குறளோவியம்
பகுதி 31 · 31 / 300
“நேற்று வாக்களித்தபடி அந்தப் புலியைக் கொன்று குடிப்பத்து மக்களைக் காப்பாற்றி விட்டீர்களா?”
அவன் விடையளித்தான்.
“இல்லை! நேற்று வேறு ஓர் அலுவல் எனக்கு! அதனால் இன்றைக்குச் செல்கிறேன் வேட்டைக்கு!”
“அய்யோ ... அந்த மக்கள் எவ்வளவு நடுக்கத்தில் இருக்கிறார்கள். இதில் போய் நாட்களைக் கடத்தலாமா? உடனே அவர்களைக் காப்பாற்றுங்கள்” என்று அவள், அவனிடம் கேட்டுக்கொண்டாள். அவனும் ‘நிச்சயமாக’ என்று கூறிவிட்டுச் சிற்றுண்டி முடித்து எழுந்தான்.
தன் தாய்க்கு உடல் நலமில்லை - போய்ப் பார்த்துவிட்டு மறுநாள் காலையில் வந்துவிடுவதாக, அவன் மனைவி அவனிடம் அனுமதி கேட்டாள். அவன் சரியென்று தலையசைக்கவே அவளும் புறப்பட்டுச் சென்றாள். கூறியவாறு மறுநாள் காலையில் திரும்பி வந்தாள். கணவன் தூங்கிக் கொண்டிருந்தான். பெருமூச்சு செய்து அவனை ஒருவாறு எழுப்பினாள். அவன் எழுந்தவுடன் அவள் கேட்ட முதல் கேள்வி, “அந்தக் கொடிய புலியைக் கொன்று விட்டீர்களா?”
என்பதுதான். “அடடே! அந்த வேட்டையை மறந்தேபோய் விட்டேனே” என்று அவன் சொன்ன பதில் கேட்டு அவள் பதறிப்போனாள்.
“என்ன இது? நேற்று முன்தினமே செய்திருக்கவேண்டிய காரியம் - அதையும் காலம் கடத்தினீர்கள். நேற்று போயிருப்பீர்கள் என நினைத்தேன். தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இன்று கேட்கிறேன். மறந்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்! உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு இப்படியா தொண்டாற்றுவது! சரி - சரி! இப்பொழுதாவது புறப்படுங்கள். உடனே புறப்படுங்கள்” என்று உரக்கக் கூறினாள் அவள்.
“இப்போது என்னால் முடியவே முடியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறது. மாலையில் போகிறேன்” என்று மீண்டும் சுருண்டு படுத்துக் கொண்டான் அந்த ஊர்க்காவலன்.
மாலையில் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல், புலி வேட்டைக்கான கருவிகளுடனும் ஆட்களுடனும் கிளம்பினான். காடு நோக்கிச் செல்வதற்கு முன்பு அந்தக் குடிப்பத்திற்குச் சென்று மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினான்.
குடிப்பத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்கள் அவனை வெறுப்போடு பார்த்தார்கள். சிலர் அலட்சியப்படுத்தினார்கள். அவன் ஓர் இடத்தில் நின்று கொண்டு அனைவரையும் அழைத்தான். குடிப்பத்து மக்கள் அவனைச் சூழ்ந்து திரண்டனர். “உங்கள் வேண்டுகோளின்படி புலி வேட்டைக்குப் புறப்பட்டு விட்டேன்” என்றான். கூட்டத்தில் அழுகையுடன் கூடிய சிரிப்பொலி எழுந்தது. அந்தச் சிரிப்பு வெறிச் சிரிப்பாக இருந்தது. ஒரு மூதாட்டி அவனுக்கு எதிரே வந்தாள்.
“நீ ஊர்க்காவல் புரிகிற அழகே அழகு! உன்னிடம் நாங்கள் முறையிட்ட பிறகு இந்தக் குடிப்பத்தில் புலிக்கு இரையான குழந்தைகள் மூன்று! இதோ பார் - அருமைச் செல்வங்களை இழந்து நிற்கும் வேதனை உருவங்களை! உன் ஊர்க்காவல் எங்களுக்குத் துணை புரியாது என்று தெரிந்துகொண்டோம். நீ எதிலும் காலம் கடத்துபவன்; மறதியின் வடிவம்; சோம்பலின் சுரங்கம்; தூக்கத்தில் மன்னன். உன்னால் எங்களைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தோம்.
நாங்களே ஒன்று திரண்டு புலியை வீழ்த்திவிட்டோம். தேவையானால் உன் ஆட்களைவைத்து அதன் தோலை உரித்துக் கொண்டுபோ! அதன் நகங்களை வெட்டிக் கொண்டுபோ! எங்கள் குழந்தைகளின் குருதியில் மூழ்கிய அதன் பற்களைப் பிடுங்கிக் கொண்டுபோ!” என்று ஆவேசமாகப் பேசினாள். ஊர்க்காவலன் குனிந்த தலை நிமிரவில்லை. வெட்கம் நெஞ்சினைத் தாக்கவே, யாரிடமும் பேசாமல் அடிமேல் அடிவைத்து நடந்து அந்தக் குடிப்பத்தைவிட்டு அகன்றான். அதனால்தான் வள்ளுவர் சொன்னார்: காலம் தாழ்த்தல் - மறதி - சோம்பல் - அளவு மீறிய உறக்கம் ஆகிய நான்கும்; கெடுகின்ற இயல்பு படைத்தவர்கள் விரும்பி ஏறுகிற மரக்கலமாகும் என்று!
இதோ குறள்:
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
அதிகாரம் - 61 - மடி இன்மை; பாடல் - 605
Small printed chariot/monument motif centered below the Kural citation block near the foot of the page.
Large colour illustration above the prose showing embracing lovers in a moonlit/night setting.
சோர்ந்து போயின. என் வீட்டுச் சேவல் பொழுது விடியப்போவதை அறிவித்து விட்டது. தாய் தந்தை விழிப்பதற்குள், ஊர் நடமாட்டத் தொடங்குவதற்கு முன் மனை திரும்ப வேண்டுமென்று விரைந்தோடி இல்லில் புகுந்து கொண்டேன். நேற்றுப் பகல் முழுவதும் நெருப்பின் மீது நடந்தேன்; நெருப்பின்மீது அமர்ந்தேன்; நெருப்பின் மீதே படுத்தேன். என் துயர் கண்டோ என்னவோ கதிரவனும் தன் கடமையை விரைவில் முடித்துக் கொண்டு மேற்றிசையில் ஓய்வு கொண்டான்.
அதே பாறைகள்! அதே சிற்றருவி! முதல் நாளைப்போலவே நொச்சி மரத்தடியில் நின்றுகொண்டு காத்திருந்தேன். அருவியின் இசை, மரங்களின் ஒலி, மரக்கிளைகளில் அமர்ந்திருந்த புள்ளினங்களின் சிறகடிக்கும் ஓசை, என்னைப் பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டு இருந்தன. சற்றுத் தொலைவிலே அவர் வரும் குறிப்பு தெரிந்தது. ஆம், அவரேதான்! முதல் நாள் இரவு முழுதும் என்னைச் சோதனைக்கு ஆளாக்கிய அவரேதான்!
தோழி! அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டுமென்று திட்டம் தீட்டினேன். அதனைச் செயல்படுத்த மிக உறுதியாக இருந்தேன். அவரிடம் நான் புரியும் ஊடலில், இனி அவர் ஒருமுறை, தான் அளித்த வாக்குறுதியைத் தவறக்கூடாது என்ற அளவுக்குப் பாடம் கற்பித்திடத் துணிவு கொண்டேன். என் உயிரல்ல, என் இன்பமல்ல. இனி இப்படி உன்னை ஏமாறச் செய்திட மாட்டேன். அய்யோ பாவம், நேற்றிரவெல்லாம் எனக்காகக் காத்திருந்த உன் கால்கள் நோகுமே...
எங்கே அந்த வலி போக்கட்டுமா? என்று அவர் கெஞ்சி, நெளிந்து வளைந்திடுகிற வரையில் நான் அவரை ஏறெடுத்துப் பார்ப்பதில்லை; ஊடல் முடித்திடப் போவதில்லை என என்னைத் திட்டப்படுத்திக்கொண்டு ஊடல் போருக்கு ஆயத்தமானேன். அவரும் அருகே வந்துவிட்டார். அவர் முகத்தில் அச்சம் குடிகொண்டிருந்ததை நிலவின் ஒளி எனக்குத் தெளிவாக்கியது. முதல் நாள் என்னை ஏமாற்றிய தவறு, ஊடலுக்குத் தொடக்கவிழா நடத்தப் போகிறதே என்ற அச்சம்தான் அது.
அவர் மிக அருகே வந்துவிட்டார்! நான் அவரை நோக்கினேன். அசைவற்று நின்றேன். அதற்குள் பெரிய துரோகம் நடந்துவிட்டது. அந்தத் துரோகி வேறு யாருமல்ல! என் நெஞ்சம்தான்! நான் ஊடலைத் தொடங்குவதற்குமுன், அந்த அவசரக்கார நெஞ்சு என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவரைப் போய்க் கூடிவிட்டது! பிறகு ஊடலுக்கு என்ன வேலை? என்னருகே வந்துவிட்ட அவரை ஓடிப்போய்த் தழுவிக்கொண்டேன். ஊடல் தலை நீட்டவேயில்லை. கூடலின் முற்றுகை பலமாகிவிட்டது.
என் நெஞ்சே அவசரப்பட்டு என்னைக் காட்டிக் கொடுத்துவிட்ட பிறகு நான் என்ன செய்யமுடியும்? என் தாயும் தந்தையும் ஒப்புதல் அளித்து விட்டார்களாம். அந்தச் செய்தியை சிறிது நேரங்கழித்து அவரே சொன்னார். பிறகு அந்தத் தழுவல் இன்பத்தைப் பற்றி விவரிக்கவா வேண்டும்?”
