உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கொலைக்களம்!/கட்டுரைகள் 5
கட்டுரைகள்

கொலைக்களம்!

கட்டுரைகள் 5 · 5 / 6

சழக்கர்கள் உன் இன உணர்ச்சியை வேட்டை யாடுகிறார்களே!

சாய்ந்து போகாதே! நில்! நிமிர்ந்து நில்! எனச் சங்கம் முழங்கிய இளஞ் சிங்கங்களுக்கு இதுதானா சன்மானம்?

இந்தக் கேள்விகளைக் கேட்டு திராவிடத்தைச் சுற்றியுள்ள கடல்கள் கொந்தளிக்கின்றன!

தென்றல் காற்று கூடச் சூடேறி வீசுகிறது........ நிலவின் ஒளிகூட நெருப்பாகிக் கொட்டுகிறது! மூச்சு—பேச்சு—அனைத்தினிலுமே கனல் தெறிக்கிறது!

ஆளவந்தார்-ஆட்சிப் பீடத்திலே அமர்ந்துள்ளோர் உணர்ந்து பார்ப்பரா? ஆரியத்தின் பேச்சை, தூண்டுதலைக் கேட்டு அவசரப்பட்டு விட்டோம்; அடக்கு முறைக் கணைகள் தொடுத்து விட்டோம் என்பதை ஆலோசிப்பரா?

சூது ஏதுமறியாச் சூரர்களின் பணி மனைகளில் சோதனை!

அமைதியை ஆயுதமாகக் கொண்ட அன்புப்படை முகாம்களில் ஆராய்ச்சி!

பகுத்தறிவுத் தொண்டு செய்யும் பலாத்காரமற்ற பகுத்தறிவு வாதிகட்கு வாய்ப்பூட்டு!

உள்ளதை உரைத்திடும் நூல்கள் பறிமுதல்!

நாட்டு நடப்பைக் காட்டும் நல்லறிவு நாடகங்கட்குத் தடை!

தலைவர் ஆணையைத் தலைமேற்கொண்டு, வாளெடுக்கும் கையிருந்தும், துப்பாக்கி பிடிக்கத் துணிவிருந்தும், நினைத்த மாத்திரத்தில் ஆயிரமாயிரம் அணிவகுப்புகளை நிர்மூலமாக்கும் ஆண்மையுள்ள சந்ததியில் பிறந்திருந்தும்....பொறுமை! பொறுமையை ஆபரணமாகக் கொண்டுள்ள தோழர்கள் வீடுகளில் போலீஸ் தர்பார்!

சோதனை ஆராய்ச்சி! நடைபெற வேண்டிய இடங்கள் சூழ்ச்சியறியா திராவிடர் நிலையங்களா? இல்லை!..... இல்லை!!.........

வாய்ப்பூட்டு—பறிமுதல்! தடை—தர்பார் நடத்தப்பட வேண்டிய இடங்கள் இன எழுச்சிக்குப் பாடுபடும் பகுத்தறிவுச் சிங்கங்களிடமா? அல்லவே அல்ல!

அதோ! ஆரியத்தின் உள்ளம்! அந்த அநியாய உள்ளத்தைச் சோதனையிடுங்கள்! ஆராய்ச்சி செய்யுங்கள்!

அங்கே அகப்படும்—அகப்பட்டே தீரும், மக்களை பற்பல வகுப்புகளாகப் பிளக்கும் மதக் கோடரிகள்!

அங்கே கிடைக்கும்—கிடைத்தே தீரும், தீரத் திராவிடரின் மேல் எறியப்படும் வஞ்சக ஈட்டிகள்!

அதற்கெல்லாம் வாய்ப்பூட்டு போடுங்கள்! அவற்றை யெல்லாம் பறிமுதல் செய்யுங்கள்!

அதுமட்டுமா? அங்கே காண்பீர்கள். சமுதாயத்தை மோதவிட்டு....சந்தர்ப்பபேத மேற்படுத்தி வைத்து.......... சந்தோஷ மடைவதற்காகத் தயாரித்து இருக்கும் சதிக் கடிதங்கள்!

அதற்குத் தடை விதியுங்கள்—அங்கே நடந்தால் கூடத் தவறாகாதே—தர்பார்!

ஆட்சியாளரின் கவனம் செல்ல வேண்டிய சதிக் கிடங்கு அது—ஆரியம்—ஆரிய உள்ளம்!

பொச்சரிப்பும் பொறாமையும் நிரம்பியிருக்கும் வெடி மருந்துச் சாலை அது!

போலீசார் புகமுடியாத இடம்!........உருத் தெரியாது, உட்பகை, உற்றார் உறவினரிடையே உண்டாக்கும் தத்துவம் ஓங்கியுள்ள இடம்!

சமயம்—சன்மார்க்கத்தின் பேரால் சாதி வெறி கிளப்பும் இடம்—அங்கே! அங்கே! ஆரியக் கோட்டையில்!

செங்கோலேந்தியவர்களின் சிந்தனை — சீற்றம் செல்லவேண்டிய இடம்!

செந்தமிழைக் காக்க—தமிழரின் தன்மானத்தைப் பாதுகாக்க—பகுத்தறிவு பரவ—பசி—பிணி—பட்டினி—உயர்வு—தாழ்வு இல்லாத ‘திரு இடம்’ அமைக்க—சாதனை! சோதனை நடத்துக, அங்கே! அவசியமாக! ஏன், அவசரமாகவுங்கூட!

சோதனை! வாழ்விலே சோதனை! வெற்றிக்குச் சோதனை! வீரரே மருண்டிட வேண்டாம்—மயங்கவும் வேண்டாம்! திராவிடம் வெல்க!

இந்திய அரசியல் உலகிலே - குறிப்பாக ஆட்சிப் பீடத்திலுள்ளவர் உலவும் வட்டாரங்களிலே, பலம் பொருந்திய ‘மத்திய சர்க்கார்!’ தேவை என்ற குரல் சிலகாலமாகக் கிளம்புகிறது!

“மாகாண உணர்ச்சி, பேதத்தை, பிளவை, வேற்றுமையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக் கொள்கை.”

அந்தக் கொள்கை இந்தியாவில் பரவினால், இந்திய சமுதாயம், பலம் பொருந்திய அமைப்பாக இல்லாமல் சின்னாபின்னமாகச் சிதறிவிட வழிவகை செய்துவிடும்.

ஆகவே, தேச பக்தர்களே! தியாகிகளே! பாரத மாதாவின் புத்திரர்களே! மாகாண உணர்ச்சியை வளர்க்காதீர்கள்! வளர்த்தாலும் தடைப்படுத்துங்கள்!

இந்த விதத்திலே, அரசியல் பண்டிதர், இந்தியாவின் முதல்வர் என்றெல்லாம் போற்றப்படும், பண்டித ஜவஹர்லால் அவர்கள் கோவையிலே, டில்லியிலே பேசினார்!

அன்பர் ஆச்சாரியாரோ, அந்த உணர்ச்சி இப்போது வேண்டாம் என்று இதோபதேசம் புரிகிறார்.

ஆகஸ்டில் சுதந்திர சூரியன் உதித்தான்! ஆண்டுகளும் அநேகம் ஆகிவிடவில்லை! அதற்குள் இந்தப் பிரிவினை மனப்பான்மை கூடாதுதான் என்று விரிந்த மனப்பான்மையினர் (!) விவேக (!) சிந்தாமணி படிக்கின்றனர்!

பொருளாதார நிலை சரிந்துவிடும்போலிருக்கிறது. எங்குப் பார்த்தாலும், பசி! பட்டினி! பஞ்சம் என்ற கூக்குரலே! வேதனை விம்மல்களே!

எல்லாருக்கும் உணவு, உடை வேண்டுமானால், மாகாண உணர்ச்சியை விட்டு, பலமிக்க மத்ய சர்க்காருக்கு பாடுபடுங்கள் என்பதாகச் ‘சமத்துவத் தமிழன், கெட்டிக்கார நிதிமந்திரி’ என்றெல்லாம் வசிஷ்டர் வாயால் ரிஷி(!) பட்டம் பெற்ற சண்முகம் செட்டியார் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்!

ஏன் இவ்வளவு பேரும் அதிக அக்கரை கொண்டு மத்ய சர்க்காரைக் காப்பாற்றக் கச்சையை வரிந்து கட்டுகின்றனர்?

என்ன காரணத்தால், பாரத மாதாவைக் கிழக்கிலும், மேற்கிலும் பறிகொடுத்த பிறகும், பாரதமாதா சேவை செய்கின்றனர்?

சுதந்திரம் வந்தது! வந்த சுதந்திரம் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்படுகிறது?

முதற் பதிப்பு-52 — முன்னேற்றப் பண்ணை (அச்சுச் சான்று ‘52’ மட்டுமே)