உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
இலக்கிய உரை

குறளோவியம்

பகுதி 10 · 10 / 300

“ஏன் இந்த வீண் வேலை உனக்கும், உன் தலைவிக்கும்?”

“என் தலைவி என்னைக் கூப்பிட்டாள். ‘அடியே! என் நெஞ்சமே! நீ, உன் மீது அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தையும், பிரிவின் வேதனையையும் சொல்லிப் பயன் கிடையாது. அதைவிட எளிதான வேலை, மணலை அள்ளிப் போட்டு ஆழ்கடலைத் தூர்ப்பதாகும்! எனவே அந்த வேலையைச் செய்’ என்றாள். அதைத்தான் இப்போது செய்கிறேன்.”

இந்தப் பதிலைக் கேட்டதும் என் தலை சுற்றியது. அடடா! அந்தத் தலைவியின் துயரம் எத்தகையது? காதலனிடம் தன் வேதனையைச் சொல்லி, அவனைத் தன்பால் அன்பு கொள்ளச் செய்வதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதாம்!

விழித்துக் கொண்டேன்.

கனவு என்பது புரிந்தது.

என் நெஞ்சின் மீது கிடந்த திருக்குறள் சுவடியை உற்று நோக்கினேன். எந்தக் குறள் என்னை இந்தக் கற்பனைக் கனவுக்கு அழைத்துச் சென்றதோ, அந்தக் குறளை மீண்டும் ஒரு முறை படித்தேன்:

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு

அதிகாரம் - 120 - தனிப்படர் மிகுதி; பாடல் - 1200

Large colour illustration above the prose showing bearers carrying a curtained palanquin along a road while two figures observe in the background.

சாலையில் பல்லக்கு ஒன்றைச் சிலர் தூக்கிக்கொண்டு நடந்தனர். பல்லக்கில் ஒருவர் சாய்ந்தவாறு, சாலையின் இருமருங்கிலுமுள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு களித்தவாறு பயணம் நடத்திக்கொண்டிருந்தார். கழுத்து வலியெடுக்கவும் கால் கொப்பளிக்கவுமான நிலையில், பல்லக்குத் தூக்கிகள் தங்கள் பணியினை ஆற்றிக்கொண்டிருந்தனர்.

இரண்டு முதியவர்கள் இந்தக் காட்சியை ஒரு மண்டபத்தில் இருந்தவாறு கண்டனர். அவர்களில் ஒருவர் தமிழ் நூல்களை நிரம்பப் படித்தவர். அவர் சொன்னார்: “பார்த்தீரா? இதுதான் பாவம் செய்த ஜென்மத்திற்கும் புண்ணியம் செய்த ஜென்மத்திற்கும் சரியான எடுத்துக்காட்டாகும்” என்று!

அவருடன் இருந்த முதியவர் “எப்படி? எப்படி?” என்று ஆவலுடன் கேட்டார். தமிழ் படித்த முதியவர் கூறினார் விளக்கமாக:

“திருக்குறளில் வள்ளுவர் இதுபற்றி மிகச் சிறப்பாகச் சித்திரித்துள்ளார். அறத்தினால் ஏற்படும் பயன் என்னவென்று நூல்களைக் கொண்டு ஆராயத் தேவையில்லை. பல்லக்கில் செல்பவனையும் பல்லக்குத் தூக்குபவனையும் பார்த்தாலே அவர்களில் அறஞ்செய்தது யார் என்று புரிந்துவிடும். ஒருவர் செய்த அறத்திற்கு ஏற்ப அவர் பல்லக்கில் ஏறுகிறார். அறம் செய்யாதோர் பல்லக்கைச் சுமக்கிறார்.”

இவ்வாறு- படித்த முதியவர் விளக்கம் கூறிக் கொண்டிருந்தபோது, “என்னே, கொடுமை! என் குறளையே குழிதோண்டிப் புதைக்கிறீர்களே” என ஒரு குரல் கேட்டது. இரு முதியவர்களும் வியப்புடன் திரும்பிப் பார்த்தனர். வள்ளுவர் கண்கலங்கி நின்று கொண்டிருந்தார். முதியவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.

படித்த முதியவர், வள்ளுவரிடம் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு- இனித் தன்னைத் திருத்திக் கொள்வதாகவும் கூறினார்.

“உம்மைத் திருத்திக்கொண்டால் மட்டும் போதாது; உரையையும் திருத்துக” என உரைத்து வள்ளுவர் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றார். அதற்குள் பல்லக்கு, வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டது.