பெருமூச்சு
கட்டுரைகள் 5 · 5 / 13
அப்படி ஆதரிக்கப் படுகிறவர் நம் அடிப்படை பிரச்சனைக்காகச் சட்டசபையிலே வாதாடுகிறவராக இருக்கவேண்டும் என்று விரும்பினோம். நாமோ சட்ட சபையில் இல்லை! நம் குரலாவது சட்ட சபையில் கேட்கவேண்டும் என்று ஆசைப்படுவதிலே தவறுமில்லை! அர்த்தமில்லாமலுமில்லை!
சிறையிலேயிருந்து திரும்பி வந்த நம்பியார் சட்ட சபையிலே குன்றத்தூர் கொடுமைபற்றி கேட்டதாகத் தெரியவில்லை! நாரணமங்கலம் அடக்குமுறைபற்றி நாவசைக்க வில்லை! அண்ணாவும் பெரியாரும் சிறைப்பட்டது பற்றிக் கேள்வி கேட்டதாகக் கேள்விப்படவில்லை. அப்படிப் பட்டவர்களை சட்ட சபைக்கு அனுப்பும் போது ஆலோசித்து, உறுதிபெற்று, கையெழுத்து
பெற்று, நேசத்தை வலுப்படுத்தி, ஐக்கியத்தைப் பலப் படுத்தி ஆதரவு தருவது என்பதிலே என்ன தவறு இருக்க முடியும்!
தி. மு. கழகம் என்ன சர்வாதிகார ஸ்தாபனமா? அண்ணாதுரை சொல்லிவிட்டார்; அதுதான் தேவ வாக்கு என்று கூறிட! தி. மு. கழகத்திற்கு ஒரு பொதுக் குழு இருக்கிறது. அந்தப் பொதுக் குழுவிலே அரசியல் அனுபவம் பெற்ற ஆற்றல் நிறைந்த வீரர்கள் இருக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பக்குவம் தெரியாப் பசலை என்ற ரீதியில் உள்ளவர்கள் அல்ல கட்சியின் கட்டுப்பாட்டை வளர்ப்பவர்கள்!
ஏதாவது ஒரு உத்தரவைப் போட்டுவிட்டு, பல மாதங்களுக்குப் பிறகு பேருக்கு ஒரு கமிட்டி போட்டு அந்த உத்தரவுக்கு முத்திரை போடும் முற்போக் கற்ற சர்வாதிகாரமல்ல தி. மு. கழகத்தை ஆட்டிப் படைப்பது! தி. மு. கழகம் ஜனநாயகத் தோட்டம்! அந்தத் தோட்டத்து இலட்சியப் புது மலர்கள், அதிலே பணியாற்றும் இளைஞர்கள்! அவர்கள் வெறும் தேர்தல் விரும்பிகள் அல்ல!
தேர்தலை இடைக்காலப் பிரச்சினையாக எண்ணுபவர்கள்!
"அய்யோ! நம் அடிப்படைத் திட்டமான பண நாயகக் கொள்கையைக் கெடுத்து விட்டார்களே பாபிகள்" என்று அலறுகிறவர்களுக்கு தி. மு. கழகத்தின் தேர்தல் திட்டம் பச்சை அயோக்கியத் தனமாக இருக்கலாம். அந்தப் பச்சை அயோக்கியத்தனம் என்ற பட்டம் பெற்றாலும் கவலையில்லை; கட்டிக் காத்த கண்ணியமான திட்டத்திலிருந்து மாறமாட்டோம் என்று உறுதி கூறிவிட்டது தி. மு. கழகம்!
அந்த உறுதிக்கு இணங்கி, ஒப்பந்த ஏட்டில் கையெழுத்திட்டவர்கள் சுமார், நூற்றியம்பது பேர். அவர்களிலே, மாவட்ட கமிட்டிகள் தகுதி, திறமை பார்த்துப் பொறுக்கி எடுக்கப் பட்டவர்கள் சுமார் எழுபது பேர்! அந்த எழுபது பேரும் இழந்த நம் நாட்டைப் பெறும் பணியிலே நம்மோடு ஒத்துழைக்கப் போகிறவர்கள்! அந்த எழுபது பேரை மட்டும் நம்பி திராவிட நாட்டுப் பிரச்சினையை அவர்களிடம் நாம் ஒப்புவித்து
விடவில்லை. அல்லது நம்மால் முடியாத ஒன்றை அவர்களிடம் கொடுத்து வெற்றி வாங்கித் தரும்படி கூறவில்லை!
"எம் ஒத்துழைப்பு வேண்டுமானால் உம் ஒத்துழைப்பை அளியுங்கள்" என்று கூறுவது எப்படி கோழைத் தனமாகும்? கம்யூனிஸ்டுகளைக் காட்டி, பணக்காரரை மிரட்டி, தேர்தல் வாணிபம் செய்வோர்கள் நம் செயலைப் பழிக்கலாம். பழிப்பவர்கள் சிந்திக்க வேண்டும், காங்கிரசை ஒழிக்க கம்யூனிஸ்டுகளின் தயவை நாடுவதும், சாமியப்பா, சர்மாக்களின் துணையைத் தேடுவதும் எந்தப் பட்டியலிலே இடம் பெறுகிற கோழைத்தனம் என்பதை!
கம்யூனிஸ்டு நண்பர்களிடத்திலே நமக்கு அளவற்ற மதிப்பு உண்டு! அவர்களின் தற்போதைய செயல்களால் மனமொடிந்த நிலையில் கடுமையான சில சொற்கள் வெளிவந்திருக்கலாம். அதை வைத்துக்கொண்டு கம்யூனிஸ்டுகளுக்கும் நமக்கும் பகை மூட்டிடக் கனவு காண்கிறார்கள் பலர்! கம்யூனிஸ்டு நண்பர்களும் கூறியிருக்கிறார்கள், நமது பொதுச் செயலாளரும் கூறியிருக்கிறார்; தேர்தலுக்குப் பிறகாவது உறவு நீடிக்க வழி காணுவோம் என்ற கருத்தமைந்த வார்த்தைகளை!
கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை நாம் பாராட்டியதைப்போல் கம்யூனிஸ்டுகள் கூட நம் தியாகத்தைப் பாராட்டியது கிடையாது! தியாகிகள் எந்தக் கூடாரத்திலே இருந்தாலும் அவர்களை நாம் பாராட்டியிருக்கிறோம். தேசீய இயக்கத்திலே தூக்கு மேடையை முத்தமிட்ட பகவத்சிங்கும், செக்கிழுத்த சிதம்பரமும், தில்லையாடி வள்ளியும், திருப்பூர் குமரனும், நம்மைவிட பெரியார் இராமசாமியால் அதிகம் பாராட்டப்பட் டிருக்கிறார்கள்.
ஆனால் அந்தத் தியாகிகள் வாழ்ந்த காங்கிரஸ் கூடாரத்தைக் கனல் கக்கிடும் வார்த்தைகளால் தாக்கிடப் பெரியார் தவறவில்லை. தியாகிகளைப் பாராட்டினார்! தீய கொள்கைகளை எதிர்த்துப் பேசினார்! தியாகிகள் இருக்கிறார்களே என்பதற்காகத் தித்திப்பு மொழி பேசவில்லை பெரியார்! தீ மொழிகள் வீசியிருக்கிறார்!
கம்யூனிஸ்டுகள் காங்கிரசை ஒழிப்பதை எப்படி பாராட்டுகிறாரோ, அப்படித்தான் காங்கிரசார் வெள்ளையனை விரட்டுகிறார்கள் என்பதை அண்ணா பாராட்டினார்! காங்கிரசை ஒழிப்பதற்காக கம்யூனிஸ்டைப் பாராட்டும் பெரியார், அடிப்படைப் பிரச்சினையான திராவிட நாட்டை மறந்துவிட்டார்!
வெள்ளையனை ஒழித்த காங்கிரசாரைப் பாராட்டிய அண்ணா, திராவிட நாட்டுப் பிரச்சினையை மறந்துவிட வில்லை! இதை நமது எதிர்ப்பாளர்கள், நம் சக்தியைக்கண்டு சங்கடப் படுவோர், நம் வளர்ச்சி கண்டு வயிறு எரிவோரின் வாய்ஜாலத்தில் மயங்கியுள்ள கம்யூனிஸ்டு நண்பர்கள் உணரவேண்டும்.
பொது மக்களும் இதுபோன்ற கபட நாடகப் பேச்சில் கவனத்தைச் செலுத்தாமல் காங்கிரசை ஒழிப்பதைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் திராவிட நாட்டுப் பிரச்சினைக்கு ஆதரவு தருவதாக உறுதி கூறிய அபேட்சகர்களைத் தேர்தலில் ஆதரிக்கும்படியாகக் கேட்டுக் கொள்கிறோம்.
வாழ்க உண்மையான பொதுவுடமை! வாழ்க உண்மையான நேர்மை! வாழ்க புனிதமான பொதுஜன சேவை! வீழ்க வீண் பித்தலாட்டம்!
ஜி. பி. சோமசுந்தரம் வயது சுமார் அறுபது! கே. கே. நீலமேகம் வயது சுமார் ஐம்பது! பொள்ளாச்சி நடராசு வயது சுமார் அறுபது! பெத்தாம் பாளையம் பழனிச்சாமி வயது ஏறக்குறைய நாற்பது! நெடுஞ்செழியன் சுமார் வயது முப்பது! சேலம் சித்தையன் வயது சுமார் நாற்பது! இ. வி. கே. சம்பத் வயது சுமார் இருபத்தேழு. சி. பி. சிற்றரசு வயது சுமார் நாற்பது! என். வி. நடராசன் வயது சுமார் நாற்பது! பார்த்தசாரதி வயது நிச்சயமாக நாற்பத்திரண்டு!
அப்பாதுரையார் வயது சுமார் ஐம்பது! மணிமொழியார் வயது அநேகமாக ஐம்பத்திநாலு! எஸ். வி. லிங்கம் கிழவரே! மூதாட்டி ராமாமிர்தத்தம்மாள் முப்பது வயது! (இரட்டையில்) அரங்கண்ணல் வயது சுமார் இருபத்திரெண்டு! ஈழத்து அடிகள் வயது சுமார் ஐம்பது! என் வயது சரியாக இருபத்தொன்பது!
மேற்கண்ட வரிசையிலே குறிப்பிடப்படும் வயதுகள் ஜாதகக் குறிப்புப்படியோ வருஷம், மாதம், தேதிப்
படியோ கணிக்கப் பட்டவை அல்ல! பார்வையாலும் உத்தேசத்திலும் சிலரை இதற்கு முன்பு கேட்டிருந்த முறையிலும் ஓரளவுக்கு நினைவு வைத்துக் கொண்டு எழுதப்பட்டவையாகும்!
திடீரென்று என்னப்பா வயதுக் கணக்கில் புகுந்து விட்டாய் என்று கேட்கிறீர்களா? குறிப்பிடப் பட்டவர்களில் ஒருவர் இருவரைத் தவிர எல்லோருமே கல்யாணம் ஆன தோழர்கள்; ஆனபடியால் திருமண அப்ளிகேஷன் என்று யாரும் தவறாகக் கருதவேண்டாம். அப்படிப்பட்ட விவாக விண்ணப்பம் என்றால், வயதுகளைக் குறைத்தல்லவா சொல்லியிருப்பேன்!
மேலே குறிப்பிட்டவர்கள் எல்லோருமே சிறுவர்கள் என்று கூறினால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறதல்லவா? ஆனால் நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் தான்!
பெரியார் இராமசாமி அவர்கள் முன்பெல்லாம் அடிக்கடி சொல்லுவார்கள்; "எனக்கு வயதானால் கூட என் உள்ளம் இளைஞன் உள்ளந்தான்" என்று! அதைப்போல இளைஞர் உள்ளங் கொண்டவர்கள் தான் தி.மு.கழகத்திலேயுள்ள, கிழவர் வாலிபர் எல்லோருமே. அதுமட்டுமல்ல; தி. மு. கழகத்தின் சட்ட திட்டமே பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்களைத்
