உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 53 · 53 / 300

“வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி” என்ற பாட்டைப் படித்திருக்கிறோம் அல்லவா? அந்தப் பாட்டு விளக்கும் உண்மையைத்தான் திருவள்ளுவர், குறள் வடிவில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே அறிவித்துவிட்டுப் போயிருக்கிறார்.

அவரவர்களுடைய இயல்புகளை அறிந்து, அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு ஏற்பட்டுவிடும்.

“நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை”

அதிகாரம் - 47 - தெரிந்து செயல்வகை; பாடல் - 469

Large colour illustration showing a separated woman looking up toward the moon beneath a giant pair of eyes.

“நிலவு நெருப்பாகச் சுடுகிறதே - அய்யோ! கொடுமை நிறைந்த நிலவே! உனக்குத் தண்ணிலவு என்று பெயராயிற்றே; என்மீது எதற்காகத் தணலைக் கொட்டுகிறாய்?” என, முழுமதியின் மீது சினங்கொப்பளிக்கச் சீறிவிழும் மங்கை யார் உண்டு, மார்புறத் தழுவி மகிழ்ந்த மணாளனைப் பிரிந்திருக்கும்போது!

“பொல்லாத நிலவே! நில்லாதே என் முன்னால்! போ! போ! மறைந்து விடு” எனச் சொல்லாலே கணைபொழிந்து, கண்ணீரும் பொழிந்து நிற்கும் காரிகையர் உண்டு -

காதலன் பிரிவு எனும் கடுஞ்சோதனைக்கு ஆளாகும்போது. ஆனால் இதோ ஒரு பெண், காதலனைப் பிரிந்து கவலை கொண்டிருப்பவள்தான்; எனினும் அவள் நிலாவைப் பார்த்து வசை பாடினாள் இல்லை; வருந்திக் கோபித்துக் கொள்ளவும் இல்லை. கோலநிலா வந்து கொஞ்சுகின்ற இரவில், அவள் காதலனோடு களித்துக் கிடக்க முடியவில்லைத்தான்; அதற்காக அவள் அந்த நிலாவின்மீது காய்ந்து விழுவதற்குப் பதிலாக, வேண்டுகோள் ஒன்றை வைக்கிறாள். என்ன வேண்டுகோள் அது?

இருட்டு நேரத்தில் அவள் கண்கள் காதலனைத் தேடிப் புறப்பட்டு விட்டனவாம்.

ஒருவேளை அந்தக் கண்கள் அவனிருக்குமிடத்திற்கு அருகே வந்து விட்டாலுங்கூட இருள் சூழ்ந்திருந்தால் அவனைக் கண்டுகொள்ள முடியாதல்லவா? அதற்காக அந்தக் கண்களுக்குத் துணையாக ஒரு விளக்குத் தேவைப்படுகிறது. அதுதான் அந்த வான விளக்கு. அந்த விளக்கை, “விலகிப் போ! என் உள்ள வேதனையைக் கிளறாதே!”

என்று விரட்டி அடித்துவிட்டால், பிறகு ஏற்படுகிற காரிருளில், அவள் காதலனைத் தேடிப் பிடிக்கமுடியாமல் கண்கள் திண்டாடுமல்லவா? அதற்காக, அவள் நிலவைப் பார்த்துக் கெஞ்சுகிறாள்.

“திங்களே! நீ மறைந்து விடாமல் இருந்திடுவாயாக! என்னைவிட்டுப் பிரியாமலிருந்து பிரிந்து சென்றுவிட்ட என் அன்புக் காதலரை என் கண்களால் தேடிக் காண்பதற்கு உதவியாக நீ ஒளி வழங்கிடல் வேண்டும். ஆகவே, மதியே! நீ மறையாது வாழ்வாயாக!”

அதற்கு இதோ குறள்:

“விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி.”

அதிகாரம் - 121 - நினைந்தவர் புலம்பல்; பாடல் - 1210

Small printed Valluvar-monument illustration centred below the authority/song metadata.

Large colour multi-scene domestic illustration showing several women and a man in linked dramatic moments.