உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 110
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 110 · 110 / 300

“ஆருயிர் நண்பா! அந்தக் கரடி உன் காதில் ஏதோ செய்தி சொல்லிற்றே, அது என்ன செய்தி?”

நல்லான் சிரித்துக்கொண்டே, “கரடி எனக்கு ஒரு குறளைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லிச் சென்றது” என்றான்.

“என் இனிய நண்பா! என்ன குறளப்பா அது?”

நல்லான் மீண்டும் சிரித்துக்கொண்டே,

“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்.”

என்ற குறள்தான் அது!” என்றான்.

“அப்படியா? கரடிக்குக் குறள் கூடத் தெரியுமா? ஆமாம், அதற்கு அந்தக் கரடி, என்ன விளக்கம் சொல்லிற்று?” என்று வினவினான் வல்லான்.

நல்லான் அந்த விளக்கத்தையும் சொன்னான்:

“நமக்கு வருகிற தீமையிலும் ஒரு வகையான நன்மை உண்டு. எப்படியென்றால், அந்தத் தீமைதான் நம்முடைய நண்பர்களின் இயல்புகளை நமக்கு அளந்து காட்டுகிற அளவுகோலாகும்.”

இந்த விளக்கத்தைக் கேட்டு, வல்லான் வெட்கித் தலைகுனிந்தான்.

அதிகாரம் - 80 - நட்பாராய்தல்; பாடல் - 796

முல்லை மலர்க்காட்டில் மெல்லியவளின் மெய் தழுவிக்கிடந்த காதலன் பிரிகிறான். வாலிபத்தின் விருந்தை இடையறாது சுவைக்கும் வாய்ப்பை இருவருமே இழந்து தவிக்கின்றனர். வாணிபம் குறுக்கிடுகிறது. ஆகவே பிரிகிறார்கள். “தலைவனை அணைத்திருக்கும்போது அவன் சிறிது நகர்ந்தாலே மேனியெங்கும் பசலை நிறம் படர்ந்து என்னை வாட்டுமே; அப்படிப்பட்ட என்னைவிட்டு அவர் இத்தனை நாள்

பிரிந்து செல்வது நியாயமா?” என்று கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள் கண்ணாடிக்கு முன்னே நின்றுகொண்டு! அந்தப் பளிங்கியிலே தோன்றும் உருவம் அவளை மேலும் அழகாக்கிறது. ஏனெனில் பசலை படிந்த அவளது உருவமே அது! அதைக் காண்கிறாள். கண்ணீர் முத்துக்கள் உருள்கின்றன. இதழிடை முத்துக்கள் எங்கேயோ ஒளிந்து கொள்கின்றன. பிரிவின் சோகத்தால், காதலன்மீது ஏற்பட்ட கோபத்தோடு படுக்கையிலே படுக்கிறாள்; இல்லை விழுகிறாள்; உடலைப் ‘பொத்’ தென்று போடுகிறாள்.

தூக்கம் அவளைத் தொடமுடியாமல் தவிக்கிறது; இறுதியில் வெல்கிறது; தூங்குகிறாள்.

காதலன் வருகிறான். அவனது கற்பகம் சேர்ந்த மார்பில் அற்புத அழகு முகத்தை ஒட்டுகிறாள். உச்சிமுதல் உள்ளங்கால்வரை முத்த மழையால் நனைக்கிறது! நேரம் போவதே தெரியவில்லை. தொடர்ச்சி கெடாமல் இன்பம்! கேளிக்கை! கீதம்! திடீரென்று விழிக்கிறாள்; அவனோடு சேர்ந்து கதிரவனும் விழிக்கின்றான்; எல்லாம் கனவு. கலக்கத்தோடு வாயிற்புறத்தே வந்து நிற்கிறாள்.

அவளைக் கண்ட ஊர் மக்கள், “அய்யோ பாவம்! காதலன் பிரிந்து விட்டான். அதனால் கலங்கி நிற்கிறாள் இந்தப் பாவை!” என்று பேசிக்கொண்டு போகிறார்கள்.

காதலன்மீது ஊரார் பழி கூறுவதாக அவள் கருதுகிறாள். அவன்மீது பழிகூறத் தன்னைத்தவிர வேறு யாருக்கும் உரிமையில்லை என்பது அவள் எண்ணம். பிரிந்துபோன காதலனைப்பற்றிப் பழி கூறும் ஊராரைப் பழிக்கிறாள். எப்படி?