உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 176
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 176 · 176 / 300

நூற்றி அறுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது வானளாவிய சிந்தனையை நிறுத்திக்கொண்டு பூமிக்குள் கல்லறை யாகிவிட்ட சமதர்மச் சிற்பி காரல் மார்க்சின் சித்தாந்தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறோம். அவரது பொதுவுடைமைச் சிந்தனைகளைச் செயலாக்கும் குறிக்கோள் என்றைக்கும் வெற்றிபெறும் என்ற ஆர்வத்தோடு, உழைக்கும் கூட்டம் இன்னமும் இந்த உலகின் பல நாடுகளில் போர்க்கொடி உயர்த்திக் கொண்டிருக்கின்றது.

அந்த மாமனிதன், சாதாரணக் குடும்பத்தில் பிறந்து மிகச் சாமானிய வாழ்வு வாழ்ந்து வறுமையின் கோரப்பிடியில் அடிக்கடி சிக்கி அறுபத்தி ஐந்தாவது வயதில் கண் மூடும்வரையில் தனது கடமையை ஓய்வின்றி ஆற்றியதற்கு, எங்கெல்ஸ் போன்ற உற்ற நண்பர் ஒருவர இருந்தபோதிலும் அருகிலேயே இருந்து இறுதிவரையில் இல்லறம் நடத்திய மாதரசு ஜென்னி என்னும் குடும்ப விளக்கின் பெருமையைப் பலர் அறியமாட்டார்கள்.

செல்வக்குடும்பத்தில் உதித்தவள், அழகில் மிகச் சிறந்தவள். அவளை மணக்கப் பலர் தவித்தனர். ஆனால் அவளோ, வளமற்ற குடும்பத்தில் பிறந்த - தனது அழகிற்குப் பொருத்தமற்ற - தன்னைவிட நான்கு வயது குறைவான காரல் மார்க்சையே மணப்பேன் என்று ஏழு ஆண்டுகள் காத்திருந்தாள். அவ்வாறே மணந்து கொண்டாள். கணவன் நாடுகடத்தப்பட்டபோதெல்லாம் அவளும் அவனுடன் சென்றாள். அவன் கைது செய்யப்பட்டபோது, அவளும் கைது செய்யப்பட்டாள்.

அந்தப் பெண்மணி ஜென்னி, தங்களின் குடும்ப நண்பருக்கு எழுதிய மடல் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறாள்:

“எனக்குத் தாங்க இயலாத மார்பு வலி! முதுகு வலி! குழந்தைக்குப் பால் கொடுக்க ஒருத்தியை ஏற்பாடு செய்யக்கூடக் கையில் போதுமான பணமில்லை. என் மார்பு வலியைப் பொறுத்துக்கொண்டு நானே குழந்தைக்குப் பால் கொடுத்தேன். குழந்தைக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, அதனால் என் மார்பு கடியுண்டு ரணமாகி குருதி வழியத் தொடங்கியது. அதனால் பாலும் குருதியும் கலந்து அது குடிக்க வேண்டியிருந்தது. அந்த நிலையில் கடன்காரர்கள் வீட்டுக்குள் நுழைந்து எங்கள் துணிமணிகள், குழந்தைகளின் தொட்டில், விளையாட்டுப் பொம்மைகள் அனைத்தையும் ஏலம் போடுவதற்கு எடுத்துக் கொண்டார்கள்.

மூன்று நாள் சாவுடன் போராடிய குழந்தை இறந்துவிட்டது. அதன் உடலைப் பின்புறத்து அறையில் மூடிவைத்துவிட்டு, நாங்களும் மற்ற குழந்தைகளும் முன்புறத்து அறையில் இரவு முழுவதும் தரையில் படுத்துக் கிடந்தோம். விழுந்தால் அந்தக் குழந்தைக்கு ஒரு சவப்பெட்டி தயார் செய்யக்கூட எங்களால் முடியவில்லை.

நான் மட்டும் தனிமையில் இந்தத் துன்பங்களை அனுபவிக்கவில்லை. ஒரு வகையில் நான் கொடுத்து வைத்தவள். என் கணவன்தான் எனக்கு எல்லாம்! அவர் என் பக்கத்திலேயே இருக்கிறார் என்பதே எனக்கு ஆறுதல்! நான் அவருடன் அவருக்குத் துணையாக இருப்பதே என் துன்பங்களுக்கெல்லாம் பரிகாரமாகக் கருதுகிறேன். ஆனால், என்னுடையவரிடம் பல வகையிலும் ஆதாயம் பெற்றவர்களில் ஒரிருவரே உதவிக்கு வருகிறார்கள். அதை நினைக்கும்போது என் நெஞ்சம் நெருப்பாகிறது; உதவியற்ற நிலையிலும் கடமையாற்றிடும் அவருடன் துணையாக இணைந்து நிற்பதே எனக்கு இன்பமல்லவா?”

இன்று உலகத்தின் கண்கள் எல்லாம் எந்தக் கருத்துக்களைப் படித்திடத் துடிக்கின்றனவோ அந்தக் கருத்துப் புதையலுக்குச் சொந்தக்காரனான காரல்மார்க்சின் இல்லறவாழ்க்கையில் விளைந்த துன்ப துயரங்கள் ஒன்று இரண்டல்ல! ஓராயிரம்! அத்தனையும் தாங்கிக் கொண்டு அவனையும் தாங்கி நின்ற அந்தத் தாய்க்குலத்துத் திருச்சுடர் ஜென்னியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று வாயார மனமார வாழ்த்த வேண்டாமோ?

இதோ வாழ்க்கைத் துணை நலத்தின் இலக்கணத்தைக் குறள் கூறுகிறது:

“மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”

அதிகாரம் - 6 -வாழ்க்கைத் துணை நலம்; பாடல் - 51

“இல்லறத்துக்கேற்ற நற்பண்பு கொண்டவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்திற்குத் தகுந்த வாழ்க்கையை மனக்குறையேதுமின்றி நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணையாவாள்” என்பது பொருள்.

ஒற்றையடிப்பாதை வரப்பு ஒன்றில், ஒடிந்துவிடும் இடைகொண்ட அந்தப் பாவை நடந்து வந்தாள். கழனிகளில் இளம் நாற்றுகள் காற்றில் சிலிர்த்திடும் காட்சி, கயல்கள் துள்ளி விளையாடும்போது குளத்தில் குவங்கும் அலைகளைப் போல் இருந்தது! பசும்புல் பத்தைகளின்மீது அந்தப் பாவையின் பாதங்கள் மெல்லச் சதிராடிக் கொண்டிருந்தன. இரண்டு கயிறுகளை முறுக்கியது போன்ற வெள்ளித் தண்டைகள், அவள் கால்களில் சேற்றின் கறைபட்டு அசைந்து கொண்டிருந்தன.

முழங்கால் வரையில் அழகு தெரியும்படியான உடை! தோளைத் தொடும் தொடாமலும் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தாவணி! அந்தச் சிற்றாருக்கெனச் செதுக்கப்பட்ட சிற்பம்!

அவள் அழகைத் தொலைவிலிருந்து ஆடவர் பெண்டிர் அனைவருமே அள்ளிப் பருகினர். நெருங்கியிருந்து நெஞ்சோடு நெஞ்சு புதைத்து வயல்வெளியை - களத்து மேட்டை - பஞ்சணையாக்கிக் கொண்டு அவளுக்கே உரியவனாகிவிட்டவன்தான் அழகன்! பெயரில் மட்டுமல்ல, காண்பதற்கும் கட்டழகு கொண்டவனைத்தான் அந்த மொட்டவிழ்ந்த மலர்க்கொடியும் தன்னுடையவனாக ஆக்கிக் கொண்டாள்!

இப்போது அவனின்றித் தனியே வருகிறாள்! அன்றில் பறவைகள்கூடப் பிரிந்திருக்கக்கூடும்; அவர்களிடம் பிரிவு எனும் பெரும்பாவி இதுவரையில் தலைகாட்டியதே இல்லை!

வாடிய முகம்! புன்னகை பூட்டப்படாத இதழ்கள்! ஒளி மங்கிய விழிகள்! இவ்வாறு அழகிழந்துவரும் மலர்க்கொடியை, வயலின் எதிர்ப்புறத்தில் நிற்கின்ற அவள் தோழிகள் வியப்புடன் நோக்குகின்றனர்.

“என்னம்மா மலர்க்கொடி! ஏன் இத்தனை சோகம்? அடடே! மேனியெங்கும் பசலை படர்ந்துவிட்டதே! என்னடி நடந்தது?”

“மறைப்பதற்கு நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? நாணம்தான் என்னை விட்டுப் போய்விட்டதே! என்னைப் பிரிந்து வெளியூர் சென்றிருக்கும் அவரை நினைத்தவுடன் பசலை படர்ந்துவிட்ட என் உடல்தான், என் நாணமற்ற தன்மையை ஊராருக்குப் புலப்படுத்திவிட்டதே!”