சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 36 · 36 / 50
“நன்றி” என்பதை முகக்குறிப்பால் காட்டிக் கொண்டே, அந்தத் தண்ணீர்ச் சொம்பை வாங்கிக் கை கழுவிக் கொண்டு; வத்தல் குழம்பு சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்கிறோம் -
“எப்படி; வத்தல் குழம்பு?”
“பிரமாதம்! நன்றி!”
இந்த மாதிரி “நன்றி” எனும் சொற்கள் எல்லாம் வெறும் வாய்ச்சொற்களாக வருபவை!
இந்த நன்றிகள் எல்லாம் சொல்லப்படுபவைதான் -
காட்டப்படும் நன்றிதான்;
காலத்துக்கும் நிலைத்து நின்று -
கல்லில் செதுக்கிய எழுத்தாக;
கடற்கோள்களாலும் அழிக்க முடியாததாக அமையும்.
2 - 10 - 2005
★★★
நான் எழுதி, 12 பதிப்புகள் வெளிவந்துள்ள “தொல்காப்பியப் பூங்கா”வில் 93வது மலராக “அன்றே வளர்ந்திருந்த அறிவியல்” எனும் தலைப்பில் வழங்கியுள்ள கருத்துக்களை நினைவூட்டி; பின்னர் இன்றைய “சிந்தனையும் செயலும்” பற்றிய எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
“தொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைகள், இன்றைக்கும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கட்டமைப்பும், ஒருசில; நவீனப் புது உலகத்திற்கும் வழக்கங்களுக்கும் ஒத்துவர இயலாத நிலைப்பாட்டாயினும் ஈராயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த பழந்தமிழர் வரலாற்றுப் பெட்டகம் என்பதை நினைவூட்டும் கருவூலம் என்றெல்லாம் பெருமிதம் கொள்ளும்போது அவற்றுக்கெல்லாம் சிகரமாக மரபியலில் பின்வரும் நூற்பா அமைந்துள்ளதைக் கண்டு வியப்பு மேலிடுகிறது.
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
(மரபியல் - நூற்பா :- 27)
இதன் பொருள் விளக்கம் :-
ஓரறிவுள்ள உயிர் உடம்பினால் அறியக் கூடியது. ஈரறிவுள்ள உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் அறியக் கூடியது. மூவறிவுயிராவது உடம்பினால் - வாயினால் - மூக்கினால் என மூன்றினாலும் அறியக் கூடியது. நாலறிவுயிராவது உடம்பு, வாய், மூக்கு, கண் ஆகியவற்றால் அறியக் கூடியது. ஐயறிவு உயிர் என்பது உடம்பு, வாய், மூக்கு, கண், செவி ஆகியவற்றால் அறியக் கூடியது. இவைகளேயன்னியில் ஆறாவதாக மனத்தினாலும் அறியக் கூடியதே ஆறறிவு எனப்படும்.
இவ்வாறு உயிர்கள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அது மட்டுமன்றி, ஓரறிவு முதல் ஆறு அறிவு வரை பெற்றுள்ள உயிரினங்கள் எவை எவை என்பதையும் பட்டியலிட்டுக் காட்டுகிற பாங்கினை மரபியல் உணர்த்தும்போது எந்த அளவுக்கு மிகப் பழங்காலத்திலேயே அறிவியல் அடிப்படையில் வாழ்க்கை இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது என்ற மலைப்பு ஏற்படத்தான் செய்கிறது.
உலகில் வாழும் எல்லாவுயிர்களையும் அவற்றின் உடலில் அமைந்துள்ள ஐம்பொறிகளையும் உய்த்துணரும் உட்கருவியாகிய மனத்தினையும் கொண்டு அவ்வுயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவராகப் படிப்படியே அறிவினாற் சிறந்து விளங்குந் திறத்தினை நமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே வாழ்ந்த நுண்ணுணர்வாளர்கள் ஆராய்ந்து வெளிப்படுத்தி யுள்ளனர். உயிர்கள் தாம் பெற்றுள்ள மெய், வாய், மூக்கு, கண், செவி எனும் ஐம்பொறிகளின் வாயிலாகவும் அகக்கருவியாகிய மனத்தின் வாயிலாகவும் முறையே ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி எனும் ஐம்புலனறிவுகளையும் உய்த்துணர்வினையும் பெற்று அறிவினால் வளர்ச்சி பெற்றுள்ள திறத்தை நுணித்துணர்ந்து
அவற்றை அறுவகையுயிர்களாகப் பகுத்துரைக்கும் இவ்வுயிர்ப்பாகுபாடு பண்டைத் தமிழர் கண்டுணர்த்திய பொருளிலக்கண மரபாகும்.
“புல்லும், மரனும் ஓரறி வினவே
