உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 67 · 67 / 300

அவனைப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவனும் அவள் விழிகளை நோக்கினான். அவள் பேச முடியாதவைகளையெல்லாம் அவளது விழிகள் பேசின.

அவளது அழகிய வாய்க்குப் பதிலாக இமை, உதடுகள் அசைந்தன. கண்ணின் கருமணிகள் காதலை வெளிப்படுத்திக் காம உணர்வைப் புலப்படுத்தின.

சுருக்கமாகச் சொன்னால், அவளுக்காக அவள் விழிகள் அவனிடம் கெஞ்சின. அவள், தன் காமநோயை வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் - அல்லது வேறு எந்தச் செயலாலும் வெளிப்படுத்தாமல் - கண்ணால் மட்டுமே வெளிப்படுத்திய தானது, அவளது பெண்தன்மைக்கு மேலும் பெண்தன்மை நயத் தரக்கூடியது என்று வள்ளுவர் வர்ணிக்கிறார்:

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப நண்ணினால் காமநோய் சொல்லி இரவு.

அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1280

Large colour battlefield illustration occupying the upper half of the page: a war elephant covered with arrows amid wrecked chariots and weapons.

நால்வகைப் படைகளும் மோதிக்கொள்ளும் போர்க்களம். வாள்கள் மின்னலென ஒளி வீசுகின்றன. கணைகள், மழையெனப் பொழிகின்றன. முரசுகள், இடியென முழங்குகின்றன. தேர்களும் புரவிகளும் பாய்ந்தோடித் தாக்கும் வேகத்தில், களத்தில் சாய்ந்து கெடுகின்றன. மேகக்கூட்டம்போல் வரும் யானைக் கூட்டம், குன்றுகள் மோதுவதுபோல் போரிடுகின்றன. பிறந்த மண்ணின் பெருமையைக் காக்க, இருதரப்பு வீரர்களும் களத்து மண்ணில் குருதி சிந்துகின்றனர்.

இறுதி வெற்றி, இருதரப்பினரில் ஒருதரப்பினர்க்கே கிட்டுகிறது. எனினும் புறங்கொடாது போரிட்டு மாண்டிடச் சபதமேற்று வில்லும் வேலும் வாளும் கேடயமும் தாங்கிய மறவர், அந்தக் களத்தினில் அங்குமிங்கும் துள்ளிச் சென்று வீர விளையாட்டு நிகழ்த்துகின்றனர்.

ஆங்கோர் யானை, தன் துதிக்கையைத் தூக்கியவாறு போர்முழக்கம் புரிந்துகொண்டு, எதிர்த்துவரும் வீரர்கள்மீது தாக்குதலைத் தொடங்குகிறது. விண்முட்ட வளர்ந்து நிற்கும் மலையொன்றின் உச்சியிலிருந்து பெரும் பாறையொன்று நகர்ந்து கீழ்நோக்கி வரும்போது இடையில் நிற்கும் செடி, கொடி, சிறு மரங்கள் அனைத்தும் அழிந்துபடுதல்போல், அந்த யானையின் தாக்குதலைத் தாளாது பல வீரர்கள் வீழ்கின்றனர். அதன் காலடியில், வீரர்கள் தலைகள் முற்றிய தேங்காய்கள் போல் ஆகின்றன.

வீறுகொண்டு போரிடும் அந்த யானையின்மீது, அதில் ஏறிவந்த தலைவனில்லை. அவன் களம்பட்டான் போலும். அதனால்தான் அந்த யானை சினங்கொண்ட புலிபோலப் பாய்கிறது. அதனை வளைத்து மாய்த்திட நான்குபுறமும் தேர்ப்படை சூழ்ந்தது. எட்டுத் தேர்கள் சுற்றி நின்றன. எஃகுள்ளம் படைத்த தளபதிகள், எடுத்தனர் வில்லை! பூட்டினர் கணைகளை! தொடுத்தனர் யானைமீது! ஒன்றிரண்டு நூறு எனப் பல நூறு அம்புகள் அந்தப் போரிடும் யானையின் உடலெங்கும் தைத்தன.

அம்புகள் தைத்த அந்த யானையின் உடலே மறைந்துவிட்டது என்கிறார் வள்ளுவர்.

ஆம், அவ்வளவு பெரிய உடலை மறைக்குமளவுக்கு அம்புகள் அதன்மீது தொத்திக் கொண்டிருக்கின்றன என்றால், எவ்வளவு அம்புகள் பாய்ந்திருக்க வேண்டும்! யானை, முள்ளம்பன்றிபோல் காட்சி தந்திருக்கக்கூடும்! நூற்றுக் கணக்கான அம்புகளால் புண்பட்ட யானை, ஊக்கம் தளரவில்லை! அய்யோ! இத்தனை அம்புகளா? என்று அதிர்ச்சியடைந்து அந்த இடத்தைவிட்டு ஓடிவிடவில்லை. பிறகென்ன செய்கிறது? அந்தச் சூழ்நிலையிலும் அது ஊக்கம் தளராத தன்னுடைய பெருமையை நிலைநாட்டுகிறது.

மேனியில் இனி ஒரு அம்புகூடப் படுவதற்கு இடமின்றி அத்தனை அம்புகள்!

யானை, தன் இரு முன்னங்கால்களையும் மேலே தூக்குகிறது. துதிக்கையைக் கம்பீரமாக உயர்த்துகிறது. தன்னைச் சுற்றி நிற்கும் தேர்களையும் தேர்களில் உள்ள தளபதிகளையும் பார்க்கிறது. இமை கொட்டித் திறப்பதற்குள் பெரும் ஓலியுடன் தன் எதிரேயுள்ள ஒரு தேரைப் பொடி செய்கிறது. மற்றொரு தேர் நொறுங்குகிறது. ஏனைய தேர்களில் உள்ள தளபதிகள் சிறிதுநேரம் திகைக்கின்றனர். தன் வாழ்வு முடிவதற்குள் அந்தக் களத்தில் பகைவர்கள் பலர் வாழ்வை முடிப்பதென அந்த யானை சுழலும் கடுமைகண்டு அனைவருமே வியப்படைகின்றனர்.

வள்ளுவரும் அதற்கென ஓர் அழகான குறள் வழங்கி ‘ஊக்கம் உடைமை’யின் உயர்வினை எடுத்துக் காட்டுகிறார்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப் பாடூன்றும் களிறு.

‘மேனி மறையுமளவுக்குக் கணைகளால் புண்பட்டாலும்கூட யானை, இறுதிவரையில் தன் பெருமையை நிலைநாட்டும். அதுபோல், ஊக்கம் உடையவர்கள், அழிவே வந்தாலுங்கூடத் தளர்ச்சி அடைய மாட்டார்கள்’ என்பது இதற்குப் பொருள்.

அதிகாரம் - 60 - ஊக்கம் உடைமை; பாடல் - 597

மலர்ப்பூங்கா - அதனிடையே மணிமண்டபம் - மண்டபத்திற்குள் மஞ்சம் - மஞ்சத்தில் வஞ்சிக்கொடி!

கொடியல்லவா, அதனால் நினைவுக்காற்றில் நெளிந்துகொண்டிருக்கிறது. நினைவும் காதல் பிரிவைப் பற்றியது. ஆதலால், அந்தக் கொடியுடல், நெளிவதோடு மட்டுமல்ல; துவளவும் செய்கிறது.