உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
குறளோவியம்/பகுதி 102
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 102 · 102 / 300

“மாங்கனி! வள்ளுவரே மற்றொரு குறளும் எழுதியிருக்கிறார். நீராக இருந்தாலும் அது நிழலை அடுத்து இருந்தால்தான் இனிமையானது. அதுபோல ஊடலும், அன்பு உள்ளவர்களிடம் கொள்வதுதான் இன்பம் பயக்கும்.

“நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.”

இந்தக் குறளின்படி, உன் கணவன் அன்பெனும் ஒரு பொருளிலா மனிதன் என்று தெளிவாகிறது.”

பின்னர், பூங்குழலியிடம் விடைபெற்றுக் கொண்டு, “ஏதோ வாழ்ந்தால் சரி!” என்ற முடிவுடன், மணாளனைத் தேடி அவனிருக்கும் ஊருக்குப் புறப்பட்டாள் மாங்கனி!

அதிகாரம் - 131 - புலவி; பாடல்கள் - 1306, 1309

துனி = பிணக்கம்; புலவி = ஊடல்.

புலி பசுத்தோலைப் போர்த்துக்கொண்டு மந்தையில் நுழைந்து, மாடுகளை ஏமாற்றி, அவைகளைக் கொன்று தின்றது என்று, இளவயதில் கதைகள் கேட்டிருக்கிறோம். கற்பனை மிகுந்த கதைதான் எனினும் நல்லவனைப்போல நடிக்கிற ஒருவனை நம்பி ஏமாறக்கூடாது என்பதற்காகத் தோன்றிய கதையாகும். “அதோ வருகிறான் பார், பசுத்தோல் போர்த்திய புலி!”

என்றெல்லாம் நாடகங்களிலேகூட உரையாடல்களை அமைப்பதுண்டு.

இப்படி, ஒரு விலங்கின் தோலை மற்றொரு விலங்கு போர்த்திக்கொண்டு ஏமாற்றும்போது, சாதுவான விலங்கு என்று கருதப்படுகிற ஒன்றின் தோலை, பொல்லாத விலங்கு ஒன்று போர்த்துக் கொள்வதுதானே பொருத்தமாக இருக்க முடியும்.

ஆனால், வள்ளுவரின் சிந்தனை வேகம்- கற்பனைப் பெருவெள்ளம் வேறு விதமாக உருவெடுத்து நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்.”

என்ற குறளுக்கொப்ப உழவுத் தொழிலில் ஈடுபட்ட சிறுநிலக் கிழமான் ஒருவன் எழிலார்ந்த சிற்றூர் ஒன்றில் வாழ்ந்தான். அவன் வியர்வையின் விலைவால், பச்சைப் பட்டாடை அணிந்து நின்றாள், அவன் வளர்த்த கழனிப் பெண்ணாள்! ஆம், செழிப்பு மிகுந்த பசும் பயிர்கள் அவனது வயல்களை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன.

அந்தப் பயிரின் வளத்தைக் கண்டதும் நாக்கில் நீர் ஊறிற்று, அவன் வீட்டுப் பசுவுக்கு! எப்படியாவது அந்த வயல்களில் இறங்கி, அந்த இளம் பயிர்களை ஆசைத்தீரச் சாப்பிடவேண்டுமென்று முடிவு கட்டியது. பயிரை மேயும்போது உழவன் பார்த்துவிட்டால் நன்றாக உதை வாங்க வேண்டுமேயென்ற அச்சம் வேறு அதற்கு! என்ன தந்திரம் செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கியது அந்தப் பசு!

பசுவின் தந்திரத்தைக் கண்டு எல்லோரும் வியப்புற்றனர். உழவன் மட்டும் சீற்றங்கொண்டு, அந்தப் பசுவுக்கு நன்றாக அடி கொடுத்து நையப் புடைத்தான்.

“புலி, பயிரைத் தின்னாது” என்று எல்லோரும் எண்ணிக்கொண்டு ஏமாந்து விடுவார்கள். அப்படியே யாராவது பார்த்துவிட்டாலும் புலியின் அருகே வர பயப்படுவார்கள் என்றல்லவா இந்தப் பசு இவ்வளவு பெரிய சூழ்ச்சி செய்திருக்கிறது!” என்றார் அந்த ஊர் முதியவர் ஒருவர். “ஆமாம்! மனத்தை அடக்கமுடியாத சிலபேர், தாங்கள் தவறு செய்யும்போது யாரும் அருகே நெருங்கி வந்து தடுக்க முடியாதபடி தவக்கோலம் புனைவதுபோல, இந்தப் பசு புலித்தோலைப் போர்த்திக்கொண்டு பயிரை மேய்ந்திருக்கிறது!”

என்று விளக்கமளித்தார், இன்னொரு முதியவர்.

கற்பனைக் கதையாக இருந்தாலும், புலித்தோல் போர்த்திய பசுவின் கதை முற்றிலும் புதிய கதையன்றோ? இந்தக் கருத்தை அடக்கிய குறள்தான் இது!

“வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.”