குறளோவியம்
பகுதி 22 · 22 / 300
“இவள் எதற்காக நமக்கு உதவி செய்ய ஓடிவர வேண்டும் என நினைக்கிறீர்களா? ஆனால், என்னை யாரென்று அறியாமலே உங்கள் மனைவி செய்த உதவிக்கு இது தினையளவுகூட ஈடாகாது. உங்களைப் போலத்தான் எனக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது. ஒரு முறை தீயவர்களிடமிருந்து தப்பியவளாக உங்கள் ஊரிலே வந்து அடைக்கலம் புகுந்தேன். அப்போது பட்டினியால் நான் படாத பாடுபட்டேன். தெருத் தெருவாக அலைந்தும் ஒரு கவளம் சோற்றுக்கும் வழியில்லாது துவண்டுவிட்ட நிலையில், இந்த அம்மாதான் என் பசியை ஆற்றினார்கள்.
உயிருள்ளவரை அந்த நன்றியை நான் மறக்கலாமா?”
-விழிகள் நீரில் மிதக்கப் பழத்தட்டுக்காரி இவ்வாறு கூறிவிட்டு, அவர்களைப் பிடிவாதமாகத் தன் இல்லத்துக்கு இட்டுச் சென்றாள்.
சாலையில் செல்லும்போது தன் கோவலனிடம் அவள் கூறினாள்:
“வள்ளுவர் வாக்கு அப்படியே பலிக்கிறது, பார்த்தாயா? பட்டினி என்று சொல்லி வந்தவர்களின் பசியை ஆற்றுவது என்றுமே வீண் போகாது. அதுவே, தான் பெற்ற ஒரு பொருளைப் பிறகாலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக் கூடிய கருவூலம் ஆகும் என்கிறார் அவர். ஈகைப் பண்புக்குள்ள வியக்கத்தக்க சிறப்பைப் பார்த்தாயா?”
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி.
அதிகாரம் - 23 - ஈகை; பாடல் - 226
Large colour illustration above the prose showing a crowd of men in agitation/rising action, directly introducing the oppressive-rule vignette.
உலைக்கூடத்திலே கொட்டப்பட்ட புழுக்களின் கூட்டமெனத் துடித்தனர் குடிமக்கள். ஆட்சியின் பேயாட்டத்தை அவர்களால் தாங்கிட முடியவில்லை. “அய்யோ தாங்க முடியவில்லையே” என்று கதறிடவும் அவர்களுக்கு உரிமையில்லை. வாய்களுக்குப் பூட்டு! கைகளுக்கோ விலங்கு! சிறைச்சாலையின் வாயிற்குள் பட, தண்டனைகளின் பசி, நாள்தோறும் நாட்டு மக்களுக்கு மேல் திணிக்கப்பட்டது. வரிக் கொடுமை, ஏழைகளின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கியது.
வறுமையின் ஊழிக்கூத்தோ தாண்டவமானதாக இருந்தது. “பசிக்குதே” என்று குரல் எழுப்பினால், பசிக்காத இடத்திற்கு அந்தப் பஞ்சைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் அமைதியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரால் இருட்டு அமைதியை அரசு உருவாக்கியது. கட்டுப்பாட்டினைக் கண் எனப்போற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டே குடிமக்கள்மீது அடக்குமுறைகளின் வாயிலாகக் கட்டுப்பாட்டுத் திட்டமும் அடிமைத்தனத்தைத் திணித்தது. “இம்” என்றால் சிறைவாசம், “ஏன்?”
என்றால் வனவாசம் என்று கூறுவதுண்டல்லவா. அந்த ஆட்சியில் “இம்” என்று சொல்லாமலிருந்தால்கூடச் சிறைவாசம்தான்; “ஏன்” என்று கேட்டாமலிருந்தால்கூட “வனவாசம்”தான்! கருத்து மாறுபாடு கொண்டோர் கழுவில் ஏற்றப்படுவதும் அறிவுரை கூறுவோர் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டு வஞ்சம் தீர்க்கப்படுவதும் அந்த அரசின் பொழுதுபோக்கு விளையாட்டுக்களாக விளங்கின.
அந்தக் கொடுமைபுரியில் செங்கோல் செலுத்தப்படவில்லை; செந்தணலே கோலோச்சியது; செக்குமாடென மக்கள் கூட்டம் சீரழிந்து கொண்டிருந்தது; சிந்தனையாளர்கள் சிற்றெறும்புகள் போல் நசுக்கப்பட்டனர். நிந்தனையாளர்களோ அந்த நேர்மையற்ற ஆட்சியில் நித்தமொரு விருந்து பெற்றுக் கொண்டிருந்தனர்.
சிரச்சேதம் செய்யப்பட வேண்டுமென்று சிறையில் தள்ளப்பட்டிருந்த ஒரு சிங்க இளைஞன், ஒருநாள் சிறையிலிருந்து தப்பியோடி நாட்டைவிட்டு வெளியேறினான்; வள்ளுவர் வாழுமிடம் சென்றான்.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை; பாடல் - 555
Large colour illustration above the prose showing a pair of tearful eyes, with a reclining woman integrated into the lower-left portion of the image.
வெள்ளி மணல் படுக்கையிலே அந்தப் புள்ளி மயில் படுத்திருந்தாள். அந்தச் சயனத்துச் சாயலைத் தூர இருந்து காண்கிறான் அவன். அந்த அழகுமிழும் காட்சியால் உள்ளத்தில் வெல்லப்பாகு தடவிய அவன் கண்களை வாழ்த்துகிறான்; பாராட்டுகிறான்.
குளிர் மொண்டுவரும் தென்றலிலே கதகதப்பு உணர்ச்சி கலந்து வருவதாக அறிகிறான். சிறிது நேரம் சிலையானான். உணர்வு வந்தபின் அசைந்தான். அப்போது அந்த நிலாப் பதுமையைக் காணவில்லை. அவள் போய் விட்டாள்.
