குறளோவியம்
பகுதி 17 · 17 / 300
இதோ இன்னொரு நாடு! இதன் பெயர் வளநாடு. பெயர்தான் வளநாடு, இங்கு நிலத்திலே வளமும் இல்லை, மக்கள் வாழ்விலே இன்பமும் இல்லை. மக்களுக்கென்று வளநாட்டு அரசால் உருவாக்கப்படும் திட்டங்கள் எதுவும் அவர்களுக்குரிய பயனைத் தரவே இல்லை. இத்தனைக்கும் பகைவர்களின் தொல்லை துளிகூட இல்லை வளநாட்டுக்கு! எனினும் வளமிழந்து கிடக்கிறதே! என்ன காரணம்? அகன்றதோர் ஆறு இரு புறமும் கரைபுரண்டு ஓடத்தான் செய்கிறது வள நாட்டில்!
நெல், கரும்பு, வாழை, கமுகு எனச் செல்வம் பெருக்கும் வகையில் வளம் நிறைந்த நாடுதான் வளநாடு. ஆனாலுங்கூட அந்த வயல்களும் தோட்டங்களும் வகைப்படுத்தப் பெறாத காரணத்தால் முழுமையான பயன்களை வழங்கிடவில்லை. மக்கள் தமக்குற்ற குறைகளை நாடி வந்து கேட்பதற்கோ, அல்லது அவர்பால் ஓடிவந்து களைவதற்கோ வளநாட்டு அரசுக்கு அக்கறையே எழுந்ததில்லை.
திங்களுக்கொரு படையெடுப்பைத் தடுத்து நிறுத்திடவேண்டிய தொல்லைக்குத் திருநாடு ஈடு கொடுத்ததோடு, மக்களின் குறைகளையும் நாடிச்சென்று அவற்றைப் போக்கிடும் செயலிலும் இடையறாது ஈடுபட்டது.
ஆனால் வளநாட்டு அரசோ, தன் நாட்டில் நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ற முறைமையைச் செய்யாத அரசாக இருந்து, நாட்டைக் காடாக்கிக்கொண்டு விளங்கியது. ஓர் அரசால் மக்களுக்குப் பயன் விளையாவிட்டால், அந்த அரசு தன் நாட்டின் பகுதிகளை நாள்தோறும் இழந்து வருவதாகத்தான் கூறவேண்டும் - ஆம்; அதைத்தான் வள்ளுவர் அழகுபடச் சொல்லுகிறார்.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்.
அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை; பாடல் - 553
Large colour illustration above the prose showing women working with grain in an agricultural field, with a seated man and another worker nearby.
வயலோரத்துக் களத்தில் வசந்தப் புறவைகள்போல அந்த உழவர் குலத்துப் பெண்கள், காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற மொழிக்கேற்ப, முறங்களைக் கைகளில் ஏந்தி நெல்மணிகளைத் தூற்றிக் கொண்டிருந்தனர். நல்ல நெல்மணிகள் குவியல் குவியல்களாக உயர்ந்தன. பதர்களும் வேறு பகுதியில் சேர்ந்தன. களத்துமேட்டு வேலை சுறுசுறுப்புடன் நடைபெறுவதைக் கவனித்தவாறு ஒரு கருங்கல் மேட்டின்மீது அமர்ந்திருந்தார் கழனிக்குரியவர்.
கார்மேகம் அவரது பெயர். தனது பண்ணையில் உழைத்திடும் பெண்களைத் தன் மகள்களைப் போலக் கருதுபவர். அவர்தம் பணி முடிந்ததும் அவர்களுக்கான ஊதியத்தை நெல்மணிகளாகவே மரக்காலில் அளந்து கொடுக்கத் தொடங்கினார்.
“இன்றைக்குத் தூற்றியதில் பதர் குறைவுதான்” என்றவாறு புன்னகை ததும்ப ஒரு பெண் - பெயர் பூவழகி - தன் கைகளில் அள்ளியிருந்த பதரைக் கார்மேகத்திடம் காட்டினாள். அவரும் மகிழ்ச்சி தெரிவித்துக்கொண்டே அவளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்!
“அம்மா! பூவழகி! தானியங்களில் பதரை எளிதாகக் கண்டுபிடித்து ஒதுக்கி விடுகிறோம். ஆனால், மக்களுக்கிடையிலும் பதர்கள் இருக்கிறார்களே, அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது?”
பூவழகி மட்டுமல்ல - அவளுடன் சேர்ந்து வேலை பார்த்த எல்லாப் பெண்களுமே திகைத்து நின்றனர். அப்போது கார்மேகத்தின் மருமகன் கண்ணாயிரம் என்பான் அங்கே வந்தான். அவனைக் கண்டதும் பெண்கள் ஓரமாக ஒதுங்கிக் கொண்டனர்.
“என்ன; சிட்டுக்குருவிகள் - என்ன சொல்கின்றன? எனது மாமனாருக்கு வாய்ப்பு என்றால் வாய்ப்புதான்! எப்போதும் இளம் புறாக்கள் சூழ - அடடா! இந்தக் களத்து மேட்டில் ஒரே கலியாட்டம்தான்!”
கண்ணாயிரம் இப்படிச் சொன்னதும், கார்மேகம் வெகுண்டார்!
“ஏய்! இப்படியெல்லாம் பேசாதே! எல்லோரும் நான் பெற்ற பெண்களைப் போல!”
கண்ணாயிரம் அதைக் கேட்டு உரக்கச் சிரித்தான்.
“என்ன மாமனாரே; உலகம் தெரியாமல் பேசுகிறீர்கள்! இவர்களில் நீங்கள் யாரைத் தொட்டாலும் துவளுவார்கள்! என்ன கிள்ளைகளா! நான் சொல்வது சரிதானே?”
