குறளோவியம்
பகுதி 33 · 33 / 300
“நண்பா, இப்போது உன் கோபமெல்லாம் எப்படியிருக்கிறது? இன்னும் சினங்கொண்டு சீறி விழுந்தபடிதான் இருக்கிறாயா? தென்றல் என மாறித் திருந்தி விட்டாயா?”
கதிரவனின் கேள்விக்குக் கலிங்கன் சிரித்துக்கொண்டே பதில் சொன்னான்:
“அன்புத் தோழனே! நீ வியப்படைகிற அளவுக்கு என்னிடத்திலே மாற்றம் ஏற்பட்டு விட்டது! நான் ஒரு நிகழ்ச்சியைச் சொல்லுகிறேன் கேள்! நேற்று நடந்த நிகழ்ச்சிதான்! கேட்டால் நீ என்னைப் பாராட்டுவாய்!”
“அப்படி என்ன அற்புத நிகழ்ச்சி? அதையும்தான் சொல்வேன்; கேட்கிறேன்.”
“நேற்றுப் பாசறைப் பயிற்சி முகாமில் உட்கார்ந்திருந்தேன். என்னுடன் போர் வீரர்கள் பலரும் அமர்ந்திருந்தார்கள். அப்போது தளபதி அந்தப் பக்கம் வந்திருக்கிறார். நான் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை. அவர் வருவதைக் கண்ட மற்ற வீரர்கள், எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். அவர் அருகே வந்த
பிறகுதான் எனக்குத் தெரிந்தது. நான் எழுந்து நின்று வணக்கம் செலுத்துவதற்குள் தளபதி என்னிடமே வந்துவிட்டார். என் கையில் கண்ணாடிப் பாத்திரமொன்று இருந்தது. அப்போதுதான் தண்ணீர் குடித்துவிட்டு அந்தப் பாத்திரத்தைக் கையில் வைத்திருந்தேன். கண் இமைப்பதற்குள் தளபதியின் முரட்டுக் கால், அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை உதைத்துக் கீழே உருட்டியது. பாத்திரம் உடைந்து சிதறியது. பதறிப் போய் எழுந்தேன். முகத்தில் காரித் துப்பிவிட்டுப் போய்விட்டார்.
நான் அமைதியாக நின்றேன். சரி! சினம் காக்கவேண்டும்; அதுவே சிறந்தது என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நண்பா! என் கையில் இருந்த பாத்திரத்தைக் காலால் உதைத்தமைக்கும், என் முகத்தில் காரி உமிழ்ந்தமைக்கும், எனக்குக் கோபம் மட்டும் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்! என் தலைக்கே ஆபத்து வந்திருக்கும் அந்தத் தளபதியால்! என் இன்னுயிர்த் தோழனே! இப்போது சொல், நான் சினம் காப்பவனாகிவிட்டேனா இல்லையா?”
கலிங்கன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரவன் பதில் சொன்னான்:
“இதைத்தானப்பா வள்ளுவர் கூறுகிறார்: நம் சினம் பலிக்குமிடத்தில் அதனை அடக்க வேண்டும்; சினம் பலிக்காத இடத்தில் அடக்கினால் என்ன- அடக்காவிட்டால் என்ன! சினம் செல்லுபடியாகாத இடத்தில் அடக்குவது பெரிய காரியமல்ல; செல்லுபடியாகும் இடத்தில் அடக்குவதே சிறப்புக்குரியதாகும்.”
கதிரவன் மேற்கோள் காட்டிய குறளைக் கேட்டுக் கலிங்கன் தலை குனிந்து கொண்டான்.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என்.
அதிகாரம் - 31 - வெகுளாமை; பாடல் - 301
Colour illustration above the prose showing a young woman seated near a cooking fire, with tally-like marks visible on the wall behind her.
சேரன் வில்லோ புருவம்? வீரன் கணையோ விழிகள்? சிந்தைக்கு விருந்தோ இந்தக் காந்தச் சிலை? - என்றெண்ணத் தோன்றும் இந்த எழுதாத சித்திரப் பெண் - எழுத்து மாளிகையில் எழில்காட்டும் கண்ணாடியின் எதிரேயும் இல்லை; இயற்கையின் அழகு மலிந்த அந்திநேரத் தோட்டத்து நடுவிலேயும் இல்லை; அடுக்கலையிலே அமர்ந்திருக்கிறாள். ஏன்? கேள்வி குடையத்தான் செய்யும்.
அந்தப் பட்டு நிகர்ப்பாவை, தன் காதலனுக்குப் பிட்டுத் தயாரிக்கிறாள். உப்பிட்டு வளர்த்த பெற்றோர், அவளை மலருக்கு ஒப்பிட்டு அவனிடம் தந்தார்கள். அவனோ கொப்பிட்டு வளரும் பகை சாய்க்கக் கொடுவாள் ஏந்திச் சென்றான். அவள் கும்பிட்டுக் கேட்டும் அவன் இருந்தானில்லை. நகர்ந்து ஒழிந்தன நாட்கள். அவளோ நெஞ்சு ஏடுகளைத் திருப்புகிறாள். நெடுஞ் சுவரிலேயுள்ள கோடுகளை எண்ணுகிறாள். பால் கணக்கு, தயிர்க் கணக்குக் காட்டும் கோடல்ல அவை.
அவளின் பற்றுக்கோடு, அவளை விட்டுப் அவன் பிரிந்திருக்கும் நாட்களின் கணக்கு! கோடுகளைப் பார்த்துப் பெருமூச்செறிகிறாள். இன்றுதான் வருவானோ?- இன்பம் தருவானோ இல்லையோ?- இன்றிரவும் தொல்லையோ? - என ஏங்குகிறாள், தாமரை மொட்டு நிகர் தனம் படைத்த பேரழகி. தான் சுட்டுத் தரும் பிட்டுண்ணப் பேரழகன் வரக் காணேனே எனத் துடிக்கிறாள். அது மட்டுமா? அதுதான் தன்னைப் பிரிந்து எத்தனை நாட்களாயின என அறிவிக்கும் அந்தச் சித்திரக்கோடுகளைத் தொட்டுத் தொட்டு, எண்ணி எண்ணி, அவள் விரல்களும் தேய்ந்துவிட்டதாகக் கூறுகிறார் குறும்புக்கார வள்ளுவர் - அதற்கு இதோ குறள்.
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.
