உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 212
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 212 · 212 / 300

இப்படியொரு வாழ்வை அமைத்துக்கொண்ட அவன், பிறரைப் பார்த்து ‘சுயநலவாதிகள்’ என்பான்! பதவிப் பித்தர்களென்பான்! ஆனால், அவனது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் “பதவி! பதவி!” என்றே சுயநல வேட்கையுடன் துடித்துக் கொண்டிருந்தது.

அவனை உயிராக நேசித்த ஒரு நண்பனைச் சோதனையான நேரத்தில் கழுத்தறுத்துவிட்டு, அவ்வூரில் வளமாக வாழ்ந்த பேராளன் என்பவன் நட்பைத் தேடிப் பெற்றான். அவனது திறமையான தந்திரப் பேச்சிலும் - எதிரேயிருந்து முகத்துக்கு

நேராகப் புகழ்கிற ஆற்றலிலும் - பேராளன் தனது மனத்தை விடியானிடம் பறிகொடுத்தான்.

பேராளனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு! அந்த நண்பர்கள், பேராளனைத் தூய்மையாக நேசித்தார்கள். அவர்களுடன் சேர்ந்துகொண்டு விடியான், பேராளனின் அலுவல்களையெல்லாம் தானும் கவனிப்பது போல நடித்துவந்தான். அந்த நண்பர்கள் இல்லாத நேரம் விடியான், பேராளன் காதில் அந்த நண்பர்களைப் பற்றி ஏதாவது ‘கோள்’ மூட்டி வந்தான். எல்லோரையும்விடத் தனக்கே பேராளனிடம் தனிப்பட்ட செல்வாக்கு ஏற்படுமாறு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டான்.

அவன் சதியில் ஏமாந்துபோன பேராளனும் தனது உயிர்க்குயிரான நண்பர்களை ஒவ்வொருவராக விலக்கிவிட்டான். பேராளனை, இணைபிரியாமல் இருந்தும், இரண்டொரு தடவை பேராபத்துக்களில் இருந்து காப்பாற்றிய இளவேனில் என்ற நண்பன் மட்டுமே அருகிருந்தான்.

ஒரு நாள் இளவேனில் இல்லாத சமயம் பேராளனிடம், விடியான் தனது வலையைப் பின்னிடத் தொடங்கினான்.

“அந்த இளவேனில் இருக்கிறானே; அவன் மனம் ஓர் எரிமலை! உன்னைப் பற்றி அவன் பிறரிடம் பேசும்போது அந்த எரிச்சலைக் கொட்டுகிறான். மிகுந்த பொறாமை பிடித்தவன்.”

இந்த வார்த்தைகளைப் பேராளனின் காதில் விடியான் நுழைத்துக் கொண்டிருக்கும்போது, இளவேனில் அந்த இடத்தில் வேகமாக நுழைந்து, விடியானின் காதைப் பிடித்துத் திருகிக்கொண்டே அவன் கன்னங்களில் மாறி மாறி அடித்துவிட்டான். பேராளன், இளவேனிலைத் தடுக்காவிட்டால் விடியான் கீழே விழுந்தவன் எழுந்திருக்கவே முடியாது!

“அடே! மூடா! அறநூல்கள் சொல்லும் ஆக்கம் என்ன தெரியுமா? புறங்கூறிப் பொய்யாக உயிர் வாழ்வதைவிட வறுமையுற்று இறந்துவிடுதல் எவ்வளவோ மேல்!”

என்று இளவேனில் உரக்கக் கத்தினான். பேராளன், விடியானை அணைத்துக் கொண்டு இளவேனிலைக் கடிந்து கொண்டான்.

“நான் சொல்லவில்லை நண்பா! குறள் சொல்வதைச் சொன்னேன்; நான் வருகிறேன்!”

என்று கோபமாகக் கூறிவிட்டு இளவேனில் அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

குறள் என்ன கூறுகிறது?

“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும்”

அதிகாரம் - 19 - புறங்கூறாமை; பாடல் - 183

“எடுத்தேன் கவியொன்று வரைந்திட ‘என்னை எழு’தென்று சொன்னது வான்”

என்பதாகப் பாரதிதாசன் பாடுகிறாரே கண்ணா; நீங்கள் எடுத்துக் எழுதத் தொடங்கினால் என்னை எழுதென்று எதிரே வந்து நிற்பது எது? அல்லது யார்?” எனக் கேட்டாள், அவன் தோள்மீது முகத்தைப் பதிய வைத்துக்கொண்டு அந்தப் பாவை!