உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 112
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 112 · 112 / 300

-பெரியவரின் சொற்களைக் கேட்டதும் இதயம் குன்றிவிட்டது இளைஞர்களுக்கு; தலைகுனிந்து நின்றனர் வெட்கத்தால்.

“எத்தகைய தகுதிமிக்க சான்றோரை - பொறுமைமிக்க பெரியவரைச் சிறுமை செய்துவிட்டோம்; அதனால் சிறுமைப்பட்டு நிற்கிறோம்! நாங்கள் கொடிய சொற்களினால் குத்தித் துளைத்தும் கருணைவெள்ளந்தானே வடிகிறது, அவர் கண்களிலிருந்து! செருக்கின் உச்சிக்குச் சென்று தீய சொற்களால் கருக்கி எடுத்தும், தீயில் உருக்கிடும் பொன்போல் அல்லவா ஒளி வீசி நிற்கிறார் அவர்!? எங்களைக் காட்டிக் கொடுத்திடாமல் காப்பாற்றவும் துணிந்திட்டாரே!

அவரது பொறுமையுடைமைக்கு, நிறைகுடமான பெருந்தன்மைக்கு நிகர் ஏது?”

-இவ்வாறெல்லாம் எண்ணிக் குமைந்தனர் இளைஞர்கள்; அந்த எண்ணங்களே கன்னங்களில் வழிந்தோடின, கண்ணீராக!

அந்தக் காட்சியை வள்ளுவப் பெருந்தகை, எவ்வாறு வடித்துக் காட்டுகிறார் பாருங்கள்:

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.”

அதிகாரம் - 16 - பொறையுடைமை; பாடல் - 155

இளமதி, இளம் பொற்கொல்லன். திருமதி, அவனை மணந்துகொண்ட அழகுப்பாவை. தொழில் புரியும் இடத்தில் அமர்ந்து தங்க வளையல்களுக்கு மெருகூட்டிக் கொண்டிருந்தான்.

களைப்புத் தெரியாமல் கண்ணான பணியாற்ற வேண்டுமென்ற நினைப்புப் பொங்கிடக் குவளையொன்றில் மோர் எடுத்துக்கொண்டு, அவனிடம் திருமதி வந்து நின்றாள். குவளையை வாங்கும்போதே அவன் விரல்களைத் தன் விரல்களால் அழுத்தியவாறு புன்னகையை இதழில் தேக்கி அவளை நோக்கினான். அவளும் கடைக்கண்ணால் விடையளித்து அருகமர்ந்தாள்.

“வேலையில் கவனம் வைத்து அணிகளைச் செம்மையாகச் செய்திடுங்கள். கவனம் வேறெங்கோ இருப்பதாகத் தெரிகிறது.” என்றாள் கேலியாக!

“எங்குமில்லை என் கண்ணே! நேற்றிரவு ஊடலிலே வெற்றி யாருக்கு? தோல்வி யாருக்கு? என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்” என்றான் இளமதி.

“அதில் ஐயம் என்ன இருக்கிறது? எனக்குத்தான் வெற்றி!” என்றாள் அவள்.

“எப்படி உனக்கு வெற்றி என்கிறாய்?”

“என்னைத் தொடராதீர் என இடித்துரைத்துக் கட்டிலின் ஓரமாகச் சென்று உம்மை நீங்கிப் படுத்துக் கொண்டேன் நான். நீங்கள்தான் என்னை நெருங்கிவந்து தொட்டி முத்துக் கட்டியணைத்துக்கொண்டீர்கள்! அதனால் தோல்வியைத் தழுவிக்கொண்டது நீங்களேதான்.”

“உண்மைதான். உன்னைத் தழுவிக்கொண்டேன். உனக்குப் பெயர் ‘தோல்வி’ என்று நீயே ஒப்புக்கொள்கிறாய்! இல்லையா?”

“சொல்லால் வெல்லலாம் என எண்ணாதீர். நேற்றிரவு ஊடலில் தோற்றுப் போனது நீங்களேதான்! நானல்ல!”

“ஊடலில் தோற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள் தெரியுமா?”