தொகுதி 53 · கடிதம் 4002
ஒவ்வொருவரும் “ஸ்டாலினைப்” போல உழைத்திடுவீர்!
2016-04-10
உடன்பிறப்பே,
2016 மே மாதம், 16ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, துண்டறிக்கை விநியோகிக்கும் பணியை, கழகத்தின் பொருளாளர், தம்பி மு.க. ஸ்டாலின், சென்னை - ராதாகிருஷ்ண நகரில் 8-4-2016 அன்று தொடங்கி வைத்திருக்கிறார். இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்திடும்விதமாகத் துண்டறிக்கை விநியோகம் தொடங்கப்பட்டிருக்கிறது. “முடங்கிய அரசு - மூழ்கிய தமிழகம்” எனும் தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அச்சிடப்பட்டிருக்கும் இந்தத் துண்டறிக்கை - “திவாலான தமிழகம், தத்தளித்த தமிழகம், வேலையில்லாத் திண்டாட்டம், தலைவிரித்தாடும் ஊழல், தள்ளாடும் தமிழகம், மூச்சு முட்டும் விலைவாசி உயர்வு, சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு, விரக்தியின் விளிம்பில் விவசாயிகள், பஞ்சராகிப் போன அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள், 110வது விதியின் கீழ் வெத்துவேட்டு அறிவிப்புகள் - என்ற துணைத் தலைப்புகளில் மிகவும் சுருக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்கமளித்து, “முடியட்டும் அ.தி.மு.க. ஆட்சி! விடியட்டும் தி.மு.க. ஆட்சி” என்ற முத்தாய்ப்பான முழக்கத்துடன் முடிவடைகிறது. கழகத்தின் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் உடன்பிறப்புகளும் இந்தத் துண்டறிக்கையினை, தெருமுனைப் பிரச்சாரம், திண்ணைப் பிரச்சாரம் போன்ற வழக்கமான நமது பிரச்சார முறைகளின் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று வழங்கி, வாக்காளர்களைத் தனித்தனியாகச் சந்தித்து விளக்கமளித்து, சர்வாதிகார இருளை அகற்றிடவும், ஜனநாயக
ஒளி விளக்கை ஏற்றிடவும், தேவையான அடிப்படைப் பணியை ஆர்வத்தோடு ஆற்றிட வேண்டுமென்று விரும்புகிறேன்.
நமது கழகத்தின்மீது திட்டமிட்டு, இட்டுக்கட்டிய பொய்களையும், வறட்டு வதந்திகளையும் பரப்பி வரும் சில ஊடகத்தினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் பிரச்சார முதுகெலும்பை உடைத்தெறியும் வலிமை கழகத்திற்கு
இன்று நேற்று அல்ல; என்றைக்கும் உண்டு என்பதும்; எந்தவித சதியையும் அடியோடு தகர்த்துத் தவிடு பொடியாக்கும் சாதுர்யம் நமது தோழர்களுக்கு நிரம்ப உண்டு என்பதும் வரலாற்றின் சாட்சியங்களுக்குத் தெரியும்.
ஐந்தாண்டு காலம்தான் எனினும், அளவற்ற அவலங்களையும், எல்லையற்ற துன்பங்களையும், இரக்கம் சிறிதுமற்ற அரக்க குணத்தோடு மக்கள் மீது சுமத்திய அ.தி.மு.க. அரசினை அகற்றியே தீர வேண்டுமென்ற தீர்மானத்தோடும், திடச் சிந்தனையோடும் எல்லா நிலைகளிலும் உள்ள கழக நிர்வாகிகள், கழகச் சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட பல இலட்சம் தோழர்கள் விறுவிறுப்பாக, விவேகத்துடன் இடையறாப் பணியாற்றிட எப்போதோ தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தி எனது செவிகளில் பாய்ந்திடும் தேனாகும். “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?” என முழங்கி, உடன்பிறப்புகள் அனைவரும் களத்தில் நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து எனது நெஞ்சம் நிறைகிறது; நினைவு மணக்கிறது!
ஆணவமும், ஆதிக்க மனப்பான்மையும் மிகுந்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியினர், தங்களுக்கு எதிரான வாக்குகள் ஒருமுகப்படுத்தப்படாமல் சிதறிவிட வேண்டுமென்ற உள்நோக்கத்துடன், பலமுனைக் கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், அதற்கு உளவுத் துறையும், காவல் துறையில் சிலரும் எவ்வளவு தூரம் உறுதுணை புரிந்தாலும், கழகத் தோழர்கள் கருத்தொருமித்துக் களம் இறங்கிவிட்டால் எதிரிகளின் முயற்சி முனைகூட வெளியேவராமல் முறி அடிக்கப்படும் என்பதை முழுதும் அறிந்திருப்பவன் நான். நமது கழகத்தின் மீது திட்டமிட்டு, இட்டுக்கட்டிய பொய்களையும், வறட்டு வதந்திகளையும் பரப்பி வரும் சில ஊடகத்தினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின்
பிரச்சார முதுகெலும்பை உடைத்தெறியும் வலிமை கழகத்திற்கு இன்று நேற்று அல்ல; என்றைக்கும் உண்டு என்பதும்; எந்தவித சதியையும் அடியோடு தகர்த்துத் தவிடுபொடியாக்கும் சாதுர்யம் நமது தோழர்களுக்கு நிரம்ப உண்டு என்பதும் வரலாற்றின் சாட்சியங்களுக்குத் தெரியும்.
தி.மு. கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஆதிக்க சக்திகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தி.மு.க. இதோ படுத்துவிட்டது, அதோ அழிந்து விட்டது என்று வாய்ச்சவடால் காட்டி வருகின்றன. பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே ஒரு சிலர், மன வேறுபாடு காரணமாகக் கழகத்தை விட்டு வெளியேறிய போது, “முடிந்தது கழகம்” என முனகினர் சிலர். அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னர், கழகத்தைத் தலைமையேற்று நடத்திச் செல்வதில், ஏற்பட்ட கருத்து மோதல் கண்டு, கழகம் “கரைந்து போய் விடுமென்று” கணித்தனர் சிலர். எம்.ஜி.ஆர். வெளியேறிய போது, “கழகம் கலகலத்துப் போகும்” என்று கனவு கண்டனர் சிலர். கழக ஆட்சி, முதல் முறையாகக் கலைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கழக முன்னணியினர் “மிசா” சட்டத்தின்கீழ்க் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்ட போது, “அடக்குமுறையில் கழகம் அடங்கிப்போய்விடும்” என்று எதிர்பார்த்தனர் சிலர். கழகம் தொடர்ந்து சட்டப் பேரவைக்கான மூன்று தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததும், “இனி தி.மு.க. தோல்வியில் துவண்டு படுத்து விடும்” என்றனர் சிலர். மீண்டும் கழகம் கம்பீரமாக எழுந்து நின்று, வென்று, ஆட்சி நடத்தி வந்த போது இரண்டாவது முறையாகக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட போதும், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோதும், பிறகு நடந்த தேர்தலில் கழகம் பெருந்தோல்வி அடைந்தபோதும், “கழகம் இனி அவ்வளவுதான்” என்று ஆசையோடு அறிவித்தனர் சிலர். இப்படிக் கழகம் கலகலத்துப் போய்விட்டதென்று கடந்த ஐம்பதாண்டுகளாகவே வெளியிடப்பட்ட ஆரூடங்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டுத்தான், இன்றைக்குக் கழகம் அகிலமே கண்டு அதிசயிக்கும் அளவுக்கு இமயமென உயர்ந்து நிற்கிறது.
ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் விழுந்துள்ள கொலைகள், நடந்துள்ள கொள்ளைகள், சீரழிந்து நிற்கும் சட்டம் ஒழுங்கு, இளைஞர்களை வாட்டி வதைக்கும்
வேலையில்லாத் திண்டாட்டம், மதுக்கடைகளால் தாய்மார்கள் படும் இன்னல்கள், தங்களுக்குரிய சலுகைகள் கிடைக்காமல் நியாயம் கேட்டுப் போராடும் அரசு அலுவலர், சத்துணவுப் பணியாளர், மாற்றுத் திறனாளிகள், அப்படிப் போராடுவோருக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் காவல் துறையினரின் காட்டாட்சி தர்பார், அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அப்பாவி மக்கள் மீது ஏற்றியிருக்கும் பேருந்துக் கட்டணம், மின் கட்டண உயர்வு, பால் விலையை லிட்டருக்குப் பதினாறு ரூபாய் ஏற்றிய கொடுமை, விண்ணை முட்டி நிற்கும் விலைவாசி, வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் விவசாயிகள் - இப்படி அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சிதைத்துச் சின்னாபின்னப்படுத்திய அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களைப் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச்சென்று எதிரொலித்திடச்
செய்வதன் அவசியத்தை நீ உணர்வாய்!
பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த காலத்தில், கழகத்தை வளர்த்தெடுக்க ஊன் உறக்கமின்றிக் காலை முதல் நள்ளிரவுவரை பட்டிதொட்டியெங்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டும், கழக உடன்பிறப்புகளைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடி ஊக்குவித்தும் இடையறாமல் நான் ஆற்றி வந்த பணியை இப்போது நினைவுகூர்ந்திடும்
வகையில் அமைந்திருக்கிறது தம்பி மு.க. ஸ்டாலின், ஓய்வின்றி ஓடியாடி உழைத்துக் கொண்டிருப்பது!
தம்பி ஸ்டாலின் ஒருவர் மட்டும் உழைத்தால் போதாது; நீங்கள் ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைப்பீர்! தமிழ் மக்களுக்காக உழைப்பீர்! நல்ல நம்பிக்கையோடு உழைப்பீர்! வெற்றி நமதே!
உடன்பிறப்பே, உன் பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும்? மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? ஆனாலும் சில தகவல்களை மட்டும் உனக்குக் கோடிட்டுக் காட்ட
விரும்புகிறேன்.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 9,948 படுகொலைகளும், ஒரு
இலட்சம் கொள்ளைகளும், திருட்டுகளும் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் தினமும் 7 கொலைகளும், 70 கொள்ளைகளும் நடக்கின்றன. கொலையோ, கொள்ளையோ நடக்காத நாளே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நிலைமை முற்றிப்போய் விட்டது. பெண்களுக்கெதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டன. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,335 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். பெண்களுக்கெதிராக நடந்திருக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மட்டும் இருபதாயிரத்திற்கும் அதிகம்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் பாலியல் வன்முறை அதிகமாக நடைபெறும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் திரு புனியா குற்றஞ்சாட்டியிருக்கிறார். 2011 முதல் 2015 ஏப்ரல் மாதம்வரை ஆதி திராவிடர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறையில் 213 கொலைகள் நடைபெற்றுள்ளன; 192 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அதே கால கட்டத்தில் 118 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 6,014 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
“பீரோ ஆப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவலப் மெண்ட்” வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவிலேயே அதிகமான போராட்டங்கள் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளில் 21,232 போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது. சமூக அமைதியின்மையின் வெளிப்பாடான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாகத் திகழ்வது மிகவும் மோசமான அறிகுறி அல்லவா?
டெல்டா மாவட்டங்களில் இரு போகச்சாகுபடி என்பது இப்போது எட்டாக் கனியாகி விட்டது. விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரம் முறையாகக் காப்பாற்றப்படவில்லை. தமிழகத்தில் 2,123 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, தமிழகத்தின் கடன் சுமை 2011-2012இல் 1,03,999 கோடி ரூபாய் என்று தொடங்கி,
2015-2016இல் 2,11,482 கோடி ரூபாய் என்ற அளவுக்கு அதிகமாகி இருக்கிறது. தமிழகத்தில் தனி நபர் பட்டிருக்கும் கடனைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. மேற்கு வங்கம், குஜராத், மராட்டியம் என எல்லா மாநிலங்களையும்விடத் தமிழகத்தில்தான் தனி நபர் கடன் கிராமங்களில் 45,803 ரூபாயாகவும், நகரங்களில் 1,16,404 ரூபாயாகவும், மிக அதிகமாக இருக்கிறது என்று “நேஷனல் சாம்பிள் சர்வே” அலுவலகம் புள்ளி விவரம் தந்திருக்கிறது.
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப்பின் இதுவரை, புதிய மின்சார உற்பத்திக்கென்று, தனியே திட்டம் தீட்டி, “டெண்டர்” கோரி, பணிகளை ஒப்படைத்து நிறைவேற்றியோ, ஒரு மெகாவாட் மின்சாரம்கூட உற்பத்தி செய்யவோ இல்லை.
2011 பொதுத் தேர்தலின் போது அ.தி.மு.க.வினர் கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்படவில்லை.
2011 முதல் 2016 வரை ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110வது விதியின்கீழ்ப் படித்த 187 அறிக்கைகளிலே கூறப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு மட்டும் 1,72,196.14 கோடி ரூபாய்.
தமிழக அரசின் வருவாய் வரவுகள் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு என்று பார்த்தால் சராசரியாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். ஓராண்டு அரசின் வருவாய் வரவுகளுக்கும் அதிகமான தொகை செலவாகும் திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா பேரவையில் 110வது விதியின்கீழ் வெளியிட்டிருக்கிறார். ஆனால் 110வது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 15 சதவிகிதம்கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டும் விபரங்களின்படி, இந்தியாவில் உள்ள 21 பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு ஒட்டுமொத்த வளர்ச்சியில் இருபதாவது இடத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளில் பதினேழாவது இடத்தையும், கல்வித் துறையில் பதிமூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது என்பது தமிழக வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் தளர்ச்சியைத்தானே சுட்டிக் காட்டுகிறது.
உடன்பிறப்பே, இதைப் போன்ற தகவல்களைத் தொகுத்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு தகவலையும், ஒவ்வொரு நாளிலும் சந்திப்போரிடம் எல்லாம் எடுத்து விளக்கிடுக; திரும்பத்
திரும்ப விளக்கிடுக! அப்படிச் செய்யும்போது, சர்வாதிகார எதிர்ப்பு சாகரமாகப் பெருகிவிடும்! ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு, திண்ணைக்குத் திண்ணை தினந்தோறும் செல்! மக்களுடன் திண்ணையில் அமர்ந்து அவர்கள் தரும் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பிரச்சாரம் செய்!
8-4-2016 அன்று தம்பி மு.க. ஸ்டாலின் சென்னையில் தலைமையேற்று முன்னெடுத்திருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, வாக்காளர் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் துண்டறிக்கையினை விநியோகம் செய்து, அ.தி.மு.க. ஆட்சியின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத கொடூர மனப்பான்மையை விளக்கி, அ.தி.மு.க. ஆட்சி மடியவும், கழக ஆட்சி மீண்டும் மலரவும் உறுதி மேற்கொள்வீர்!
கழகப் பொருளாளர், தம்பி ஸ்டாலின் ஏற்கனவே “நமக்கு நாமே” என்று திட்டமிட்டு, தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்திருக்கிறார். அந்த “நமக்கு நாமே” பயணத்தைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் நகல் எடுத்து, தங்கள் பகுதியில், நாள் - நேரம் குறிப்பிட்டு அறிவித்துவிட்டு உடனடியாகத் துவங்க வேண்டுமென்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
8-4-2016 அன்று தம்பி மு.க. ஸ்டாலின் சென்னையில் தலைமையேற்று முன்னெடுத்திருக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, வாக்காளர் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் துண்டறிக்கையினை விநியோகம் செய்து, அ.தி.மு.க. ஆட்சியின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத கொடூர மனப்பான்மையை விளக்கி, அ.தி.மு.க. ஆட்சி மடியவும், கழக ஆட்சி மீண்டும் மலரவும் உறுதி மேற்கொள்வீர்! பேரறிஞர் அண்ணா அவர்கள் கழகத்தை வழிநடத்திக் கொண்டிருந்த காலத்தில், கழகத்தை வளர்த்தெடுக்க ஊன் உறக்கமின்றிக் காலை முதல் நள்ளிரவு வரை பட்டிதொட்டியெங்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டும், கழக உடன்பிறப்புகளைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடி ஊக்குவித்தும் இடையறாமல் நான் ஆற்றி வந்த பணியை
இப்போது நினைவுகூர்ந்திடும் வகையில் அமைந்திருக்கிறது தம்பி
மு.க. ஸ்டாலின், ஓய்வின்றி ஓடியாடி உழைத்துக் கொண்டிருப்பது!
தம்பி ஸ்டாலின் ஒருவர் மட்டும் உழைத்தால் போதாது; நீங்கள்
ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைப்பீர்! தமிழ்
மக்களுக்காக உழைப்பீர்! நல்ல நம்பிக்கையோடு உழைப்பீர்! வெற்றி நமதே!
அன்புள்ள,
மு.க.
10.4.2016
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗