குறளோவியம்
பகுதி 55 · 55 / 300
மறுநாள் தன் மணாளன் தெளிந்தான் வந்ததும், ‘நெளிந்தான்’ நடந்து கொண்ட முறையைச் சொல்லிக் கதறி அழுதுவிட்டாள். தெளிந்தானுக்குச் சினம் பொங்கிற்று. நண்பனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தான். தன் மனைவி வேதனையுற்றதுபோல், அவன் மனைவியும் வேதனையுற வேண்டுமென்று எண்ணினான். தெளிந்தான் என்று பெயர் இருந்தும்கூடக் கோபத்தின் காரணமாக தேர்ந்தெடுக்கக்கூடாத ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தான்.
நெளிந்தான் ஒரு நாள் வெளியூர் சென்றிருந்தான். அதுதான் சமயமென்று தெளிந்தான், நெளிந்தானின் வீட்டுக்குச் சென்றான்.
தன் மனைவியிடம் தவறாக நடந்துகொண்டு, அவள் மனத்தைப் புண்படுத்தினான் அல்லவா நெளிந்தான்? அதற்குப் பதிலாக நெளிந்தானின் மனைவியின் மனத்தைப் புண்படுத்த வேண்டுமென்பது அவன் திட்டம்.
தெளிந்தானைக் கண்டதும், நெளிந்தானின் மனைவி, “வாருங்கள்” என்று மிக்க அன்புடன் அழைத்தாள். “பால் பருகுகிறீர்களா? கொண்டு வரட்டுமா?” எனக் கேட்டாள். “கொண்டு வா!” என்றான் கோபத்தை அடக்கிக்கொண்டு!
அவள் பால் கிண்ணத்தை அவனிடம் நீட்டினாள். அவனோ, அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டான்.
அவள் பதறுவாள், துடிப்பாள், அழுப்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். அவளோ, நாணிக் கோணி, “இருங்கள்” என்றவாறு கதவை மூடுவதற்காகச் சென்றாள்.
அதிர்ச்சியும் மயக்கமும் அவனுக்கு! அவன் ஒரே ஓட்டமாகத் தன் வீடு போய்ச் சேர்ந்தான். நடந்ததைத் தன் மனைவியிடம் சொன்னான். துணைவனின் போக்கை அவள் கண்டித்தாள். இருப்பினும், அவன் வலையில் சிக்காமல் விடுபட்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்தாள். அவன் சொன்னான்:
“எனக்கும் குறள் தெரியும் பெண்ணே!”
“எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி.”
“அதாவது, இச்செயல் எளிதாக நிறைவேறும் என்ற நிலையிலேகூடப் பிறன் மனைவியிடம் நெறி தவறிச் செல்கிறவன் அழியாத பழிக்கு ஆளாவான்.”
கொழுநன் கூறிய குறளையும் விளக்கத்தையும் கேட்டு அந்தக் கார் குழலாள் களிபேருவகை எய்தினாள்.
அதிகாரம் - 15 - பிறனில் விழையாமை; பாடல்கள் - 142, 145
Large colour illustration above the prose showing a woman in the foreground with a second female face inset, visually accompanying the woman-addressing-her-heart vignette.
“என் இனிய நெஞ்சமே! சே! உன்னைப் போய் இனிய நெஞ்சம் என்று கூறுகிறேன் பார்! எத்தனையோ இன்னல்களைத் தாங்குகிற உனக்கு; இந்த ஒரு விஷயத்தில் மட்டும் உறுதி என்பது ஒரு துளியும் கிடையாது. அவரைத்தான் உன்னுடையவர் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறாய் - ஆனால், அவரைப்பற்றி உனக்கேன் இத்தனை ஐயப்பாடு? அதனால்தானே அடிக்கடி ஊடல் கொள்கிறாய்? அந்த ஊடலாவது நிலைத்துநிற்கும் உறுதியை நீ பெற்றிருக்கிறாயா? அவரைக் கண்டவுடன் என்ன செய்கிறாய்?
தீர விசாரித்துத் தெளிவுறாத ஒரு குற்றத்தை அவர்மீது சுமத்தி ஊடல் கொண்டிருக்கும்போது - அவர் கரங்கள் என்மீது பட்டவுடன் நீ எங்கேயோ போய்விடுகிறாய் நெஞ்சே! கட்டித் தழுவுகிறார் - காதல் இலக்கியம் வரைகிறார் - எட்டித் தள்ளமுடியாமல் என்னை முழுமையாக அவருக்குக் கொடுத்துவிடுகிறேன். கூடலெனும் தேர்த்திருவிழாவில் ஊடலென்பது எங்கேயோ காணாமல் போய்விட்ட செல்லாப் பணமாகி விடுகிறது.
ஊடலைத் தீர்த்துக் கூடலால் என்னை மகிழ்விக்கும் அவரைக் காணும்போது, நெஞ்சே! நீயல்லவா குறுக்கே நின்று என்னைத் தடுத்து அவருடன் பிணங்கி ஒதுங்கச் செய்யவேண்டும்! அதைச் செய்வதற்குப் பதிலாக, அப்போது நீ எங்கேயோ தொலைந்து விடுகிறாய்! அவர் இல்லாத நேரத்தில் அவர் மீது பொய்யாகச் சினங்கொண்டு குதிக்கின்றாய்!”
இப்படியொரு கிள்ளைமொழியாள், தன் நெஞ்சோடு கிளத்தலை இந்தக் குறள் குறிப்பிடுகிறது.
