் தலையில் தூக்கிக் கொண்டு நடப்பதற்குத்தான் சொன்னேன். அதை மறந்து விட்டீர்கள். நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இப்போதே இந்த மலையை என் தலையில் தூக்கி வையுங்கள். அதைத் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் நடக்கிறேனா இல்லையா என்பதைப் பிறகு பாருங்கள்!”

என்று, மிக அடக்கமாக வாலிபன் விளக்கம் கூறினான்.

“இவனைக் கைது செய்யுங்கள்” என்று மன்னர் உறுமினார், சிங்கத்தைப் போல!

“என்னை இனிமேல் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்று! நான் என் நண்பர்களிடமும், மனைவியிடமும் செய்த சபதத்தை நிறைவேற்றி விட்டேன். அதாவது அரண்மனையில் முக்கியமான விருந்தினனாக ஒரு மாதமாவது இருந்துவிட்டு வருகிறேன் என்று சபதம் செய்தேன். அது நிறைவேறிவிட்டது.”

புன்முறுவல் முகத்தில் பூத்திட, அந்த வாலிபன் அச்சமின்றிப் பதில் அளித்தான்.

“அடே! அப்படியொரு ஆசையிருந்தால், உன்னால் செய்ய முடிந்ததைச் செய்து அதற்குப் பரிசாக அரண்மனையில் தின்று தொலைத்திருக்கலாமே?” என்று மன்னர் கடிந்து கொண்டார்.

“செய்யக்கூடியதைச் சொன்னால் அப்படிச் சொல்கிறவனை யார் மதிக்கிறார்கள் அரசே! அற்புதங்களைச் செய்து முடிப்பேன் என்று கூறினால்தான் ஆராதனைகள்! அன்பான வரவேற்புகள் அத்தனையும் கிடைக்கின்றன!”

வாலிபனின் பதிலைக்கேட்ட மன்னர் வெகுண்டெழுந்து,

“ஓகோ அதற்காகத்தான் எங்களை ஏமாற்றினாயா?”

என்று கர்ச்சித்தார்.

“அரசர்க்கரசே! நான் இந்த நாட்டுக்குள் நுழையும்போதே, இங்கு திருக்குறள் புழக்கத்தில் உள்ளதா? என்று விசாரித்தேன்! அரசரே அறியார் திருக்குறளை, எனக் கேள்வியுற்றதும் என் முயற்சியில் துணிவுடன் இறங்கினேன். திருக்குறளைப் படித்திருந்தால், தாங்களும் சரி, தங்கள் நாட்டு மக்களும் சரி, என் கூற்றினை ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள்!”

இப்படி வாலிபன் பதில் அளித்தான்.

“அப்படியென்ன இருக்கிறது அந்தக் குறளில்?”

இது மன்னரின் கேள்வி!

வாலிபன் கூறிய குறள் இதுதான்:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

ஒரு செயலைச் செய்து முடிப்பேன் என்று வாயளவில் கூறிவிடுவது யார்க்கும் மிக எளிது! ஆனால் சொல்லியவாறு அச் செயலை முடிப்பது எளிதானதல்ல; அரிதானதாகும் - என்பதே இந்தக் குறளுக்குப் பொருள்.