உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 146
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 146 · 146 / 300

மல்லாந்து கிடந்தபோது, அவனின் அகன்ற மார்பினைக் கண்டேன். அதில் முகம் பதித்துக் கிடந்தால், உலகமே வெடித்துச் சிதறினாலும் எனக்குத் தெரியாமற் போய்விடும். இரு குன்றுகளே அவனின் தோள்கள். அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு, சற்றே தடித்த அவர் உதடுகளை என் மெல்லிய இதழ்கள் கொண்டு மெதுவாக உரசினால், அந்த இன்பத்திற்கு இணையாய் இந்தப் புவியில் வேறென்ன இருக்கமுடியும்! ஒளியன் எனும் பெயருக்கேற்ப இரண்டு திரண்ட விழிகள்!

அந்த விழிகளின் முடிகளை என் காந்தள் விரல்கள் கொண்டு தடவிக் கொண்டே அவர் அருகே படுத்திருக்கலாம்போலிருக்கிறது! அவருக்கும் எனக்கும் திருமணம் முடிப்பதாக இரு வீட்டாரும் நிச்சயித்துவிட்டனர். அந்தப் பாழும் பஞ்சாங்கம் மட்டும், ஓராண்டு காலம் வரையில் ஒத்திப்போட வேண்டுமென்று ஊறிக் கொட்டிவிட்டதாம்! அது வரையில் நான் காத்திருக்க வேண்டுமென்பது முடிகிற காரியமா? சரி; என் தலையெழுத்து; காத்துக் கிடக்கிறேன்.

அதற்குள் ஏன் என் கண்கள் இப்படியொரு சந்திப்பை அவருடன் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்! விழுந்து எழுந்த அவர் என்ன செய்தார் தெரியுமா?

ஒரு தட்டுத் தட்டிவிட்டு, ஒரு கிள்ளும் கிள்ளிவிட்டுப் புன்னகையைச் சிந்திவிட்டுப் போய்விட்டார்! கிள்ளியது என் கன்னத்தில்! தட்டியது எங்கே என்று கேட்காதே! சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது! ஆனால், அந்தக் கை பட்டதால் ஏற்பட்ட உணர்ச்சி என்னை என்னவோ செய்கிறது! தீராத காமநோய் தீப்போலப் பிடித்துக்கொண்டது என்னை!

நானிழைத்த குற்றமா இது? இல்லை! இல்லை! என் கண்கள் இழைத்த குற்றம்! அதற்குத் தண்டனையாகத்தான் என் கண்கள் அழுது இறுதியாக நீர் வறண்டு கிடக்கின்றன.

தீராத காமநோயை எனக்கு உருவாக்கிய கண்கள், நீர் வறண்டு போகும் வரையில் அழுது நியாயம்தானே!”

-காதலனைக் கண்டு விட்ட ஒரு பெண்மணி, தனக்கேற்பட்ட கடுமையான காதல் நோயைக் குறித்து கவலைப்படுகிறாள். அதை விளக்குவதே இந்தக் குறள்:-

“பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து”

அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1174

“எவ்வளவு பொருள் செலவானாலும் பரவாயில்லை. அந்த நரித்தலையனின் பகையை நான் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறுவதுதான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியூட்டக் கூடியதாகும்.”

அருகில் அமர்ந்திருந்த புலவரிடம், அவரால் புகழ்ந்து பாடப்பெற்ற அரிமாநெஞ்சன் சொன்னான். கயல்நாடு எனும் சிற்றரசுக்குத் தலைவன்தான் அரிமாநெஞ்சன்! அவனுக்கு நெருங்கிய நண்பனாக விளங்கிடும் வாய்ப்பு பெற்றவன்தான் நரித்தலைவன். பெயருக்கேற்றாற்போல சூதுமதி கொண்டு, சூழ்ச்சிவலை பின்னி அரிமாநெஞ்சனுடைய அன்புக்குரிய சுற்றத்தாரையும் நண்பர்களையும் விரட்டி விட்டவன். இந்த உண்மையை புலவர் எடுத்துரைத்த போதெல்லாம் அதை நம்ப மறுத்தான் அரிமாநெஞ்சன்!

இப்போதும் அதே புலவரிடம் அவன், நரித்தலையனின் பகையைப் பொருள் கொடுத்தாவது பெற்றிட வேண்டும் என்று கூறியதும் அவர் வியப்பில் ஆழ்ந்தார்!

“கயல் நாட்டுக் காவலனா இவ்வாறு பேசுவது? நரித்தலையன்மீது திடீரென இப்படிக் கோபம் பொங்குவானேன்? அவன் தீயவன் - தீயினும் கொடியவன் - என்று நான் எடுத்துக் கூறியபோதெல்லாம் என் பேச்சை ஏற்றுக்கொள்ள மறுத்தாய்! இப்போது அவன் எந்தப் பகையும் உன்னோடு கொள்ளவில்லையே! நண்பனாகத்தானே இருக்கிறான். திடுமென அவனைப் பகைவனாக்கிக் கொள்வதால் பயன் என்ன?”

என்று புலவர், கேலிப் புன்னகை புரிந்தவாறு அரிமாநெஞ்சனைக் கேட்டார்.

“புலவரே! என்னை மன்னித்துவிடுக. தொடக்கத்தில் அந்தத் துரோகியைப் பற்றி நீவிர் எச்சரித்தபோது, என் செவிகள் அடைபட்டுக் கிடந்தன. என்னுடன் மிக நெருக்கமாக இருக்கிறானேயென்று எண்ணி ஏமாந்தேன். அடுத்துக் கெடுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நரித்தலைவன் என்பதை, அவனது அண்மைக் காலச் செயல்கள் வாயிலாகத் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.”

அரிமாநெஞ்சனின் கண்கள் கலங்கின. புலவர், அவனுக்கு ஆறுதல் வழங்கியவாறு அறிவுரை கூறினார்:

“என் செய்வது! எளிதில் யாரையும் நம்பிவிடும் இயல்பு உனக்கு! யாரிடமும் அவன் பெறமுடியாத மதிப்பை நீ அவனுக்கு அளித்தாய். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்து கொள்வது என்பார்களே, அதைப்போல நரித்தலைவனுக்கு நண்பர்கள் வரிசையில் முதலிடம் வழங்கினாய். இன்று அவனைப் பகைவனாக ஆக்கிக் கொள்ள என்ன விலை கொடுக்கவும் தயார் என்கிறாய். இதைத்தான் வள்ளுவர் அழகாக எழுதியிருக்கிறார். அதாவது; தன்னை அடுத்திருந்தவாறே தனக்கு மாறான காரியங்களைச் செய்பவனுடைய பகையை பொருள் கொடுத்தாவது வாங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

இப்போதாவது அந்தக் குறள் மொழி, உன் கண்ணைத் திறந்து கண்டு களிபேருவகை கொள்கிறேன்.”

சிற்றரசன், செந்தமிழ்ப்புலவரைக் கட்டித் தழுவிக்கொண்டு “எங்கே? என்னைத் திருத்திய அந்தக் குறளை உங்கள் வாயால் ஒருமுறை சொல்லுங்கள் புலவரே!” என்றான். புலவர் அந்தக் குறளை இசையுடன் பாடிக் காட்டினார்.