உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 19 · 19 / 300

தளபதியின் வீர உரைக்கிடையே அமைச்சர் குறுக்கிட்டார்.

“நன்று, நன்று தளபதியாரே! அரசர் அழிவதற்கா யோசனை கேட்கிறார்? அல்ல! அல்ல! நாடும் நாடும் வாழ்வதற்கு! நமது ஆட்சி தொடர்வதற்கல்லவா யோசனை கேட்கிறார்? வீரங் கொப்பளிக்கும் உமது வார்த்தைகளும் செயல்களும் நமது மானத்தைக் காப்பாற்றும். ஆனால், நமது மணிமுடியைக் காப்பாற்றுமா? எனவே, உமது பேச்சை நிறுத்தும். அரசே! நான் கூறும் வழியே சிறந்த வழி. பகை மன்னனுக்குக் கோபமெல்லாம் தங்கள் மீதுதான். அந்தக் கோபத்தைத் தணிக்க ஒரேவழி தாங்கள் முடிதுறந்து விடுவதுதான்.

முடிதுறந்தால், இந்த ஆட்சிப்பொறுப்பை யார் ஏற்பது என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இடைக்கால ஏற்பாடாக நான் வேண்டுமானால் இந்தச் சுமையை என் தோளில் சிரமம் பாராமல் தாங்குகிறேன். இப்படி ஒரு முடிவினை எடுத்தால், பகை மன்னன் நம்முடன் நட்பாக இருக்கவும் தயாராக இருப்பதாகச் சொல்லியனுப்பியுள்ளான்.”

அமைச்சர் பேச்சை முடிக்கவில்லை; தளபதி, தன் இளம் மீசை துடிக்க எழுந்து நின்று, எக்காளக் குரல் எழுப்பினான்.

“மன்னவா! நான் மறைத்து வைத்துள்ள ரகசியத்தை இப்போது சொல்லியே தீரவேண்டும், இந்த நாடு வாழ! நமது அமைச்சர், பகை மன்னனோடு நீண்ட நாள் உறவு கொண்டிருப்பவர். இவரும், அவனும் கூடி வகுத்த திட்டமே நமது கொடிமரத்தின் மீது தாக்குதல். இதோ, இந்த அமைச்சர் பெருமான் பகைவனுக்கு எழுதிய சதிக் கடிதம். நமது ஒற்றர்கள் மூலமாகக் கைப்பற்றப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள்!”

மடலைப் பார்த்துவிட்டு மன்னன் திகைத்துப் போனான். வியப்புற்றான். வியர்த்துக் கொட்டியது உடலெங்கும்.

“ஆகா! இப்படித் தவறானதும் ஆபத்தானதுமான வழியை எண்ணிக் கூறுகிற அமைச்சரைவிட, எழுபது கோடிப் பகைவர் என் பக்கத்திலே இருந்தாலும் பரவாயில்லை. அந்தப் பகைவர்களால் நன்மையே ஏற்படும். பழுதெண்ணும் மந்திரியை விட அவர்கள் எவ்வளவோ மேலானவர்கள்” என்று கூச்சலிட்டான் மன்னன்.

அதற்கு இதோ குறள் :

பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.

அதிகாரம் - 64 - அமைச்சு; பாடல் - 639

Large colour illustration above the prose showing a woman in red walking before a pair of stylised eyes, with white flowers in the lower background.

காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று

குவளை மலர்களுக்கு மட்டும் கண்கள் இருக்குமேயானால், அந்தக் கோமளவல்லியின் கண்களைக் கண்டு, “அய்யோ! நாம், அவள் விழிகளைப்போல அவ்வளவு அழகாக இல்லையே!” என்று தலைகவிழ்ந்து பூமியை நோக்குமாம்; அத்தகைய விழியழகி அவள்.

மென்மை நிறைந்த அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடிக் கொண்டாளாம். அந்தக் காம்பின் கனம் தாங்காமல், அவளது இடை நொந்து வருந்தியதாம்.

வானத்து வெள்ளி மீன்கள், திங்களையும் அந்த வடிவழகியின் வதனத்தையும் கண்டு, ‘எது திங்கள்? எது அவள்?’ - எனக் கலங்கித் திரிந்தனவாம்! அன்னப் பறவையின் இறகு அவளது பாதங்களில் படும்போது, நெருஞ்சிப்பழம் தைப்பது போலிருக்குமாம் - அத்தகைய பட்டு ரோஜாப் பாதங்கள் அவளுக்கு!

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

அதிகாரம் - 112 - நலம்புனைந்துரைத்தல்; பாடல்கள் - 1114, 1120

அழகின் இலக்கணமாகத் திகழும் அவளைத் தன் கண்களிலேயே குடிவைக்க விரும்புகிறான் ஒரு குமரன். விழிவீட்டில் இருப்பவரை வெளியேற்றி விட்டல்லவா எழிலரசிக்கு இடம்தர வேண்டும்? ஆகவே ‘கண்ணகத்தில் குடிக்கூலிக்கு வசிக்கும் ஆளிடம் போய், “தயவுசெய்து நீ வீட்டைக் காலி செய்துவிடு” என்று கெஞ்சுகிறான்.

வள்ளுவர் நடையில் அதைக் கேளுங்கள்.